தென்னாசியாவில் நேரடியான தலையீடுகளை மேற்கோள்ளத் தயாராகின்றதா அமெரிக்கா?

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிலும், அமைதிப் பேச்சுக்களிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கி தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் வல்லமையை இந்தியா இழந்துள்ளதைத் தொடர்ந்து, தென் ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆளுமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா நேரடியாகத் தனது கையில் எடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் ஆரம்பம் வன்னியில் நடைபெற்ற போர் கடந்த வருடம் மே மாதம் நிறைவுபெற்றதும் ஆரம்பமாகிவிட்டது. அதுவரை ஸ்ரீலங்காவுக்கான தூதுவராகப் பணியாற்றிய றொபேட் ஓ பிளேக் உடனடியாக இடமாற்றப்பட்டு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பில் மாற்றமடைந்துவரும் பூகோள அரசியலில் இந்தப் பதவி காத்திரமான பங்கை வகிக்க வல்லது. அது மட்டுமல்லாது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆளுமையை பேணுவதற்காக 60 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடமும் தனது செயற்பாடுகளை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் இந்தக் கட்டளைப் பீடத்தை சேர்ந்த பேர்ள் ஹாபர் தரையிறங்கு கலம் திருமலை துறைமுகத்திற்கு வந்து சென்ற நிலையில், அடுத்த வாரம் பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தை சேர்ந்த 40 படை அதிகாரிகளைக் கொண்ட குழு ஸ்ரீலங்கா வரவுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. பசுபிக் ஏஞ்சல் 2010 மனிதாபிமான நடவடிக்கை என இதற்கு பெயரிடப்பட்டி ருந்தாலும் அமெரிக்காவின் ஆளுமையை தென் ஆசியாவில் அதிகப்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் படைக் கட்டமைப்பில் பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடம் மிக முக்கியமானது.

அது ஏறத்தாழ 325,000 படையினரை (அமெரிக்க படை பலத்தில் இது 20 விகிதம்) கொண்டதுடன், முதன்மையான 5 விமானம் தாங்கி கப்பல்களையும் கொண்டுள்ளது.இந்தக் கட்டளை மையத்தின் கீழ் நான்கு படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் கடற்படை 5 விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளதுடன், 180 கப்பல்களையும், கப்பல்களில் தரித்து நிற்கும் 1,500 தாக்குதல் விமானங்களையும், 100,000 கடற்படையினரையும் கொண்டது. இராணுவத்தைப் பொறுத்தவரையில் 60,000 இலகு காலாட் படையினர் அங்கு நிறுத்தப்பட்டு ள்ளபோதும், அவர்களில் வான்நகர்வு படையினரே அதிகம். மேலும் 85,000 ஈரு டகப்படையினரும் (அமெரிக்கவின் ஈருடக படைக் கட்டமைப்பில் இது 65 விகிதம்), 1200 சிறப்பு படையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 400 தாக்குதல் விமானங்களுடன், 40,000 வான்படையினரும், 27,000 கரையோர காவல் படையினரும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 40,000 பேரும் பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தில் உள்ளடங்கியுள்ளனர். அதாவது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை பீடம் என்பது உலக நாடுகளுடன் தனியாகப் போர் புரியும் வல்லமையையும் அதற்கேற்ற ஆளணிகள் மற்றும் தளபாடங்களையும் கொண்டுள்ளதை மேற்கூறப்பட்ட தகவல்களில் இருந்து நாம் அறிந்துகொள்ளமுடியும். அமெரிக்க அரசைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தை வடிவமைத்து பேணிவருவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

அதாவது இந்தக் கட்டளை பீடத்தின் ஆளுமைக்குள் பூமிப்பந்தின் அரைப் பங்கு நிலம் உள்ளதுடன், 3.4 பில்லியன் மக்களும் வாழ்கின்றனர். உலகில் அதிக எண்ணிக்கையான இராணுவங்களை கொண்டுள்ள நாடுகளும் இந்த பீடத்தின் கட்டமைப்புக்குள் தான் அடங்குகின்றன. ஹவாய்த் தீவைத் தலைமையகமாகக் கொண்ட பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட மிகவும் சிக்கலான பூகோள, கலாசார மற்றும் இன விழுமியங்களை உடைய 36 நாடுகளை கொண்ட இந்தப் பிரதேசத்தை அமெரிக்கா நான்கு வலயங்களாகப் பிரித்து கண்காணித்து வருகின்றது. வட கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, தென் ஆசியா, ஓசெனிகா என அவை பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு பிராந்தியங்களிலும் தென்ஆசியா பிராந்தியம் தற்போது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றம் பெற்றுள்ளது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, சீனாவின் படை பல அதிகரிப்புக்கள் என்பன அதற்குப் பிரதானமான காரணங்களாகும். ஸ்ரீலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுக்கள் வரை இந்தியாவுடன் மேற்கொள்ளும் ஒத்துழைப்புக்கள் மூலம் தென் ஆசியா பிராந்தியத்தில் தனது ஆளுமையைத் தக்கவைக்கலாம் என அமெரிக்கா நம்பியது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இன் கொள்கைகளும் இந்தியாவை இந்த பிராந்தியத்தில் முதன்மைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது இந்தியா அதனை கையாண்ட முறை, வன்னியில் நேரிடையாக ஒரு தரையிறக்கத்தை மேற்கொள்ள முயன்ற பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தை சேர்ந்த ஈரூடகப்படை யினரை தடுத்து நிறுத்திய இந்தியாவின் முயற்சிகள் என்பன அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவதானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிகழ்வுகளுடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் அதிக மாற்றங்களை அவதானிக்க முடிந்துள்ளது. றிச்சர்ட் பௌச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு றொபேட் ஓ பிளேக் அதில் அமர்த்தப்பட்ட துடன், பசுபிக் பிராந்திய கட்டளை பீடமும் தனது செயற்திறனை அதிகரித்துக் கொண்டது.அண்மையில் கொரிய வளைகுடாவின் கிழக்கு கடற்பகுதியில் நடைபெற்ற அமெரிக்க தென்கொரிய கடற்படை ஒத்திகையை சீனாவும் வடகொரியாவும் கடுமையாக எதிர்த்தபோதும், பசுபிக் கட்டளை பீடம் அதனை கடும்போக்குடன் கையாண்டு கொண்டது. சீனாவுக்கு அண்மையான கடற்பகுதி என்பதால் சீனாவும், தென்கொரியா தனது எதிரி என்பதால் வடகொரியாவும் அதனை எதிர்த்திருந்தன.

இந்தக் கடல் ஒத்திகை நடத்தப்பட்டால் அதனை தன் மீதான போராகவே வடகொரியா பார்க்கும் எனவும், பதில் தாக்குதலும் நடத்தப்படும் எனவும் வடகொரியா எச்சரித்திருந்தது. வடகொரியாவின் இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து போர் ஒத்திகையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அமெரிக்க கடற்படையின் மிகவும் சக்தி வாய்ந்த கப்பலிகளில் ஒன்றான ஜோர்ஜ் வோஷிங்டன் பசுபிக் கட்டளை பீடத்தில் இருந்து இந்த கடல் ஒத்திகையில் இணைந்து கொண்டது. 70 அதி நவீன போர் விமானங்களுடன் வந்த வோஷிங்டன் வடகொரியாவின் வாயை மூடிவிட்டது. முன்னரை போலல்லாது ஆசிய பிராந்தியத்தில் விட்டுக்கொடுப் புக்களை மேற்கொள்ள அமெரிக்கா தற்போது விரும்புவதில்லை.

விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபோது ஸ்ரீலங்காவின் மூன்றில் இரண்டு கடற்பகுதிகளை அமெரிக்கா சுலபமாக தனது வசப்படுத்தும் நிலையில் இருந்ததாகவும், அது தவறிப்போனது அமெரிக்காவுக்கு பலத்த ஏமாற்றம் எனவும் ஐரோப்பாவைச் சேர்ந்த படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ஏமாற்றங்களைக் கருத்தில் எடுத்துள்ள அமெரிக்கா, தனது வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் போர் உத்திகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ் தான் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த அது முற்பட்டு வருகின்றது.விடுதலைப்புலிகள் விடயத்தில் இந்தியா கையாண்ட உத்திகளை விட, ஆப்கானிஸ் தான் விடயத்தில் பாகிஸ்தான் கடைப்பிடித்து வரும் உத்திகள் திறமை வாய்ந்தனவாக அமெரிக்கா கருதுகின்றது.

மேலும் தென் ஆசிய பிராந்திய நெருக்கடிகளை நேரடியாக கையாண்டு, அதன் மூலம் தனது ஆளு மையை அங்கு நேரிடையாக செலுத்தவும் அமெரிக்க முயன்று வருகின்றது.மாலைதீவு போன்ற சிறிய நாடுகளின் விவகாரத்தை இந்தியா நேரிடையாகக் கையாள்வதை முன்னர் அனுமதித்து வந்த அமெரிக்கா அண்மையில் அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளில் நேரிடையாக தலையிட்டிருந்தது ஒரு முக்கிய மாற்றம் எனக் கருதப்படுகின்றது. மாலைதீவு ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் துதுவர் அதனைக் கையாண்டிருந்தார். அமெரிக்காவின் இந்த உத்தி மாற்றங்களை இந்தியாவும் உணர ஆரம்பித்துள்ளது. அதனால் தான் பர்மாவின் இராணுவ ஆட்சியாளரை அது அரவணைத்து கொண்டுள்ளது.

எல்லா அண்டைய நாடுகளிலும் பேரம் பேசும் வல்லமையை இந்தியா இழந்துள்ளதாகவும், இது இந்தியாவுக்குக் கிடைத்த துரதிர்ஷ்டம் எனவும் இந்திய ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். ஆனால் ஆப்கான் விடயத்தில் பாகிஸ்தான் தனது பேரம்பேசும் வல்லமையைத் தக்கவைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.ஸ்ரீலங்காவில் பேரம்பேசும் அழுத்தத்தை இழந்துள்ள இந்தியா பர்மாவின் மூலம் அதனை தக்கவைக்குமா என்பது கேள்விக்குறியானது. ஆனால் இந்தியாவின் அரவணைப்பின் மூலம் பர்மா தனது கறைகளைக் கழுவிவிட முடியும்.

இருந்தபோதும், தென்ஆசிய பிராந்தியத் தில் இந்தியாவை ஓரம்கட்டி அமெரிக்கா நேரிடையாக நுழைந்து கொள்வது அந்த பிராந்தியத்தின் உறுதித் தன்மையையும், மனித உரிமைகளையும் மேம்படுத்த உதவும் என்றே கருதப்படுகின்றது. மேலும் பசுபிக் பிராந்திய கட்டளைப் பீடத்தின் இந்த நகர்வைத் தடுக்கும் படை வல்லமை அந்தக் கட்டமைப்பின் நடவ டிக்கை எல்லை பிராந்தியத்தின் கீழ் உள்ள டக்கப்படும் 36 நாடுகளிலும் இல்லை என்பதே உண்மை.

வேல்ஸில் இருந்து அருஷ்

நன்றி:வீரகேசரி

Comments