ஈழ மாவீரன் குட்டிமணியின் கண்கள் சிங்களக் காடையர்களால் தோண்டப்படுகின்றன... கண்ணைக் கசக்கிக் கொண்டு கொஞ்சம் நடந்தால், ஆலிவ் இலையை கொத்திக் கொண்டு பறக்க முற்படும் அமைதிப் புறாவின் சிறகு முறிந்து ரத்தம் கொட்டுகிறது.
அதையும் தாண்டினால், ‘எனக்காக என்ன செய்து கிழித்துவிட்டாயடா நீ?’ என பார்வையாளனின் மனசாட்சியைப் பிடித்து உலுக்குகிறான் அன்னையின் தோளில் சாய்ந்தபடியே ரத்தம் தோய்ந்து நம்மைப் பார்க்கும் ஈழச் சிறுவன்.
இன்னும் சில அடிகள் நடக்கையிலே... இலங்கைத் தீவு என்னும் முட்டைக்குள்ளிருந்து போராட்ட அடைகாத்து ஈழக் குஞ்சு அல்ல ஈழக் குட்டி வெளியே வருகிறது. டார்வினின் பரிணாம விதிகளையும் புரட்டிப் போடவல்லவர்கள் நாங்கள் என்ற கர்வ விதை நம்முள் விதைக்கப்படுகிறது.
இவையெல்லாம் ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக் கண்காட்சியில் கண்டவை.
நெல்லையில் நடந்த இந்த நெருப்புக் கண்காட்சியில் தமிழீழத்துக்கான, போராட்டத்துக்கு தனது ஓவியங்களை ஆயுதங்களாக முன்வைத்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி.
“என் ஓவிய மையெல்லாம் ஈழத்தின் ரத்தம்தான். ரத்தம் தோய்ந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சந்தித்த இழப்புகள் கொஞ்சமல்ல.
எல்லாவற்றையும் விட இந்த நூற்றாண்டின் மனித பேரவலம் தமிழீழத்தில் நடந்திருக்கிறது. பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வ தேசத்தினால் முற்று முழுதாகக் கைவிடப்பட்ட ஓர் இனமாகவும் ஈழத்தமிழினம் போய்விட்டது என்பது சோகத்திலும் சோகம். வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப்போனது ஈழத்தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வைத் தொலைத்து நிற்கிறது.
ஆனால், மீண்டும் எழுந்து போராட வேண்டிய கடமை தமிழனத்திற்கு உள்ளது. எந்தப் போராட்டங்களிலிருந்தும் என்னால் விலகி நிற்க முடியாது. அது என்னால் இயலாது. அவ்வாறு ஒரு மனிதனாக ஈழப்போராட்டத்தைக் கடந்த 27 ஆண்டுகளாக உள்வாங்கியவைகளை வெளிப்படுத்தியிருக்கிறேன். எனது வேண்டுகோள் ஈழ விடுதலைப் போரை உணர்ந்து கொள்வதற்கு ஊடகங்கள் முன்வர வேண்டும் என்பதுதான்” என்றார் புகழேந்தி.
Comments