இலங்கையின் 18 ஆம் திருத்தச் சட்டம்: மகிந்தா ஆசியாவின் கிட்லராக வர்ணிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை


‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ அண்மைக்கால இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி மகிந்த கொம்பனி தெய்வங்களே இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழருக்கெதிரான யுத்த வெற்றி, அதனைத்தொடர்ந்து ஜனாதித் தேர்தல் வெற்றி ஆகிய இரு பெரு வெற்றிகளைத் தொடர்ந்து தற்பொழுது 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கான வெற்றியானது சிங்களத்திற்கு மேலும் மமதையை உண்டாக்கியிருக்கலாம்.

18 ஆவது திருத்தமென்பது ஓரளவு ஜனநாயக வரைமுறைகளை உட்புகுத்தியிருப்பது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஜனாதிபதித் தெரிவானது முழுக்க முழுக்க சிங்கள மக்களின் கைகளிலே இருப்பதால் சிங்கள மக்களுக்கு இது ஜனநாயக செயலாக தோன்றலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது முழுக்க முழுக்க பாதகமாக அமையப்போகிறது.

இலங்கைத் தேசத்து மக்கள் முற்றாக மறந்த செய்தி என்னவென்றால் ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒழிப்பு’ முறையினை என்பதற்காக வாக்குப்பண்ணிய மக்கள் இன்று மறந்துபோய் ஜனாதிபதி முறைமைக்கு புத்துயிர் கொடுப்பது தான்.

இலங்கை எதிர்கால இலங்கை அரசியல் வரலாற்றில் ‘ஜனாதிபதி முறைமை’ என்ற நிதர்சனம் அழியப்போவதில்லை. மக்களுக்கு எதை மனதில் வைத்திருப்பது எதை மறப்பது எனற பேதம் இன்னமும் புரியாமல் இருப்பது விநோதம்.

இலங்கைப் பாராளுமன்றத்திலே 18ஆவது அண்மையில் 144 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. விலைபோன சரக்குகளை வைத்து பாராளுமன்றத்திலே வியாபாரம் நடத்திய இலங்கை அரசியலை ஒருகணம் நினைத்துப் பார்ப்போம்.

கடந்த காலங்களில் J.R. ஜெயவர்த்தனா, தனது ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தியிருந்தார். ஆசியாவின் நரியென அழைக்கப்பட்ட J.R. இந்த விடயத்தில் சரியாகவே நடந்து கொண்டார். தற்பொழுது ஜனாதிபதி மகிந்தா ஆசியாவின் கிட்லராக வர்ணிக்கப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தமை ஜனாதிபதி ஆட்சி அமைப்பை மாற்றுவதற்காக வழங்கப்பட்ட ஆணையல்ல. ஒழுங்கான ஜனநாயக வரம்பை மீறாமல் 18 ஆவது சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன அபிப்பிராயம் நிட்சயமாக தேவை என்பதை ஜனாதிபதி மகிந்தா கொம்பனி மறந்துவிட்டது. இது சர்வாதிகாரத்தின் உச்சம் என்பதை சர்வதேசம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியதே.

மொத்தமாக 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் நிறைவேறியது. ஆதரவாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரின் 1 உறுப்பினரும்(பியசேன), ஆதரவாக முஸ்லீம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்ரீரங்கா அடங்கலாக 7 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

1978 ம் ஆண்டு J.R. ஜெயவர்த்தனாவால் அத்திவாரமிட்டு அமைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு மேலும் ஒருபடி புத்துயிர் கொடுத்து 2 /3 பெரும்பான்மையுடன் மகிந்தா அரசினால் 2010 ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை அரசின் அராஜகத்தின் மைல் கல்லாக வரலாற்றில் நினைக்கப்படவேண்டிய ஆண்டாகும். குறிப்பாக தமிழ் மக்களின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கோடு நிறைவேற்றப்பட்ட18 அம்ச திருத்தச் சட்டம், தமிழ் பேசும் இனமாகிய முஸ்லீம் மக்களின் சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவளிப்பது ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.

முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள காணிகளை சிங்களம் கபளீகரம் செய்கின்றதென்ற செயலை முஸ்லீம் காங்கிரஸ் வன்மையாக எதிர்த்திருந்த போதும் மீண்டும் பச்சைத்துணி போர்த்திக்கொண்டு மகிந்தாவின் குகையின் வாசலில் நின்று ஆதரவுக்கை காட்டுவது பாரம்பரியமாக வாழும் முஸ்லீம்மக்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உடைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ரவூப் ஹக்கீம் எடுத்துக்கொண்ட இந்த முடிவு, நிரந்தரமாகவே முஸ்லீம் மக்கள் தமது இருத்தலைத் தொலைத்தவர்களாக இலங்கையில் வாழப்போகின்றார்கள் என்பதை கோடிகாட்டி நிற்கின்றது.

18 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேறிய பொது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக எதிர்த்து வாக்களிக்கவில்லை என்ற செய்தி தமிழ் மக்களின் இதயங்களில் கனலாய் எரிகின்றதென்பதை உணர்தல் அவசியம். தமிழ் மக்களுக்கான வடகிழக்கு மாகாணசபை அதிகாரங்களான சரத்து 55(4) ஐ முழுமையாக ஜனாதிபதி தனது முழுமையான ஆழுமையின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உணராமல், இவற்றைவிட வெளிநாட்டுப் பயணத்தை முக்கியப்படுத்தியமை தமிழ் மக்கள்மேல் கொண்ட அக்கறையின் ஆழத்தைக் காட்டுகிறது.

காலம் காலமாக பாராளுமன்றத்திலே பொருட்களின் விலையுயர்வுக்கான எதிர்ப்புப் போராட்டங்களில் தமிழ்க்கட்சி சார்ந்த பா.உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை. உயர்த்தப்படுகின்ற விலையின் ஒவ்வொரு சதமும் தமிழ் மக்களின் தலைகளின் மேல் கொட்டப்பட்டிருந்த, கொட்டப்படும் குண்டுகள் என்பதை ஏனோ உணரத்தவறுகிறார்கள். அறியாமையா? அசண்டையீனமா? புரியவில்லை.

தற்பொழுது நடக்கின்ற ஜனநாயக யுத்தத்திற்கு அரசுக்கு எதிராக நின்று போர்புரிய வேண்டிய மிக முக்கியமான பங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. கடந்த காலங்கள் போன்று தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்க புறப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் சரிவர தங்களின் கடமைகளை புரியாத பட்சத்தில் மக்கள் தெருவில் நிறுத்தி விடுவார்கள்.

தற்போதைய 18ம் திருத்தச் சட்டமூலத்தின் படி 3 மாதத்துக்கொருமுறை பாராளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவேண்டும். இதனால் அரசுக்கெதிரான போராட்டங்களை பாராளுமன்றத்தினுள்ளேயே இருந்துகொண்டு ஜனாதிபதியின் முன்னிலையில் நடாத்தலாம் என்பதை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள். இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.

இலங்கை நாட்டின் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி ஆகிய 4 முக்கியஸ்த்தர்களின் முன்னிலையில் தமிழ்மக்களின் மீதான அரசின் அராஜகப் போக்குகளை முன்வைக்கக்கூடிய ஒரு அரங்கமாக பாராளுமன்றத்தை பாவிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதைச் சரிவர தமிழ் உறுப்பினர்கள் பயன்படுத்தாவிடின், எப்படித்தான் நாங்கள் தாறுமாறாக குற்றம் சுமத்தினாலும் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வழங்கிய செவ்வி உண்மையாவதை தடுக்க முடியாது.

இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு 18 ஆம் திருத்தத்தால் சாவுமணியடிக்கப்பட்டதை இந்தியாவால் எப்படிப் புரியப்பட்டதோ தெரியவில்லை. முழுக்க முழுக்க அடுத்தடுத்த முறைகளிலும் மகிந்தாவே ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற நுகம் கொண்டு 18 ஆவது திருத்தத்தை அரங்கேற்றியமையை இலகுவாக புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

J.R. எறிந்த பந்து அவரை நோக்கியே திரும்பிவந்ததைப் போல வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக இலங்கை வரலாற்றில் உண்டு. கனவுகளெல்லாம் நனவாக வேண்டுமென்பது மரணங்களை மறந்த நிலை. இதுவே பெளத்த போதனையின் அடித்தளம்.

‘நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ’

கனக கடாட்சம்

Comments