யாழ்ப்பாணத்தில் ஒரு ஈழத்தமிழர் புராதன அருங்காட்சி சாலை

நாவலர் றோட், நல்லூரில் இருக்கும் நூதனசாலை

யாழ்ப்பாண உலாத்தலில் எமது நூதனசாலைக்கும் ஒரு எட்டுப் போய் அங்கேயிருக்கும் அரும்பொருட்களைக் காண்பதோடு கமராவில் அள்ளிவரலாம் என்ற நோக்கில் ஒரு நாட்காலை நல்லூர் நோக்கிப் பயணப்பட்டேன். நல்லூரில் நாவலர் றோட்டில் இந்த நூதனசாலை இருக்கு என்பது மட்டும் தெளிவாகத் தெரியும். ஏனென்றால் முன்பும் ஒரு தடவை இந்த இடத்துக்கு வந்திருக்கின்றேன். ஆனால் பலவருஷங்கள் கழிந்த நிலையில் நாவலர் றோட்டின் தார் வீதியைத் தவிர எல்லாம் மாறியிருக்கும் நிலையில் என் பஞ்சகல்யாணி லுமாலா சைக்கிள் தன் பாட்டில் பயணிக்க நானோ வீதியின் இருமருங்கையும் கண்களால் அளந்தேன். இப்படியே நல்லூர் தாண்டி ,கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாண முகப்பு வரைக்கும் நாவலர் வீதி வந்து விட்டது ஆனால் நூதனசாலை தான் என் கண்ணில் படவில்லை. இடையில் எங்கோ என் கண்களில் இருந்து விலகிவிட்டது போல. மீண்டும் றோட்டின் மறு அந்தத்தில் இருந்து நல்லூர் நோக்கிய நாவலர் றோட்டை நோக்கி மெல்ல நடை பழகியது லுமாலா சைக்கிள்.

வழியில் பருத்திப்புடவையோடு வயதான அம்மா, எட்டி என் சைக்கிளை அவருக்கு முன்னால் கொண்டுபோய்

"அம்மா! நூதனசாலை எந்தப்பக்கம் தெரியுமோ"
"என்ன மேனை அது?"
"மியூசியம் அம்மா மியூசியம்"
"எனக்குத் தெரியாது மேனை" கையை விரிச்சுக் கொண்டே தன் நடையைக் கட்டினார் அவர்.

கால்களுக்கு குழாய்க்காற்சட்டை அணிந்த இன்னொரு நாற்பதுகளின் ஒருவர் தன் வீட்டுக்கு முன்னால் நின்றார்.

"அண்ணை! இந்த நூதனசாலை, மியூசியம் இந்த றோட்டில தானாம் தெரியுமோ"
"எனக்குத் தெரியாது தம்பி நாங்கள் இடம்பெயர்ந்த சனம் இந்த ஊர் அவ்வளவு விளப்பமில்லை"

இனி நானே ஒரு கை பார்த்து விடுவோம் என்று வீதியின் வலப்பக்கமாகக் கண்களை வைத்துக் கொண்டு பயணித்தேன். ஆகா அதோ வந்து விட்டது நாவலர் கலாச்சார மண்டபம், இந்தக் கலாச்சார மண்டபத்துக்குப் பின்னால் தானே அந்த நூதனசாலை என் தலைக்கு மேலாய் கொசுவர்த்திச் சுருளாய் இந்த இடத்திற்கு வந்த பழைய நினைவுகள் துளிர்க்க உள்ளே போகிறேன்.

இந்த நாவலர் மணிமண்டபத்திற்கு நான் கடைசியாக வந்தது 90 ஆம் ஆண்டு. அப்போது எங்கள் லைப்ரரி சேர் தனபாலசிங்கம் தான் என்னை இழுத்து வந்தார். அந்த நாள், தமிழகத்தின் சுபமங்களா ஆசிரியராக இருந்த எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன் ஈழத்துக்கு வந்து இந்த மண்டபத்தில் தான் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்தார். நாவலர் மண்டபமே முட்டி வழிஞ்சது அப்போது. கோமலின் பேச்சு முடிந்ததும் கேள்வி நேரம். கோமலை பலரும் கேள்வி கேட்க மேடையில் ஏறுகின்றார்கள்.

மேடைக்குப் நின்ற லைப்ரரி சேர் மறுகரையில் நின்ற என்னைக் கண்டு
"ஏறும் ஏறும்" என்று கண்களாலேயே ஜாடை சொல்லி என்னை மேடைக்கு அனுப்புகின்றார்.

ஏதோ ஒரு துணிவில் மேடையில் ஏறி கோமலைக் கேட்கின்றேன். "திரைப்படங்கள் சமூக நாடகங்களுக்கு சாபக்கேடு என்றீர்கள், நீங்கள் கூட "ஒரு இந்தியக் கனவு", "தண்ணீர் தண்ணீர்" கதாசிரியர், நீங்கள் எதிர்பார்க்கும் சினிமாவை நீங்களே தொடர்ந்து செய்யலாமே" என்று ஏதோ ஒரு வேகத்தில் மேடையில் ஏறிய நான் கேட்கின்றேன். அவரின் பதிலோடு மேடையில் இருந்து இறங்கிய என்னைத் தட்டிக் கொடுக்கின்றார் லைப்ரரி சேர். அந்த நினைவுகள் மீண்டும் கிளறுப்பட்டுத் தணிய என் சைக்கிளை இளைப்பாற்ற ஒரு மர நிழலில் நிறுத்தி விட்டு நாவலர் மணி மண்டபத்துக்குப் பின்னால் போகின்றேன். அங்கே தானே இருக்கு எமது நூதனசாலை.

எத்தனை எத்தனை வீரபுருஷர்கள் மாமன்னர்களாய் ஆண்ட தேசம் இந்த யாழ்ப்பாண இராச்சியம். அந்த அரசாட்சிகளின் சுவடுகளைக் காவல்காக்கும் கலா நிலையமான நூதனசாலையின் கோலத்தைப் பாருங்கள். சாயமிழந்த நூற்சேலை பிச்சைக்காரியின் உடலை மறைப்பது போல ஒரு கட்டிடம். அதுவும் நாவலர் மணிமண்டபத்துக்குப் பின்புறமாக, கழிப்பறை போல ஏனோ தானோவென்ற அங்கீகாரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை என்ற கல்விப்பீடம் மூலம் அறிஞர்கள் பலரை உருவாக்கி அங்கீகரிக்கக் காரணமாகவும் இருந்த இந்தக் கலைக்களஞ்சியங்கள் கடைசிக்காலத்தில் தம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் போல இருக்கும் நூதனசாலை இல்லையில்லை நூதனமான அறை இதுதான். உள்ளே போகிறேன்.

அங்கே இரண்டு பெண்களும் ஒரு வயதானவரும் மேசை போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நுழைவுக் கட்டணம் ஏதாவது கட்டிப் போவதுதானே எல்லா நூதனசாலைகளிலும் வழக்கம் என்ற எண்ணத்தில் கேட்கிறேன்,
"கட்டணம் எவ்வளவு"
"அப்படி எதுவும் ஒன்றுமில்லை, உள்ளே போய் வடிவாப் பாருங்கோ" சிரித்தவாறே ஒரு பெண் சொல்கிறார்.

உள்ளே ஏற்கனவே வந்து குழுமிய தென்னிலங்கை சிங்களவர்கள் ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டியாகப் பார்த்துத் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டே போகின்றார்கள். ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டிகளிலும் ஏனோ தானோவென்று உட்கார்ந்திருக்கின்றன பண்டையகாலத்தில் மவுசுடன் இருந்த செல்வங்கள். பல பெட்டகங்களில் எந்தவிதமான குறிப்புக்களும் இல்லை. இருக்கும் சில பெட்டகங்களில் இருக்கும் குறிப்புக்களும் ஒற்றைவார்த்தையில் இது சங்கு, இது சட்டி என்று சொல்கின்றன். இவையெல்லாம் எப்போது யாரால் எந்தக்காலகட்டத்தில் பயன்ப்படுத்தப்பட்டன என்று எந்தவிதமான தகவல்களும் இல்லை. என்னைச் சுற்றி அந்த அறையில் எந்தத் தமிழரும் பார்வையாளராக வரவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

தாங்களாகவே ஊகித்து ஒவ்வொரு பொருட்களையும் பார்த்துக் கூட வந்தவர்களோடு அவற்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போகிறார்கள் வந்திருக்கும் தென்னிலங்கையர். ஒரு கண்ணாடிப்பெட்டகம் முன்னால் நின்று இந்தப் பொருள் என்னவாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் ஒரு பெண் குரல். ஒரு சிங்களப்பெண்மணி சிங்களத்தில் எனக்கு ஏதோ விளங்கப்படுத்துகிறார் என்பது மட்டும் தெரிகிறது. மதராசப்பட்டணம் படத்தில் வெள்ளைக்காரிக்கு முன்னால் நிற்கும் ஆர்யா போல ஏதோ அவரை ஆமோதித்துச் சமாளிக்கிறேன். நானும் அவர்களைப் போல வந்த ஒரு தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணி என்று நினைத்து விட்டார் போல.

ஒவ்வொரு கண்ணாடிப்பெட்டகங்களையும் கமராவில் சிறைப்படுத்திக் கொண்டு மெல்ல நகர்ந்தேன். உள்ளே சுற்றுச் சுற்றி மீளவும் முகப்பு இடத்துக்கு வருகிறேன். மேசையில் இருக்கும் பெண்களும் அந்த வயதானவரும் ஏதோ ஒரு கண்ணாடிப்பெட்டகத்தில் இருக்கும் பொருளுக்குரிய பெயரை எழுத முனைந்து கொண்டிருந்தார்கள். கையில் பேனையும் ஒரு துண்டுப் பேப்பரும்.

சங்கிலியனின் வீரவாள் மழுங்கியது போல நூதனசாலைக்குப் போய் விட்டு வெளியேறும் போது என் மனநிலை. அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளில் ஒரு ஐம்பது வருஷம் பழமையான கல்லைக் கண்டாலே சுற்றவரை கொங்கிறீற் போட்டு இது என்னமாதிரியான கல், இதன் முக்கியத்துவம் என்ன என்னுமளவுக்கு அவர்களது வரலாற்றுச் சுவடுகளைத் தேடிப் பேணிப் பாதுகாக்கின்றார்கள். நமது சமூகமோ நல்ல நிலையில் இருக்கும் கோயிலை இடித்து நான்கு ஐந்து அடுக்குகளைக் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்துவதிலும் இருக்கும் முனைப்பு இப்படியான அரும்பெரும் வரலாற்றுச் சுவடுகளில் காட்டுவதில்லையே. இந்த ஆண்டு நல்லூர்த் திருவிழாவுக்கு பல அடுக்குகள் கொண்ட பக்தர்கள் செருப்பு வைக்கும் பீடங்களை விழுந்தடித்துச் செய்யும் நிலையில் இருக்கும் யாழ் மாநகராட்சி சபை, எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்த நூதனசாலையை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு மாற்றலாமே, கூடவே இங்கே இருக்கும் அரும்பொருட்களுக்கு முறையான தெளிவான வரலாற்றுக் குறிப்புக்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கூடப் பொறிக்கலாமே?

ஏதோ காயலான்கடைச் சரக்கு மாதிரி உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரலாற்று எச்சங்களைக் காண தென்னிலங்கை யாத்திரிகர்கள் படையெடுத்து வரும் போது, "இங்கே பாருங்கள் இப்படியெல்லாம் ஆண்ட சமூகம் இது" என்று காட்டக் கூட ஒரு முன்மாதிரியாக இவற்றை முறையாகப் பயன்படுத்தலாமே?

எஞ்சிய எம் வரலாற்று எச்சங்கள் கையேந்துகின்றன இன்றைய அரசியல் அநாதைகளான நம் தமிழரைப் போல.....


படங்களைப் பெரிதாகப் பார்க்க அந்தந்தப் படங்களை அழுத்தவும்


மேலே இருக்கும் கற்குவியல் டைனோசர் போன்ற மிருகத்தின் சிலைவடிவமாம்
ஒருகாலத்தில் மூதாதயரை அடக்கிய பீரங்கிகள்


மட்பாண்ட் அச்சு




கைவிலங்காகப் பயன்பட்டது














நீதிமன்றத்தில் பாவிக்கப்பட்ட குடைதாங்கி

பாண்டி விளையாடும் குண்டு













http://kanapraba.blogspot.com/

Comments