சன் சீ கப்பல் அகதிகளின் விவரங்கள் திருட்டு!

கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை கடந்த சனிக்கிழமை இரவு உடைத்த விஷமிகள் சிலர் அங்குள்ள கணினியில் சேகரிக்கப்பட்டிருந்த எம்.வி சன் சீ கப்பல் அகதிகளின் விவரங்களைத் திருடிச் சென்றுள்ளனர். மேற்படி கப்பலில் சென்ற 492 பேரின் விவரங்கள் கனேடியத் தமிழ்க் காங்கிரசினரால் அவர்களின் கணினியில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதுவே தற்போது திருட்டுப் போயுள்ளது.

இத்தாக்குதல் மற்றும் திருட்டுக் குறித்து ரொரன்ரோ போலீசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை போலீசார் கனேடியக் காங்கிரஸ் அலுவலகத்தில் தேடுதல் நடத்தியவேளையில், அக்கட்டடத்தின் வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசிய அதன் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, இந்த சம்பவத்துக்கும் இலங்கை புலனாய்வுப் பிரிவினரே பொறுப்பு எனத் தாம் அச்சமுறுவதாகவும் தெரிவித்தார்.

மேற்படி அகதிகள் வாக்குமூலத்தின்போது கூறிய விவரங்களும் அக்கணினியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வகதிகளில் சிலர் இலங்கையில் நடந்த போர்க்குற்றச் சாட்சிகளாக அரசுக்கு எதிராகச் சாட்சி சொல்லவும் முன்வந்திருந்தனர். எனவே இந்த விவரங்களை இலங்கை புலனாய்வு பிரிவினர் எடுத்ததன் மூலம், தங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடியவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அச்சுறுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக பூபாலபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சன் சீ கப்பலில் சென்றவர்களின் பெயர்களைக் கூட இன்னமும் கனேடிய குடிவரவுத் துறையினர் வெளியிடவில்லை. இவர்களிடம் இலங்கை அரசு கேட்டிருந்தும் கூட அவர்கள் பெயர்களைக் கொடுக்க மறுத்திருந்த நிலையில், தற்போது சகல விவரங்களும் திருடப்பட்டுள்ளது. எனவே இவ்வகதிகளின் இலங்கையிலுள்ள குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Comments