இலங்கை அகதிகளை ஏற்றுகொள்ள ஒரு ஆசிய நாடு தயார்: வெளிவராத உண்மைகள்

இலங்கையில் வாழமுடியாது என்று அகதிகளாகச் சென்று, தாம் செல்லவேண்டிய நாடுகளை அடையாமல் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் ஏராளம். நாம் இதுவரை காலமும் கேள்விப்படாத சில அரிய நாடுகளிலும், சிறிய தீவுகளிலும் கூட இவர்கள் தமது குழந்தைகளோடு வசித்துவருகின்றனர், எப்போதாவது ஒரு நாள் தாம் தமது கணவனோடு அல்லது மனைவியோடு, இல்லை உறவுகளோடு இணையலாம் என்ற ஒரே நம்பிக்கையில்.

நம்பிக்கை தான் இவர்கள் வாழ்வாகிவிட்டது.

இந்நிலையில் ஆசியாவில் உள்ள ஒரு நாடு இவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், வளர்ந்துவரும் அந்நாடு தற்போது ஒரு சொர்க்கபூமி என்று ஐ.நாவுக்கான அகதிகள் அமைப்பு தெரிவித்திருந்தது. அத்தோடு நின்றுவிடாது , இவ்வாறு இந்தியாவில் உள்ள சுமார் 1,800 பேரை இந்நாடு ஏற்றுக்கொண்டதாகவும் அது செய்திவெளியிட்டது. அந்நாட்டின் பெயரைக் குறிப்பிடவில்லையே என பலரும் நினைக்கலாம், அதைத்தான் அகதிகளுக்கான அதிகாரிகளும் செய்தனர். எங்கே அந்த நாட்டை சொல்லப்போய், எல்லாத் தமிழர்களும் அடைக்கலம் கொடுக்கும் அந்த நாட்டிற்கு படையெடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்த நாட்டின் பெயரை அதிகாரிகள் குறிப்பிடவில்லை என நாம் எண்ணியிருந்தோம்.

ஆனால் விடயமே வேறு! அவ்வாறு அகதிகளை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடு எது தெரியுமா? சாட்சாத் இலங்கையே தான். இலங்கை அரசோடு பேசி பல ஈழ அகதிகளை இவர்கள் திருப்பி அனுப்பி, அங்கே ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் மேற்பார்வையில், ஒரு முகாம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அகதிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் இலங்கை அரசு தமிழர்களை ஏமாற்றினார்கள். ஆனால் தற்போது ஜ.நா பிரதிநிதிகளும் தமிழர்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டனர்.

இதை எல்லாம் கஷ்டப்பட்டு கடந்து, கனடா சென்றால் அங்கும் தமிழ் அகதிகளுக்கு நிம்மதி இல்லை. கனடாவில் இயங்கிவரும் சில அமைப்புகள் அகதிகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற வாக்கெடுப்பை நடத்தில் அதில் 43% வீதமான கனடியர்கள் ஈழ அகதிகள் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்று பெறுபேறுகள் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு, கனடாவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஒரு நிறவெறியை தோற்றுவிக்கும் அளவுக்கு தனது கட்டுரைகளைப் பிரசுரித்துவருகிறது ரொரண்டோ சன்.. அதற்கு பின்னூட்டங்கள் (COMMENTS) அடிக்கும் நபர்கள் பலர் தம்மை கனடா வெள்ளை இனத்தவர்போலக் காண்பித்து தமது கருத்துக்களைப் பதிவுசெய்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

கனடாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீடு இதில் பெரும் பங்கு என கருதப்படுகிறது. அவர்களின் தூண்டுதலின்பேரில், குறிப்பிட்ட சில சிங்களவர்கள் கணனியைப் பாவித்து, ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிறவெறிக் கருத்துக்களை ரொரண்டோ சன் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மையாகும். அண்ணளவாக சுமார் 4 லட்சம் தமிழர்கள் வசித்துவரும் கனடாவில், எத்தனைபேர் இந்நிலை குறித்து அறிந்துவருகின்றனர் என்ற கேள்வி இங்கு எழுகிறது. எதிரியானவன் தற்போது ஒரு புதியபோர் முனை ஒன்றை திறந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

எங்கெங்கே எல்லாம் தமிழன் வசித்து வருகிறானோ, அந்நாட்டு பிரஜைகளிடம் இருந்து முதலில் ஈழத் தமிழர்களைப் பிரிப்பது என்பதை இலங்கையின் புத்திஜீவிகள் தற்போது செய்துவருகின்றனர். அதாவது புதிதாக ஆரம்பித்திருக்கும் இத் திட்டம் நிறைவேறுமேயானால், பல நாடுகளில் ஈழத் தமிழனுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள நெருக்கத்தைக் குறைத்து, இனவேற்றுமையை ஊதிப்பெரிதாக்கி, முறுகல் நிலையைத் தோற்றுவிக்க இலங்கையின் புத்திஜீவிகள் முயல்கின்றனர். இதனூடாக என்ன பயன் என்று நினைக்கிறீர்களா? பின்வரும் செயல்பாடுகளை அவர்கள் செய்ய நினைக்கலாம்.

[1] இவ்வாறு இன முறுகல் நிலை ஏற்பட்டால், நாம் நடத்தும் போராட்டங்கள் அந்நாட்டு மக்களால் கொச்சைப்படுத்தப்படும்
[2] அதற்கான ஆதரவுகள் இருக்காது. அதை நடத்தவும் கஷ்டமாக இருக்கும்.
[3] இதனை அந்நாட்டு ஊடகங்கள் வெளிக்கொண்டுவராத நிலை தோன்றும்.
[4] அகதிகள் அதிக அளவில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
[5] ஒரு நாட்டில் உள்ள அதிகப்படியான மக்கள் விருப்பம் என்னவோ அதை நிறைவேற்றவே அரசு முனையும்.

இதுபோன்ற புறக்காரணிகளைத் தூண்டும் வகையில் இலங்கை அரசு ஒரு புதிய யுத்தக் கதவை திறந்துள்ளது எனலாம். இதனை கனேடிய தமிழர்கள் உடனடியாக முறியடிக்க வேண்டும். கனடா நாட்டில் ஈழத் தமிழ் அகதிகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற அடிப்படை விவாதங்களைத் தூண்டுபவர்கள் யார் யார் என்பது முதலில் இனம்காணப்படவேண்டும். வேற்றின அகதிகள் போல கனடாவில் ஈழத் தமிழர்கள் அரசாங்கச் சலுகைகளை எதிர்பார்த்து காலம் கழிக்கவில்லை, மாறாக பல வியாபாரஸ்தலங்களை உருவாக்கியுள்ளனர், பலர் சொந்த வீடுகளை வாங்கி, சுயமாகச் சம்பாதித்து நல்ல நிலையில், ஒரு நல்ல குடிமகனாக வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் இவர்களை களங்கப்படுத்த முனையும் சக்திகள் முதலில் இனம்காணப்படவேண்டும்.

தமிழர்களை பற்றி எழுதும் நாழிதழ்கள் மற்றும் இணையங்களை வாசித்து, அதற்கு தகுந்த பின்னூட்டங்களை வழங்க மக்கள் முன்வரவேண்டும்! தமிழர்களை பாராடி எழுதியிருந்தால் அந்த ஊடகத்திற்கு வாழ்த்துச் செய்தியும் , எம்மை தாழ்த்தி எழுதியிருந்தால், எமது பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்லவும் வேண்டும், இதை பெரியவர்கள் தான் செய்யவேண்டியது இல்லை. மொழிப் பிரச்சனை இருந்தால் அவர்கள் பிள்ளைகளைக் கொண்டு இதைச் செய்யலாம். அப்படி என்றால் தான் எமது இனத்தின் பிரச்சினையை, வேற்றின மக்கள் புரிந்துகொள்ளுவார்கள். எமக்கு என்ன என எல்லோரும் விடுச்சென்றால் எமது நிலை கவலைக்கு இடமாக மாறும்.

அவுஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக எவ்வாறு ஒரு நிறவெறிப் போராட்டம் ஆரம்பமானதோ அதை ஒத்த நிலை அங்கு தோன்றலாம். அது விரிவாக்கப்பட்டு, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் நிலைதோன்றலாம், எனவே இதனை முளையிலேயே கிள்ளி எறிய, அதிக மக்களை அரவணைத்துச் செல்லும் கனேடிய தமிழ் காங்கிரஸ், மற்றும் தமிழ் அமைப்புகள் உடனடியாகச் செயல்படுவது நன்மை பயக்கும்!

அத்தோடு இன்று தமிழ் காங்கிரசின் அலுவலகத்தில் உள்ள கணணி திருட்டும்போயுள்ளது. இதை எல்லாம் உற்றுநோக்கினால் ஒரு கோர்வையாக இருக்கும். நிலமை புரியும். கனடா வாழ் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பது நன்கு தெளிவாகிறது !

அதிர்வின் ஆசிரியபீடம்.

Comments