மகிந்த - பியசேன - மாதகல் - நல்லூர் (வெள்ளிவலம்)

maathkal_buddhist-temple

செப்ரம்பர் மாதம் எட்டாம்திகதி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 18 வது திருத்தசட்டம் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்தும் அவசரஅவசரமாக ”உருவியெடுக்கப்பட்ட” எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இதனை மகிந்த அரசாங்கம் சாத்தியமாக்கியுள்ளது.

இதன்மூலம் சிறிலங்காவின் அரச தலைவருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சனநாயகமாக தெரிகின்ற சர்வாதிகார ஆட்சிமுறைக்கு சிறிலங்கா தேசம் உள்வாங்கப்பட்டுள்ளது.

சனநாயக தன்மையை பேணுவதற்காக சர்வதேச ரீதியாக ஒரு நாட்டின் ஆட்சியானது மூன்று முக்கிய அதிகார அலகுகளிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Separation of Power என சொல்லப்படுகின்றது. சட்ட அமுலாக்கம் சட்டவாக்கம் நீதிபரிபாலனம் என மூன்று அதிகார மையங்கள் - தனித்தனியே சுதந்திரமாக செயற்பட்டு - ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கொண்டுசெல்லும்.

ஆனால் இவ்வாறான மூன்று அதிகார அலகுகளையும் தனது பொறுப்பில் கொண்டுவருவதற்கான – அவ்வதிகார அலகுகளுக்கு பொறுப்பானவர்களை நியமிப்பதற்கான - அதிகாரத்தை குறித்த 18வது சட்டமூலத்தின் மூலம் மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளார்.

அத்தோடு இரண்டு தடவைகளுக்கு மேலும் (தன்னால்) சிறிலங்கா அரசதலைவராக இருக்கமுடியும் என்ற சட்டத்திருத்தத்தையும் மகிந்த நிறைவேற்றியுள்ளார்.

இரண்டாவது தடவையாக ஆட்சிபீடம் ஏறுவதற்கான அதிகாரத்தை ஆறு மாதங்களுக்கு முன்னரே பெற்றுக்கொண்ட மகிந்த, இன்னும் இரண்டு மாதங்களுக்கு பின்னரே பதவியை புதுப்பித்துக்கொள்ளவுள்ள நிலையில், எப்போது தேர்தல் வைக்கவேண்டும் என்பதும், எப்படி தனக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதும், அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதும், மகிந்தவுக்கு இன்னொருவரா சொல்லிக்கொடுக்கவேண்டும்?

இவ்வாறு சிங்களதேசத்தில் புதிய அரசபரம்பரை ஆட்சிபீடம் ஏறுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக ஆதரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான பியசேன என்பவரும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவில் போட்டியிட்ட சிறிரங்காவும் மகிந்தவின் கப்பலில் ஏறிக்கொண்டது தமிழர் தரப்பு எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை கோடிகாட்டி சென்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழர் தரப்பின் தற்போதைய பலம் என்பதில் கேள்விக்கு இடமில்லை என்றாலும் தமிழ் தேசியத்தை அதிகமாக கதைத்துவிட்டார்கள் அல்லது கதைத்துவிடுவார்கள் என்றும், உள்வீட்டுக்குள் நின்றவர்களையே விலக்கி, புதியவர்களை கொண்டுவந்தது இதற்குத்தானா என்ற நிலை உருவாகிவிடக்கூடாது என்பதில் கவனம் எடுக்கவேண்டிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.

அதேவேளை ,சிறிலங்கா தேசத்தின் நவீன ஹிட்லராக மாறிவரும் மகிந்த ராஜபக்ச, இன்னொரு முனையில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் இரகசிய திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.

இலங்கைத்தீவுக்கு அரச மரக்கிளையுடன் வந்த அசோக சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்தை வந்திறங்கியதாக சிங்களவர்களால் ”நம்பப்படும்” இடமான மாதகலில் 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் நவீன சங்கமித்தையான சிராந்தி ராஜபக்சவும் அவரது மகனான நமல் ராஜபக்சவும் அரச மரக்கிளை ஒன்றை தென்னிலங்கையிலிருந்து கொண்டுவந்து நட்டுவைத்திருந்தனர். ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே அந்த அரச மரக்கிளை எவ்வளவுக்கு ”வளந்துவிட்டது” என்பதை முகப்பு படத்தில் பார்க்கிறீர்கள்.

தற்போது மாதகலில் பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியேறுவது தடைசெய்யப்பட்ட நிலையில், தென்னிலங்கை சிங்கள மக்கள் தாராளமாக அங்கு வந்திறங்கி ”சங்கமித்தையின் பாதத்தை” தரிசித்து செல்கின்றனர்.

சிங்கள தேசமோ என சிந்திக்கும் அளவுக்கு வானெழுந்து நிற்கும் இப்புத்தவிகாரைக்கு பின்னாலுள்ள அரசியலை தமிழ் மக்களுக்கு யாரும் கற்றுத்தரவேண்டியதில்லை.

இதேபோன்ற ”அரச மரக்கிளை விளையாட்டுக்கள்” யாழ்ப்பாணம் தொடங்கி வன்னியூடாக மட்டக்களப்பு வரை பரவிச்செல்கின்றது. தொல்பொருள் ஆய்வு என பெயரிடப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டம் சிகல உறுமய என்ற புத்தபிக்குகளின் கட்சியூடாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் மூலம் இலங்கையின் வரலாற்றை மீளஒருமுறை மாற்றி எழுதுவதற்கான முயற்சிகளாக உள்ளதாக தமிழ்நெற் தனது ஆய்வுகட்டுரையில் தெரிவிக்கின்றது.
ther_05

செப்ரம்பர் மாதம் ஏழாம்திகதி நல்லூர் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றதாக தாயகதகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிய இந்நிகழ்வாக இது அமைந்திருந்தது.

தமிழர்களின் பண்டைய அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவில், இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கூட்டியபோதும் இன்னும் அமைதியாகவே அதே வர்ணப்பூச்சுகளுடனே பார்த்திருக்க மள மளவென வளரும் அரச மரக்கிளைகள் அதனை மறைத்துவிடுமா?

- சங்கிலியன்

Comments