என்னால் நன்றாக படிக்க முடியும், ஆராவது உதவி செய்யுங்கள்! கெஞ்சுகிறது ஒரு பிஞ்சு

சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தி அடைந்து இருப்பவர் அனுசீலன் குணாலிசா.

b
கடந்த வருடம் அரசு- புலிகளுக்கு இடையில் இடம்பெற்ற யுத்தம் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த குணாலிசாவின் குடும்பத்தையும் ஒட்டாண்டிகளாக இடம்பெயர வைத்தது.

அப்பா அனுசீலன், அம்மா சுமித்ரா, அம்மம்மா சிவப்பிரகாசம் யோகலட்சுமி ஆகியோருடன் குணாலிசாவும் புகலிடம் தேடி ஓடினார்கள். எறிகணைத் தாக்குதலில் அப்பா அனுசீலன் இறந்து விட்டார்.
b
அப்பம்மாவின் ஒரு கை போய் விட்டது. காலிலும் காயம். துன்பங்களை மாத்திரம் சுமந்து கொண்டு வவுனியா நலன்புரி முகாமைச் சென்று அடைந்தார்கள். அன்றாட, அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை.

தந்தை இறந்து விட்டபடியால் ஆண் துணை இல்லாத குடும்பம். உழைப்பு, பிழைப்பு எதுவுமே கிடையாது.இயல்பு நிலை இல்லை. வளம் இல்லை. யுத்தம் கொடுத்த வடுக்களைச் சுமந்து கொண்டே படித்தார்.

பரீட்சையும் எழுதினார்.சித்தியும் அடைந்து விட்டார். வெட்டுப் புள்ளி 113. குணாலிசா 150 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார். முகாம் வாழ்க்கை ஒருவாறு முடிவுக்கு வந்தது. மீள்குடியேற்றப்பட்டார்கள்.ஓலைக் குடிசையில் ஏதோ வாழ்க்கை தொடர்கிறது.
b
அரச உதவிகளும் சரி, அரச சார்பற்ற மனிதாபிமான நிறுவனங்களின் உதவிகளும் சரி இவர்களை வந்து அடையவே இல்லை.அமைச்சர்களும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி , உள்ளூர் அரசியல்வாதிகளும் சரி, வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் சரி, மனிதாபிமானத் தொண்டர்களும் சரி இவர்களது குடிசையின் வாசற்படியைக் கூட அண்டியது இல்லை.

தாயின் கெட்டித்தனத்தில்தான் குடும்பம் ஒருவாறு ஓடுகின்றது என்று கூற வேண்டும். சுய தொழில் வாய்ப்பு , வேறு வருமானம் எவையும் இல்லாத நிலையில் குடும்பத்தை இழுக்கின்றார். மகளைப் படிக்க வைக்கின்றார். குணாலிசா தற்போது கிளிநொச்சி அன்னை திரேசா பெண்கள் பாடசாலையில் படிக்கின்றார்.
b
வீட்டில் இருந்து ஆறு மைல் தொலைவில் பாடசாலை. சைக்கிளை மிதித்துச் சென்று படிக்கின்றார். அப்பா உயிருடன் இல்லையே என்கிற ஏக்கம் அடிக்கடி தலைதூக்கினாலும் வைத்தியராகி மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் மிகவும் கவனமாகக் கல்வி பயில்கின்றார்.
b
ஆயினும் இந்தச் சிறுமியின் இலட்சியத்தை வீட்டின் வறுமை விழுங்கி விடுமா? யுத்தத்தின் வடுக்கள் புத்தகக் கல்வியைக் கெடுத்து விடுமா? விளையும் பயிர் வீட்டுச் சூழ்நிலையால் கருகி விடுமா? காலம்தாம் பதில் சொல்ல வேண்டும். ”என்னால் நன்றாக படிக்க முடியும்.... ஆராவது உதவி செய்யுங்கள்.” இப்படிக் கெஞ்சுகின்றது அந்தப் பிஞ்சு.

Comments