புதுவை இரத்தினதுரை, யோகியுடன் சரணடைந்த பிள்ளைகள் எங்கே?. மக்களைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தவில்லை, ஆணைக்குழு முன் மக்கள்!
தமது சாட்சியத்தில் அப்பெண் மேலும் கூறியதாவது:
என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.
பின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு வீதியால் பதினாறு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன். இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது.
சகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன்.
எங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
இதேவேளை, கிருஷ்ணபாலன் ஜெயபாரதி என்ற தாயொருவர் இடையில் கூறுகையில்;
தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத் தெரியாதெனவும் கூறினார்.
இதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களா என வினவினர்.
இதற்கு அவர் ஆம் என்று பதிலளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தாம் கவனத்தில் கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.
இது இவ்வாறிருக்க இலங்கை வரலாற்றில் காலத்திற்கு காலம் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடே நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் எனவும் இதில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் உண்டு என்றும் எனவே எமது அடுத்த சந்ததியும் ஆயுதம் ஏந்தாத வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட மக்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று சாட்சியமளித்தனர்.
ஒவ்வொரு காலப்பகுதியிலும் இன ரீதியிலான முரண்பாடுகளின் அடிப்படையில் தமிழ் சமூகத்தின் மீதான கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வு தேடும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் நடைபெற்றது.
எனினும் அந்தப் போராட்டம் இன்று முற்றுப்பெற்ற நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர்.
ஆயினும் முன்னர் போன்று சுமுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பியிருபக்கவில்லை. காணிப் பிரச்சினைகள், போரினால் இறந்துபோன, காணாமல்போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகள் இன்று வரை கவனிக்கப்படாமல் இருக்கின்றன.
எனவே காணமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதென்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.
எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதையாவது கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
ஆணைக்குழு முன் சாட்சியமளித்த அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை என்பவர் கூறுகையில்;
நாங்கள் 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களுடைய வீடுகளும் வாகனங்களும் முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தது.
ஆனால் இப்போது வாகனங்கள் எங்கேயென்று தெரியாது. வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு எமக்கான நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவேண்டும் என்றார்.
தொடர்ந்து நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது புலிகள் உங்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தினார்களா? என ஆணைக்குழு கேட்டதற்குப் புலிகள் மக்களைப் பின் நிறுத்திவிட்டு முன்னால் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.
சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் மக்கள் மீது ஷெல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்ததாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 ஆயிரம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் என்றார்.
தொடர்ந்து தேவரூபன் சுசீலாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில்; 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற பெயரில் என்னுடைய 19 வயது மகனைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இரண்டு முறை அவர் புலிகளிடம் இருந்து தப்பி வந்து வீட்டில் நின்ற போதும் 3 ஆம் முறை பிடித்துச் சென்று ஆனந்தபுரம் சண்டையில் விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.
இன்று என்னுடைய மகன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை கடந்த காலத்தில் இத்தகைய அழிவுகள், அவலங்களுக்கு என்ன காரணம்? எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம்? என ஆணைக்குழு மக்களிடம் வினவிய போது பதிலளித்த மக்கள்;
இனி ஒருபோதும் ஆயுத வழியிலான போராட்டத்திற்குத் தாம் தயார் இல்லை எனவும் எமது அடிப்படை வசதிகள் முதற்கொண்டு இனப்பிரச்சினை வரை சகலவற்றுக்குமான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
கடந்த காலத்தைப் போல் மக்களை அரசியல் பகடைக்காய்களாகப் பாவிக்காது பெருந்தன்மையோடு இவ்விடயத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
Comments