காங்கிரஸ் ஆட்சிக்கு இனியும் முடிவுகட்டவேண்டாமா ?

சர்வதேசத்தின் முன் அசிங்கப்பட்டு போயிருக்கும் சோனியா காங்கிரஸ்

சென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி, சீனாவுக்கு ஒரு பிலிம் காட்டவும் அத்தோடு நின்றுவிடாது அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாகவும் காங்கிரஸ் சொல்லிவந்தது. அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்த ஏற்பாடாகிவருகிறது. ஆனால் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், அதனைத் தொடர்ந்து கனடா, இப்போது ஆபிரிக்கர்கள் என எல்லா விளையாட்டு வீரர்களும் இந்தியா செல்லப் போவது இல்லை என அரிவித்துவருகின்றனர். ஏன் தெரியுமா ? இதற்காக அமைக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கு, உட்பட தங்கும் விடுதிகள் கூட, ஒரு தரத்தில் இல்லை என்பது மட்டுமல்லாது, சுத்தமாக இல்லை என்றும் குறைகூறப்படுகிறது. இதனை ஏன் இந்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றது ?

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஆனால் அவை 3ம் திகதிக்கு முன்னர் முடிந்துவிடுமா என்று இதுவரை சரியாகக் கூறமுடியவில்லை. போதாக்குறைக்கும் அங்கு கட்டப்பட்ட பாலம் ஒன்று இன்று உடைந்து விழுந்துள்ளது. அவசர அவசர மாகக் கட்டப்படும் கட்டிடங்களும், தொடர்மாடிகளும் எப்போது இடிந்து விழும் என்ற ஏக்கமே இங்கு உரையோடிப்போய் உள்ளது.

இந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. இதனைக் கண்டுகொள்ளாமல் காங்கிரஸார் விட்டதால், பிரச்சனை பூதாகரமாகி பி.பி.சி, சி. என். என் போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளில் எல்லாம், இந்தியா விளையாட்டு வீரர்களுக்காக அமைத்திருக்கும் தங்கும் அறைகளை போட்டோ எடுத்துக்காட்டி மானத்தை கப்பல் ஏற்றியுள்ளது. இதனைப் பார்வையுற்ற பல விளையாட்டு வீரர்கள் தாம் இந்தியா செல்லப்போவது இல்லை என தற்போது அறிவிக்க, அவ்வப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றி, அவற்றை நாம் சர்வதேசத்தின் தரத்திற்கு உயர்த்துவோம் என கெஞ்சுவதும் வழமையான விடையமாகிவிட்டது.

தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கோ இதனைப் பற்றி எதுவும் தெரியாத நிலை காணப்படுகிறது. காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன எனக் கூறப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர்.

பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.

நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லையாம் நம்புவீர்களா இதை ? அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.

நாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய்தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர். இதுதான் மேம்படுத்தலா. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை காங்கிரஸ் கொள்ளை அடித்துச் செல்கிறதே.

டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றிலும் ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ?

இதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக ரூ.50 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன. இது இவ்வாறிருக்க விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசிந்து முற்சந்திவரை வந்துவிட்டது.

‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா ? கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும், குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா ? காங்கிரஸ் ஆட்சிக்கு இனியும் முடிவுகட்டவேண்டாமா ?

Comments