நாடுகடந்த அரசின் தனி நபர் பொறியில் சிக்கித் தவிக்கும் யாப்பு

மே 18 போர் முடிவடைந்த பின்னர், தமிழர்களுக்கு என்று ஒரு தனி அரசுவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அந்த வேளை நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நிறுவ சிலர் முயற்சிகளை மேற்கொண்டனர் என்பது யாவரும் அறிந்ததே. நாடு கடந்த அரசாங்கம் என நாம் தமிழில் குறிப்பிட்டாலும், பல நாடுகள் பங்கேற்கும் நாடுகடந்த அரசாங்கம் என்பதே இதன் உண்மையான பெயர். அதாவது பல நாடுகளில் வாழும் தமிழ் எம்.பீக்கள் கலந்துகொள்ளும் ஒரு அரசாங்கம். இதன் யாப்புகள்( சட்ட வரைமுறை) எழுதுவதற்கு 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் அதில் கணிசமானோர், அதைச் சரிவரச் செய்யவில்லை. வேறு நாடுகளின் சட்ட திட்டங்களை அப்படியே நகல் எடுத்து, அங்கும் இங்குமாக வெட்டி ஒட்டி, யாப்பு தயாரிக்கப்பட்டது.

அதாவது, எல்லையற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு, ஒரு எல்லைக்குள் இருந்துசெயல்படும் நாடுகளின் சட்டங்களை பிரதி எடுத்து அந்த யாப்பை புகுத்தியுள்ளனர். பன்நாடுகளைக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசு, என்பது உலகிலேயே இது ஒன்றுதான் உள்ளது. பல நாடு கடந்த அரசாங்கங்கள் தற்சமயம் இங்கிவந்தாலும், இதுபோன்ற ஒரு கோட்பாடு உடைய அரசு இயங்கிவருவது உலகில் இதுவே முதல் தடவையாகும். எனவே அதற்கு அமைவாக யாப்பு மற்றும் சட்ட திட்டங்கள் முதலில் தனித்துவமாக எழுதப்படவேண்டும் என்பதே எமது வாதமாகும்.

இருப்பினும் யாப்பு எழுதும்போது நடைபெற்ற வெட்டி ஒட்டல் சம்பவங்களுக்கு அப்பால், சிலர் தார்மீகப் பொறுப்பேற்று பெரும் நேரத்தை செலவழித்து இந்த யாப்பை எழுதி முடித்திருந்தாலும், அதை அமெரிக்காவில் உள்ள சிலர் தமக்கு ஏற்றாற்போல மாற்றியுள்ளனர். இந்த யாப்பு பற்றி இன்றும் நாளையும் விவாதம் இடம்பெற்று, நாளை வாக்கெடுப்புக்கு விட இருக்கும் நிலையில் இதுகுறித்து மக்கள் அறிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே நாம் இதை பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுகிறோம்.

இந்த யாப்பின் பிரகாரம் தலைமைச் செயலாளர் அல்லது பிரதம மந்திரியாக ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ரகசிய வாக்கெடுப்பு மூலம் அது நடைபெறலாம், இல்லையேல் ஏகமனதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஜனநாயக முறையில் இது நடைபெறுவதாகக் கூறப்படுமேயானால், பிரதம மந்திரி என்று ஒருவர் இருந்தால் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கவேண்டும், ஆனால் நாடு கடந்த அரசில் அந்த அம்சம் இல்லை. அமெரிக்காவில் வசிக்கும் ருத்திர குமாரையே பெரும்பாலும் பிரதம மந்திரியாக நியமிக்கவேண்டும் என்று ஒரு தரப்பு பலமான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

எல்லையற்ற பன்னாட்டு நாடுகடந்த அரசின் பிரதம மந்திரி, ஒரு எல்லைக்கு உட்பட்டு செயல்பட முடியுமா? இல்லை! அவரும் எல்லைகளைக் கடந்து செயல்படவேண்டும், அதனால் இந்நிலையில் 1 தலைவரை நியமிப்பது என்பது மிகவும் ஆபத்தான விடயம். இவ்வாறு ஒரு தலைவர் நியமிக்கப்பட்டால், இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டுள்ள உலக வல்லரசுகளின் பார்வை ஒரு தனிமனிதர்மேல் திரும்பும். அதுவே ஆபத்தாகவும் முடியலாம். எனவே குறைந்தது 3 தலைவர்களாவது நியமிக்கப்படுவதே நல்லது. பல நீதி விசாரணைகளின் போது நீதிமன்றில் 3 நீதிபதிகள் இருப்பதை நாம் பலதடவை கவனித்திருப்போம்.

அவ்வாறு 3 தலைவர்கள் வேறு வேறு நாட்டுகளில் நியமிக்கப்பட்டு, இம்மூன்று தலைவர்களும் கூடி எடுக்கும் முடிவுகளே இறுதியில் அறிவிக்கப்படவேண்டும். அதுவே ஒரு பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும். பின்னர் நாங்கள் உற்றுநோக்கும் விடயம் என்னவென்றால், பிரதம மந்திரிக்கு கீழ் மூவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதுவும் இரகசிய வாக்கெடுப்பு மூலமே. இவ்வாறு தேர்தெடுக்கப்பட்ட மூவருடன் கலந்து பிரதம மந்திரி இன்னும் 7 பேரை தேர்ந்தெடுப்பார் (இவர்கள் அமைச்சர்கள் போல இயங்குவார்கள்). இந்த நடை முறையிலும் சிக்கல்களே காணப்படுகின்றன. அதாவது பிரதம மந்திரி ஒருவராக இருக்கும் பட்சத்தில் அவர் தனக்கு வேண்டப்பட்ட ஆட்களையே அமைச்சுப் பதவிகளுக்கு நியமிப்பார். அது வழக்கமாக நடைபெறும் விடயம் இது மாற்றப்படவேண்டும்!

அடுத்ததாக அமெரிக்கா போல ஒரு செனட் சபை உருவாக்கப்பட உள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. அதாவது செனட் சபையில், புத்திஜீவிகளும், கல்விமான்களும் இருப்பார்கள் என்றும், அவர்கள் அறிவுரை மட்டும் வழங்கலாம் மற்றும் வாக்குபோடும் தகுதி அவர்களுக்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அதாவது சமூகத்தில் குறிப்பிட்ட சிலரையே நாம் மீண்டும் மீண்டும் இதற்குள் இழுத்துவைத்திருக்க முற்படுகிறோமே அன்றி, புதிதாக உருவாகியுள்ள இளம் சந்ததியினரையோ அல்லது இளைஞரையோ நாம் அரவணைத்துச் செல்ல தவறியுள்ளோம் என்பதையே இது எமக்கு உணர்த்தி நிற்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்புகள் அல்லது புதுச் சட்டங்கள் இயற்றப்படும்போது அதனை அங்கிகரிக்க 3ல் 2 பெரும்பான்மை இருக்கவேண்டும் என தற்போது உள்ள யாப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனையும் அமெரிக்கா வாழ் சிலர் மாற்றியுள்ளதாக நாம் அறிகிறோம். அதாவது பத்தில் 1 மடங்கு பேர் கூடினாலேயே, அந்த அமர்வுகள் சட்டரீதியானவை என்றும், அதன்மூலம் இயற்றிய சட்டத்தை அங்கிகரிக்க முடியும் எனவும் யாப்பு மாற்றப்பட்டுள்ளது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் பிரதம மந்திரிக்கும் எல்லைகள் அற்ற அதிகாரங்களை கொடுப்பதை நிறுத்தி, முதலில் 1 தலைவர் என்ற கோட்பாட்டையும் தவிர்த்து மூவர் அடங்கிய தலைமை என்ற ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கவேண்டும். இதன் மூலமே நாம் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாகச் செயல்படமுடியும். பல நாடுகளை அங்கமாகக் கொண்டுள்ள ஐரோப்பிய யூனியனை உதாரணமாகக் கொண்டால், அதன் தலைவராக ஒரு நாட்டவர் எப்போதும் இருப்பதில்லை. சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் அதன் தலைவர்கள் மாறிவருகின்றனர். அதற்காக நாம் தலைவர்கள் மாறவேண்டும் என்று கூறவில்லை, தலைவராக ஒருவர் இருப்பது, பன்னாடுகளைக் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு ஏதுவாக அமையாது என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தற்போது மக்களுக்கு இவ்விடயம் நன்கு புரிந்திருக்கும், மக்களாகிய நீங்கள் இக்கேள்விகளை உங்கள் நாடுகளில் வசிக்கும் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகளிடம் முன்வையுங்கள், ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுங்கள், மக்களாகிய நீங்களே பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்திருப்பதால், இதுகுறித்து கேள்விகேட்கும் தகுதி உங்களுக்கே உள்ளது. யாப்பையும் அதன் சரத்துக்களையும் ஆராய்ந்து அதனை உங்களுக்கு விளக்கியுள்ளோம், அதுவே எங்கள் பணி.

அதிர்வின் ஆசிரியபீடம்.

யாப்பை வாசிக்க இங்கு அழுத்தவும்

Comments