புலிகளின் சார்பில் வாதாட வைகோக்கு அனுமதி வழங்க மறுப்பு


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் தடையை எதிர்காலத்தில் நீடிக்கலாமா? இல்லையா? என்பது குறித்து விசேட விசாரணை நடத்தி வரும் டில்லி மேல் நீதிமன்றம் அவ்வியக்கத்தின் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அங்கு ஆஜராகி வாதாடுகின்றமைக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது.

இவ்விசேட வழக்கு இன்று டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் வந்தது. அப்போது ஆஜரான வைகோ இத்தடை நீடிக்கப்படக் கூடாது என வாதங்களை முன்வைக்கின்றமைக்கு அனுமதி கோரினார்.

அவரது வாதங்களை செவிமடுத்த பின்பே நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரச சட்டவாதி எஸ். தணியாயன் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றை கிளப்பினார்.

புலிகள் இயக்கத்தை வைகோ சேராதவர் என்பதால் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதாட அருகதை அற்றவர் என்று அவர் தெரிவித்தார். இப்பூர்வாங்க ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

புலிகள் இயக்கத்தின் சார்பில் வைகோ வாதாட முடியாது என்று தடை போட்டது. ஆயினும் சட்டத்தரணி ஒருவர் மூலமாக சமர்ப்பணங்களை வைகோ மன்றுக்கு சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்து நீதிபதி இவ்வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

Comments