புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது எஞ்சியிருக்கும் முக்கிய பணியாக சிறிலங்காவுக்கு எதிரான 'போர்க் குற்ற விசாரணை'யே உள்ளது!

சிறிலங்காவின் அரச, இராணுவ தரப்பின் தகவல்களின்படி இறுதி யுத்தத்தின் கடைசி நாட்களில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினாகள் எவரும் உயிருடன் இல்லை என்பது உறுதியாகி வருகின்றது.

கே.பி., தயா மாஸ்ரர் போன்ற சிங்கள அரசுக்குச் சார்பான நிலை எடுக்கக்கூடிய விடுதலைப் புலிகள் தவிர ஏனைய மூத்த உறுப்பினர்கள் அனைவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதை சிங்கள அரச தரப்பு ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்றாலும், அவர்களில் எவரும் தம்மால் தடுத்து வைக்கப்படவில்லை என்று கூறுவதன் மூலம் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்ற செய்தியை ஒப்புக்கொண்டுள்ளது. அவர்கள் தம்மிடம் சரணடையவில்லை, அவர்களை நாம் ஒருபோதும் கைது செய்யவில்லை என்று கூறுவதன் மூலம் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முற்படுகின்றது.
சிங்கள அரசின் போர்க் குற்றங்களும், கைது செய்யப்பட்ட, சரணடைந்த போராளிகள் மீது நடாத்தப்பட்ட கொடூரமான படுகொலைக் காட்சிகளும் ஏற்கனவே ஒளிக் காட்சிகளாகவும், புகைப்படங்களாகவும் வெளிவந்து அதிர்ச்சியளித்த நிலையில், இந்தத் தகவல்கள் ஊடாக வெளிவராத ஆயிரக்கணக்கான படுகொலைக் காட்சிகள் இன்னமும் உள்ளன என்பது தெளிவாகவே புரிகின்றது.

நவீன உலகில், அல்-ஹைதா போல் கோரமான தண்டனைகள் வழங்கப்பட்ட கொடுமைகளட சிங்கள தேசத்தால் மட்டுமே அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படுகின்றது. இலங்கையின் சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் மீது சிங்களம் கொண்டிருக்கும் இனவெறியையும், மனித நாகரிகத்தை இன்றுவரை நிராகரிக்கும் அவர்களது இனக் கொடூரத்தையும் இது அம்பலப்படுத்துவதாக உள்ளது.

1970 களில் சிங்கள தேசத்தின் சித்திரவதைகள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவை. விடுதலைப் போருக்குத் தயாரான அந்த கால கட்டத்தில், இந்தச் சித்திரவதைகள் எப்படித் தாங்கிக்கொள்வது? என்ற பயிற்சியைத் தமிழ் இளைஞர்கள் தாமாகவே மேற்கொண்டனர். தங்கள் நகக் கண்களில் தாமே ஊசி ஏற்றிக் கொள்வது, மிளகாய் சாக்கினால் முகத்தை மூடுவது, மூச்சுத் திணறடிக்க வைப்பது போன்ற சிங்கள அரச சித்திரவதைகளுக்கு நிகரான பயிற்சிகளை மேற்கொண்டு, அதற்குத் தயாராகவே ஆயுதப் போராட்டத்தினுள் நுழைந்தார்கள். காலப் போக்கில், சிங்கள சித்திரவதைகளிலும் பார்க்க 'சயனைற்' குப்பி கடித்து உயிரை மாய்ப்பது அவர்களுக்கு இலகுவானதும், இரகசியங்களைப் பாதுகாப்பதற்குமான வழியாக மாற்றம் பெற்றது.

முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் 'இரகசியங்களைப் பாதுகாத்தல்' என்ற அவசியமே இல்லாத அளவிற்கு விடுதலைப் புலிகளின் அனைத்துக் கட்டமைப்புக்களும் சிதறடிக்கப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் போராளிகளும், கீழ் நிலைப் போராளிகளும் தமது சீருடைகளையும், ஆயுதங்களையும், குப்பியையும் களைந்து தப்பிச் செல்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனாலும், இறுதிக் கணங்களில் தப்பிச் செல்வது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகியிருந்தது. பலர் வேறு வழியின்றி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தார்கள். சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் அதிருப்தி கொண்ட மக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். இவ்வாறு சுமார் 30,000 வரையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிங்களப் படைகளிடம் சிக்கிக் கொண்டனர்.

சரணடைந்த மக்களின் தொகையையோ, கைது செய்யப்பட்ட போராளிகளின் தொகையையோ என்றுமே வெளிப்படுத்தாத சிங்கள அரசு அவ்வப்போது சில குறைக் கணக்குகளை அறிவித்தது. அதன்படி, தங்களால் 14,000 வரையிலான போராளிகள் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்த சிங்கள அரசு தற்போது அதையும் 11,000 ஆகக் கணக்கு முடித்துள்ளது. அதுவும், இதில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் யுத்தத்தின் கடைசி நாட்களில் பலவந்தமாக இணைத்துக்கொண்டவர்கள். கள அனுபவமும், இலட்சிய உறுதியும் அடையாத இந்த இளம் போராளிகள் தமது எதிர்கால நகர்வுக்குப் பயன்படலாம் என்ற நம்பிக்கையோடு இவர்கள் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான வே. பாலகுமாரன், யோகி, புதுவை இரத்தினதுரை, எழிலன் உட்பட ஏனைய 19,000 போராளிகள் சிங்கள அரச படைகளால் அவர்கள் பாணியில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதே அனைவரது முடிவாகவும் உள்ளது.

எழிலன் உள்ளிட்ட ஏழு சிரேஸ்ட தலைவர்கள் படையினரிடம் சரணடைந்ததாகவும், இராணுவத்தினர் மறைமுகமான இடத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரன் அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். அதை பி.பி.சி. தமிழோசை ஊடாக உலகிற்கும் தெரிவித்துள்ளார். இந்தப் பரபரப்பின் மத்தியில், ஆனந்தி சஷிகரனின் இந்தக் கூற்று உண்மைக்குப் புறம்பானதெனத் தெரிவித்துள்ள சிறிலங்காவுக்கான இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்கள் இராணுவத்தினால் தடுத்து வைக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

இராணுவத்தில் சரணடைந்த சகல விடுதலைப் புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எழிலன் உள்ளிட்ட குழுவினர் அரசாங்கப் படையினரிடம் சரணடையவில்லை எனவும், இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரகசியமான தடுப்பு முகாம்களை பேணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தேசங்களில் சிறிலங்காவின் யுத்தக் குற்றங்களுக்கெதிரான போராட்டங்களும், நடவடிக்கைகளும் படிப்படியாக ஓய்வு நிலைக்குச் சென்று விடுமோ என்று அச்சங் கொள்ளும் நிலையிலேயே உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவும், பொருளாதார பலமும் சேர்த்த புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது எஞ்சியிருக்கும் முக்கிய பணியாக சிறிலங்காவுக்கு எதிரான 'போர்க் குற்ற விசாரணை'யே உள்ளது. புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படக் கூடிய இந்த சட்ட நடவடிக்கை மூலம் சிங்கள தேசத்தின் இன வன்முறைக் கொரூரம் சர்வதேச நீதி அரங்குகளில் அம்பலப்படுத்தப்படும் பட்சத்தில், சிறிலங்கா அரசு போர்க் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டால் ஈழத் தமிழர்கள் பிரிந்து சென்று தமிழீழ தனியரசை உருவாக்குவதற்கான சட்டபூர்வ உரிமையைப் பெற்றுக் கொள்வார்கள்.

இந்த யாதார்த்தத்தை அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான போர்க் குற்ற விசாரணையை விரைவு படுத்த ஒன்றிணைந்து களத்தில் பணியாற்றுவதே, எமக்காகப் பலியான அந்த மக்களுக்கும், மறவர்களுக்கும், எம் நிமித்தம் நொருங்கிப்போயுள்ள தமிழீழத்திற்கும், கொடுமைகளுக்குள் புதைந்து போயுள்ள தமிழீழ மக்களுக்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாக அமையும்.

- ஈழநாடு-

Comments