சமாதானம் என்று கூறிக்கொண்டு 2002ம் ஆண்டு இலங்கைக்குள் காலடி எடுத்துவைத்தது நோர்வே. அதனை அவர்கள் ஏற்படுத்தினார்களோ இல்லையோ, குறைந்தபட்சம் இலங்கையில் நடந்த மனிதப் படுகொலைகளையோ, இல்லை இன அழிப்பையோ இவர்களால் நிறுத்த முடியவில்லை என்பதை எல்லோரும் நன்கு அறிவர். அடிக்கடி இலங்கை சென்று ஜனாதிபதி உட்பட, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களையும் அடிக்கடி சந்தித்துவந்த நபர் எரிக் சொல்ஹைம். சமாதானத் தூதுவராக இவர் செயல்பட்ட காலம்போய் தற்போது இலங்கை அரசின் பக்கம் சாய்ந்து பக்கசார்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் என்பது பழைய கதை. ஆனால் புதிய கதைகளும் அரங்கேறியுள்ளது.
நேற்றைய தினம நியூயோர்க் நகரில், ஜனாதிபதி மகிந்தவை இவர் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். அப்போது தான் நோர்வேயில் உள்ள பல தமிழர்களோடு பேசியிருப்பதாகவும், அதில் பெரும்பான்மையான தமிழர்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கவே விரும்புவதாக, மகிந்தவுக்கு இவர் எடுத்துரைத்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. சுமார் 12,000 த்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் நோர்வே நாட்டில் வசித்துவருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழீழ மக்களவைக்கும், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கும், தற்போது நடைபெற்ற நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமது வாக்குகளை போட்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை மீண்டும் வலுயுறுத்திக் காட்டியிருந்தனர். இது உலகறிந்த விடயம்.
ஆனால் எரிக் சொல்ஹைமின் காலைப் பிடித்து திரியும் சில அடிவருடிகள் சொல்வதை கேட்டும், மற்றும் குறிப்பிட்ட சிலரோடு மட்டும் பேசிவிட்டு, ஏதோ நோர்வேயில் உள்ள மொத்தத் தமிழர்களும் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்க இருப்பதாக எரிக் சொல்ஹைம் கூறியிருப்பது அடிமுட்டாள் தனமாகும். தமிழ் மக்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை நோர்வே தமிழர்கள் பல முறை நிரூபித்துவிட்டனர். அதிலும் மக்களவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடு கடந்த தமிழீழ அரசு, என பல கட்டமைப்புகள் அங்கு இயங்கிவரும் நிலையில், தமிழர்களின் ஏகோபித்த அபிலாஷை இது தான் என்று கூற எரிக் சொல்ஹைம் யார்?
வெறுமனவே மகிந்தவை திருப்திப்படுத்த இவர்கள் போன்ற பச்சோந்திகள் முனைகிறார்களே அன்றி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இவர்கள் இன்னும் செயல்படவில்லை. 18 வது திருத்தச் சட்டத்தை உலகில் உள்ள பல ஜனநாயக அமைப்புகள் எதிர்த்துள்ளன, நீதித் துறை, தேர்தல் ஆணையாளரை நியமிப்பது, போலீஸ் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியைக் கட்டுப்படுத்தும் சில மேலதிக அதிகாரங்களும் தற்போது இச் சீர்திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கைகளில் விழுந்துள்ளன. இது குறித்தோ இல்லை மனிதப் படுகொலை குறித்தோ ஆராயாத எரிக் சொல்ஹைம், நோர்வே தமிழர்கள் உங்களுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள் என மகிந்தவிடம் அசடு வழிந்துள்ளார். இதனை மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதும் இல்லை.
எனவே எரிக் சொல்ஹைமுடன் இணைந்து செயல்படுவோரை நாம் முதலில் இனம்காண வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்களே எமது பாதையை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்ல திட்டங்களைத் தீட்டிவருகின்றனர்.
அதிர்வின் ஆசிரியபீடம்!
Comments