யுத்தம் முடிந்து விட்டது. புலிகளை அழித்து விட்டோம் என்று கூறி இரவு பகலாக சிங்களப் பிரதேசங்களில் கொண்டாட்டங்கள். கொழும்பில் நடுத் தெருவில் “பால்ப் பொங்கல்”, சரத் பொன்சேகாவை ஒர் மாபெரும் வீரனாக பல பல வர்ணிப்புக்கள். பௌத்த சிங்கள அரசு, மந்திரிசபை, நாடாளுமன்றம் எல்லாம் ஒரே ஆரவாரம்.
ஆனால், அரசுடன் பல வருடகாலமாக சேர்ந்திருந்த ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, முரளிதரன் (கருணா) போன்றோர் மனங்களில் ஏக்கம். தமது பெறுமதி, வருமானம், ராஜபோக வாழ்க்கை ஆகியவை முடிவுக்கு வரவுள்ளதை நன்றாக தெரிந்து கொண்டார்கள்.
போராட்டத்தை முன்னின்று நடத்தியோர், ஆதரவு கொடுத்தோர் யாவரும் தடுப்பு முகாங்கள், வதைமுகாங்கள், கொலை முகாங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இப்பொழுது தான் ராஜபக்சாக்கள் தங்கள் சுயரூபத்தை காட்ட ஆரம்பிக்கிறார்கள். அவர்களது முதல் இலக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். கைது, தடுப்பு முகாம், நீதிமன்றம், தண்டனை ஆகியவை யுத்தத்தை வென்றெடுத்த “கதாநாயகன்” சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுகிறது.
கருணா, டக்ளஸ், ஆனந்தசங்கரி
புலிகளின் யுத்த நுட்பங்கள், இரகசியங்களை அன்போடு வாரிவழங்கிய கருணாவுக்கு மந்திரிப் பதவி பறிக்கப்பட்டு உதவி மந்திரிப் பதவி வழங்கப்படுகிறது. ராஜபக்சவை எதிர்த்தால் அதுவும் போய்விடும் என்ற பயத்தில் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார் கருணா.
டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் யாழ் மாநகரசபைத் தேர்தலில், சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். “ஐயோ இதென்ன கொடுமை” என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி மாநகரசபைத் தேர்தலில் சிங்கள பௌத்தர்களாக மாறிய டக்ளசின் ஆட்கள் அரைகுறை வெற்றிலை பெற்றுக் கொண்டனர்.
அது மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்தில் 13வது திருத்தச் சட்டம் பற்றி உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்சவிடம் இருந்து “பொத்து வாயை” என்ற விரல் சைகையுடன் அடங்கியவர் தான், இன்னும் வாய் திறக்கவில்லை.
மடல் வீரன் ஆனந்தசங்கரி, யுத்தம் முடிந்தபின்னர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதங்கள் பல, ஆனால் ராஜபக்ச இவற்றை வாசிக்காது அவரது குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாராம். இதனால் கவலையடைந்த சங்கரியார், தனது மடல்களை தொடந்து இந்தியாவிற்கே கவலையுடன் எழுதுகிறாராம்.
பவங்கள், இதென்ன கொடுமை, தமிழரின் தேசியத்தைத் தாரைவார்த்துக் கொடுத்து, நிலத்தை மறந்து, அரசியல் உரிமையை மறந்து – தமிழீழத்தை வென்றெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க உதவியவர்களுக்கு இந்த நடப்பா, பரிசா?
இதை உணர்ந்துதான் தேர்தல் காலத்தில் டக்ளஸ் தேவானந்தா கூறினார். “தெரிந்த பிசாசு, தெரியாத தேவதையை விட நல்லது” என. டக்ளசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளை நீண்டகாலமாக தெரியும். ஆனால் ராஜபக்சாக்களை இப்பொழுது தான் தெரிய ஆரம்பித்துள்ளார். இன்னும் சிலகாலத்தில் இவர்கள் முற்றாக அறிவார்கள்!
18 வது திருத்தச் சட்டம்
தெருவில் பால் பொங்கல் செய்தவர்களும், யுத்த வெற்றியை கொண்டாடியவர்களும் இப்பொழுது தான,; 18 வது திருத்தச் சட்டம் பற்றி மூக்கில் விரல் வைத்து யோசிக்கின்றனர். திருத்தச் சட்டம் தமிழர் கூட்டமைப்பின் நம்பிக்கைக்கு உரிய அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரின் வாக்குடன் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. சிறிலங்காவில் ஜனநாயக முறையான குடும்ப சர்வதிகாரம் நேற்றுடன் ஆரம்பமாகியுள்ளது.
தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகார முறையை மாற்றுவதற்கு தெற்கில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் வாக்களித்தனர். ஆனால் சுகபோக ராஜவாழ்க்கையில் ருசிகண்ட ராஜபக்சாக்கள் தெற்கில் உள்ள சிங்கள மக்களை ஏமாற்றிவிட்டார்கள். ராஜபக்சக்கள் தாம் செய்த அநியாயங்கள் அட்டூழியங்கள் வெளிவராது பார்பதற்கு, “அதிகாரத்தில் அழியா வரம்”; கேட்கிறார்கள். ராஜபக்சாக்களின் திருகுதாளங்களை இப்போது தான் தெற்கின் பௌத்த சிங்களவாதிகள் புரியத் தொடங்கியுள்ளார்கள்.
சிங்கள மக்களையே ஏமாற்றுகிற ராஜபக்சாக்கள், தமிழ் மக்களுக்கு என்ன உரிமையை கொடுப்பார்கள் என்ற உண்மையை, நாம் இங்கு சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா?
ராஜபக்சாக்களின் உண்மையான திட்டம் என்ன வெனில் அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தது இரண்டு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து தெரிவாக்குவதே! இதற்காக டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா ஆகியோர் இரவு பகலாக உழைக்க வேண்டும். இதை இவர்கள் செய்ய மறுத்தால், இவர்களுடைய உதவியுடன் முன்பு வேறு இடங்களுக்கு சென்ற “வெள்ளை வான்கள்” இவர்களையே தேடிவரும் காலம் உருவாகியுள்ளது.
ஆகையால் இன்னும் காலதாமதம் செய்யாது, தேசியத்தை உணர்ந்து, மீண்டும் உங்கள் நிலம், மொழி, கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கும், வளர்ப்பதற்கும் ஒன்று இணையுங்கள். இனியும் உங்களை பௌத்த சிங்கள வாதிகள் பராமரிப்பார்கள் என்று கனவு காணாதீர்கள்.
“கதாநாயகன்” சரத் பொன்சேகாவுக்கே இந்த நிலையென்றால,; உங்;கள் நிலையை சிறிது சிந்தித்து பாருங்கள்! “வெள்ளம் வரும் அணையை கட்டுங்கள்”! ஜக்கிரதை, ஐ. நா. வின் போர் குற்றச்சாட்டுக்களை ராஜபக்சாக்கள் உங்கள் தலைகளில் சுமத்துவார்கள். கருணவுக்கு கல்முனை சம்பவமும், டக்ஸிற்கு அமெரிக்க அலன் தம்பதிகளின் சம்பவமும் மனதிலிருந்தால் நல்லது.
நன்றி: ஈழமுரசு (09/09/2009)
Comments