வன்னியில் நடந்த பேரவலம் சந்திர மண்டலத்தில் நிகழ்ந்த சங்கதியா?

வன்னியில் நடந்த யுத்தம் தொடர்பான விசார ணை இடம்பெற்று வருகின்றது. படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணைகளை செய்து வருகின்றது. விசாரணைக்குழுவின் நியமனம், விசாரணை, சாட்சியம் என்பவற்றை எல்லாம் பார்க் கும் போது வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர் கள் வன்னியில் யுத்தம் நடத்திவிட்டு போனது போன்றதொரு பிரமை ஏற்படுகின்றது- ஏற்படுத்தப்படுகின்றது.



அந்த அளவிற்கு விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. வன்னி யுத்தத்தின் போது பொசுபரஸ் குண்டு கள் வீசப்பட்டன. கொத்துக்குண்டுகள் போடப்பட் டன என்பதெல்லாம் வன்னிமக்கள் நேரில் அனு பவித்த நிஜங்கள். இந்த நிஜங்கள் தெரியாமல் இருக்கின்ற போதுதான் உள்ளக விசாரணைகள் தேவை யாக இருக்கும். ஆனால் பொசுபரஸ் குண்டுக ளை வீசியவர்களும் கொத்துக்குண்டுகளைப் போட்டவர்களும் இந்த நாட்டில்தான் இருக் கின்றனர்.

இதைச் செய்விப்பதற்கு படைத்தளபதிகள், பாதுகாப்பு அமைச்சு, அவை யாவற்றிற்கும் உத்தரவிடும் அதிகாரம் கொண்டவர்கள் என்ற மிகப்பெரியதொரு கட்டமைப்பு இருந்து அனைத் தையும் நடத்தி முடித்தது.நிலைமை இதுவாக இருக்கும் போது அதற்கு ஒரு விசாரணைக்குழு அமைத்து அந்த விசார ணைக்குழு சாட்சியங்களைப் பதிவுசெய்து, அதனை அறிக்கைப்படுத்தி அரசின் உயர்மட்டத் திடம் கையளிக்க,

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை அரச உயர்மட்டம் வாசித்து குற்றம் இழைத்தவர்களுக்கு தண்ட னை வழங்கும் என எதிர்பார்ப்பது நடக்கக் கூடிய காரியமா என்ன?செய்தவர்களும் அனுபவித்தவர்களும் இங் கேயே இருக்கின்றனர். துயரத்தை- பேரவ லத்தை அனுபவித்தவர்கள் தங்கள் சோகத் தைச் சொல்ல அவை அறிக்கை வடிவில் செய்த வர்களுக்கே போய்ச் சேரும் பரிதாபம் உலகில் எங்கும் நடந்ததாக வரலாறில்லை.

யுத்தம் நடத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்ற இருவகுதியினரினதும் நியாயத்துவத்தை விசாரிப்பதாக இருந்தால், அதனை மூன்றாம் தரப்பே செய்யமுடியும். பரவாயில்லை. கொத்துக் குண்டுகளுக்கு குடும்பமாய் உயிரைக் கொடுத்த கொடுமையை கண்னால் கண்டு அந்தச் சடலங்களின் சிதைவு களைக் கடந்துபோய் முட்கம்பி வேலிக்குள் இருந்த நமக்கு விசாரணைகள் அந்த அவ லத்தை மீண்டும் ஒருகணம் ஞாபகப்படுத்தட்டும்.

எதுவாயினும் வன்னி யுத்தத்தில் நடந்த அவலங்கள் எதுவும் சந்திரமண்டலத்தில் நடந்த சங்கதிகள் அல்ல. அவை சனல்-4 உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்த பகிரங்கங்களே.சிலவேளை வன்னி யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகளை ஐ.நா.சபைச் செயலாளர் கோபி அனான் உலங்கு வானுர்தியில் சென்று பார்த்த மையால், வன்னி யுத்தத்தை சந்திரமண்டலத்து சங்கதிகளாக சிருஷ்டிக்க உரியவர்கள் நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.

— வலம்புரி ஆசிரியர் தலையங்கம்

Comments