சிறுவர் உரிமைகள் பற்றிப் பேசுபவர்கள் இப்போது எங்கே போய்விட்டார்கள்?

இலங்கையில் போர் உச்சக் கட்டமாக இருந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையில் இணைக்கிறார்கள் என்று உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டின. அந்த வேளையில், இலங்கை அரசாங்கமும் தனது படையில் வறிய சிங்களச் சிறுவர்களையும் மாணவர்களையும் படையில் சேர்த்தது. அதையெல்லாம் அரச பிரச்சாரவாதிகள் மூடிமறைத்துவிட்டனர்.

இப்போது போர் முடிந்து, புலிகள் இனி இல்லை என்று அரசு மார்தட்டிய பிறகும், போர் நடந்த பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தடுப்பு முகாம்களிலும் வெளியிலும் தமது அடிப்படைத் தேவைகள் கூடக் கிடைக்காமல் வாடுகின்றனர். தினமும் சிறுவர்கள் இறக்கின்றனர், கடத்தப்படுகின்றனர், காணாமல் போகின்றனர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர், சித்திரவதைக்கு உட்படுகின்றனர்.

இதுவரைக்கும் இச்சிறுவர்களுக்காக எத்தனை சிறுவர் உரிமைகள் அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன? இவர்கள் சிறுவர் படை குறித்து முதலைக் கண்ணீர் வடிக்க மட்டுமே அருகதையானவர்கள். சிறுவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய இக்கட்டத்தில், ஒரு ஐ.நா அமைப்பு ஆரம்பத்தில் இதுகுறித்துப் பேச வெளிக்கிட்டும் கூட பின்னர் ஒன்றையும் காணோம். இவர்கள் எல்லாம் அரசியல் ரீதியாக இயங்குகின்ற அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஆகிவிட்டன.
தமது படையினர் ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் மனித உரிமைகளையும் வைத்துக்கொண்டே சண்டையிடுகிறார்கள் என்று மஹிந்த ராஜபக்ஷவும் அவரது தரப்பினரும் வாய்க்கு இதமாக உரைகளையும் அறிக்கைகளையும் விட்டுள்ளனர். ஆனால் உண்மையில் நடப்பதோ நேருக்கு மாறு.

வடக்குக் கிழக்கில் உள்ள படையினர் ஒரு கையில் துப்பாக்கியையும் அடுத்த கையில் போர்வையையும் கொண்டுசென்று எத்தனையோ பெண்களைக் கற்பழித்துள்ளனர்... அப்பெண்களின் உடல்கள் புதர்களிலும், கிணறுகளிலும், காடுகளிலும், வேறு இடங்களிலும் காணப்பட்டன... இதனால் பாதிக்கப்பட்ட எத்தனையோ மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்... புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என அழுத அமைப்புகள், இவ்வாறான மீறல்களை எல்லாம் அவர்கள் செய்தார்களா என்று சிந்திக்கிறார்களா?

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிப் பேசி பெருமளவு நிதியைச் சேகரித்த உள்ளூர் அமைப்புகள் இப்போது வாயை மூடிவிட்டன. அரசாங்கமோ வடக்குக் கிழக்கின் அபிவிருத்தி பற்றிப் பேசுகிறது. இது ரோம் நகர் எரியும்போது பிடில் வாசித்த கதையாகத் தான் உள்ளது.

வடக்குக் கிழக்கில் சொந்த நிலங்களிலிருந்து இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடக் கொடுக்க முடியாமல் உள்ள அரசாங்கம், தென்பகுதியிலிருந்து 200,000 இலட்சம் சிங்களவர்களைக் கூட்டிவந்து சகல வசதிகளுடனும் தமிழர்களின் வர்த்தக கட்டடங்களைக் கூட அவர்களுக்குத் தாரை வார்த்துக் குடியமர்த்தியுள்ளது.

கடந்த ஓராண்டுக்குள் 50,000 இராணுவத்தினர் தமது குடும்பங்களுடன், தமது வேலைக்காரர்களைக் கூடக் கூட்டிவந்து வடக்கில் குடியேறியுள்ளனர். இந்தக் குடியேற்றமானது எதிர்கால பொதுத் தேர்தலை நோக்கமாக வைத்து இரு சிங்கள நா.உ களால் நடத்தப்படுகிறது.

இதுதவிர, புலம்பெயர் தமிழர்கள் வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவ வேண்டுமென்று அரசு கேட்கிறது. அப்படியானால் புலம்பெயர் சிங்களவர்கள் வடக்குக் கிழக்கைத் தவிர பிற மாகாணங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்தா உள்ளார்கள்?

மேலும், போரின்போது விடுதலைப் புலிகளிடமிருந்து முள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்ட நகைகள் பணங்கள் எங்கே போய்விட்டன? அவற்றின் முழு மதிப்பு என்ன? த.பு.க இன் வங்கிக் கணக்குகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எங்கே?

உள்நாட்டுக் குரல் தவிர, சர்வதேச சமூகம் அதுவும் ஐக்கிய நாடுகள் கூறிய எதையாவது இலங்கை எப்போதாவது செவி மடுத்துள்ளதா? ஐக்கிய நாடுகள் செயலாளர், மனித உரிமைகள் சபை பணிப்பாளர்கள், பாதுகாப்புச் சபை என்று ஐ.நா இன் எந்தப் பகுதியில் இருந்தும் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எதையுமே இலங்கை கேட்கவில்லை. இதே நிலைதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் சொல்லுக்கும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சர்வதேச சமூகங்கள் இலங்கைக்கு எதிராகச் செயற்படவேண்டிய தகுந்த தருணம் இதுவாகும். இதை சர்வதேச அளவிலுள்ள இலங்கைப் பரப்புரையாளர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Comments