நடந்து முடிந்தது நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அமர்வா? அல்லது சிங்கள தேசத்தின் 'முள்ளிவாய்க்கால் 2' சதியா?
![](http://www.eelanadu.info/images/stories/rudrakumaran.jpg)
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் கூடிய நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தொலைக்காட்சித் தொடர்பாடல் மூலம் இணைக்கப்பட்டிருந்தனர். இந்த அமர்வு இடம் பெறுவதற்கு முன்னரே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 115 உறுப்பினர்களின் தேர்வு நடைபெற்று முடியாத நிலையிலும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பலரது தெரிவுகள் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் இந்த அமர்வு நடைபெறுவது ஜனநாயக விரேதமானது என்பதை அதன் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சுட்டிக் காட்டியதை நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தற்காலிக முதன்மை நிறைவேற்றுனர் திரு. விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் நிராகரித்திருந்தார்.
![](http://www.eelanadu.info/images/stories/tgte_03.jpg)
![](http://www.eelanadu.info/images/stories/tgte_10.jpg)
எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் தமக்குச் சாதகமான நிலையில் இருக்கும் இன்றைய நிலையைத் தவற விட்டால், தமது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட கே.பி. குழுவினர் ஜனநாயக முறைமைக்கு மாறாக இந்த இரண்டாவது அமர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தனர். இது, தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்தது. இருந்த போதும், வாக்கெடுப்பின் மூலம் சில முக்கியமான நகர்வுகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த அமர்வுகளில் பங்கேற்க ஒப்புக்கொண்டனர்.
![](http://www.eelanadu.info/images/stories/tgte_08.jpg)
லண்டனில் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர் ஒருவருக்கு நிதி அமைச்சின் செயலாளர் பதவியும் சில சலுகைகளும் வழங்க ஒப்புக் கொண்டதால், தான் லண்டனில் நடைபெறும் அமர்வைவப் புறம் தள்ளிவிட்டு, பாரிஸ் நகருக்கு வந்ததாக அவரே தெரிவித்தார். சுவிசிலிருந்து செல்வி சுகன்யா புத்திரசிகாமணி அவர்கள் பிiதிச் சபாநாயகர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டு அமெரிக்கா அழைக்கப்பட்டார். இன்னும் பலருக்கு அமைச்சுப் பதவிகள் பேரம் பேசப்பட்டதுடன் ஊக்கத் தொகைக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டது.
முதற்கட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பக்கம் 42 உறுப்பினர்களாக இருந்த பலம், அடுத்து வந்த வாக்கெடுப்புகளில் மாற்றங்கள் பெற்றது. வாக்கெடுப்புக்களில் கலந்து கொள்ள முடியாதவர்களின் வாக்குக்கள் அமர்வுகளில் பங்கேற்றவர்களின் ஊடாகப் பிரயோகிக்கும் அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போதும், பின்னர் அது மாற்றப்பட்டு, அமர்வின் இறுதி நாளில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கை ஓங்கவிடாமல் தடுப்பரண் போடப்பட்டது.
![](http://www.eelanadu.info/images/stories/070810%20004.jpg)
முதலில் அங்கீகரிக்கப்பட்டது போல், சபைக்கு வர முடியாதவர்களின் வாக்குக்கள் அவர்களால் பொறுப்புரிமை வழங்கப்பட்டவர்களால் பிரயோகிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் கோரிக்கை இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால் உருவான பதற்றம் இறுதியில் தாக்குதல் நிலையை எட்டியது. அமெரிக்காவில் இடம்பெற்ற கனடியப் பிரதிநிதியான ஈசன் குலசேகரம் அங்கு பிரசன்னமாகியிருந்த கே.பி. குழுவின் அடியாட்களால் தாக்கப்படும் நிலை சிலரது தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்ட போதும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், தனது பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்தப் பிரச்pசனைக்குத் தீர்வு காணப்படாத நிலை தொடர்ந்த காரணத்தால், தமிழ்த் தேசிய உயர்வாளர்கள் நியூயோர்க் மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள்.
அவர்களைத் தொடர்ந்து பாரிஸ், லண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் தமது அதிருப்திகளைத் தெரிவித்துவிட்டு, சபையை விட்டு வெளியேறினார்கள்.
இதன் பின்னர், தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் எஞ்சிய 47 உறுப்பினர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்பட்டதுடன், சர்வ வல்லமை கொண்ட பிரதமராக கே.பி.யால் நியமிக்கப்பட்ட திரு. விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அரசியல் யாப்பு அங்கீகாரத்தையும், பிரதமர் தெரிவையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் தமது அடுத்தகட்ட நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் தமிழர் பலத்தைச் சிதைத்த சிங்கள தேசம், புலம்பெயர் நாடுகளில் தனக்குச் சவாலாக மேலெழுந்து வரும் தமிழீழ விடுதலைக்கான தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அணிதிரள்தலை கே.பி. குழுவினர் ஊடாகச் சிதைப்பதற்கு முயற்சிப்பதன் ஒரு அங்கம் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் தகர்க்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 47 உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்காத நிலையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பின் செல்லுபடித் தன்மை குறித்தும், பிரதமர், சபாநாயகர்கள் தெரிவு குறித்தும் சட்ட வல்லுனர்களது கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியத்திற்கான நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கே.பி.யால் அறிமுகம் செய்யப்பட்டது. இதை அறிமுகம் செய்வதற்குப் பல வருடங்களுக்கு முன்பிருந்தே சிங்கள அரச தரப்புடன் கே.பி. தொடர்பில் இருந்துள்ளார். எனவே, நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் சிங்கள அரசே இந்த எதிர்ப் புரட்சிப் பொறியைப் புலம்பெயர் தேசங்களில் உருவாக்க முனைந்துள்ளது என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அச்சம் அமர்வின் இறுதி நாளில் இடம்பெற்ற சம்பவங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளுக்கான தனது செயற்பாடுகளின் பொறுப்பாளராக கே.பி.யால் அறிவிக்கப்பட்ட வேலும்மயிலும் மனோகரன் கடந்த மாதத்தில் ஜி.ரிவி.யில் தெரிவித்த கருத்தும், பாரிசில் நடைபெற்ற இறுதிநாள் அமர்வில் அவர் கலந்துகொண்டு அதை நெறிப்படுத்தியதும் இந்த உறுதிப்படுத்தலுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே உள்ளது.
புத்திசாலித்தனமாக இந்த வலையில் சிக்கிக் கொள்ளாத தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் முன்னே பல்வேறு பணிகள் குவிந்துள்ளன. தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் மட்டுமல்ல, விடுதலைக்காக ஏங்கும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் விரைவாகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன், சட்டபூர்வமற்ற விதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் ஒரு சார்பினரால் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பும், பிரதமர், சபாநாயகர்கள் தெரிவையும் நிராகரித்துவிட்டு, பெரும்பான்மை பலத்துடன் புதிய நகர்வுகளையும் மேற்கொண்டு எதிரியின் ஆயுதத்தைப் பறித்தே எதிரியைத் தாக்கும் தேசியத் தலைவர் அவர்களது பாதையில் நாடு கடந்த தமிழீழ அரசையும் பறித்தெடுக்கப்பட்ட ஆயுதமாகக் கொண்டு எதிரியைப் பலம் இழக்கச் செய்யும் போரை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அத்தனை தமிழர்களின் பெரு விருப்பாக உள்ளது.
ஈழநாடு
Comments