2009 மே 18 க்குப் பின்னர்: ஈழத் தமிழரின் தாயகக் கனவை நிர்மூலமாக்கும் போலித்தலைமைகளும் புலம்பெயர் தமிழச் சமூகமும்….?

.".......................பட்டறிவும் படிப்பறிவும் நம்மைப் புடம் போட்டுப் படிப்பிக்கும் படிப்பினைகளை ஏற்காத தனி மனிதனோ அல்லது சமுதாயமோ உலகில் உயிர்வாழ முடியாது. இவைதான் பரிணாம மாற்றங்களின் அவசியமும் அடிப்படையும் ஆகும். இன்று சமநோக்குப் பார்வை சார்ந்த விமர்சனங்கள் கூடத் தரங்கெட்ட தாக்குதல்களுக்கும் துரோகப் பட்டத்துக்கும் உட்படுத்தப் படுவது ஆரோக்கியமான விடையம் அல்ல. ஆனால் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் பாரம் பரியம் தமிழ்ச் சங்கப் புலவர் நக்கீரனும் சிவனும் வாதிட்ட கதை மூலம் எமது இனத்தில் உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது......................"


* நான் செய்வது துரோகம் அல்லது காட்டிக் கொடுப்பு என்றால் என்னைத் துரோகி என எவரும் சொல்லும் உரிமை இருக்கிறது. அப்படிக் கூறுவதே நியாயமும் ஆகும். இதற்கு மறுதலையாகச் சொல்வதானால் மடியில் கனம் இல்லை என்றால் வழி பறிப்புக்கு ஏன் பயப்பட வேண்டும்? என்ற பழ மொழியைக் கூறலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகப் பாராளுமன்ற அரசியலில் தமிழரின் தமிழீழத்தாயகக் கோரிக்கையை பிரதிநிதிப் படுத்த உருவாக்கப்பட்டதே தமிழர் தேசியக் கூட்டமைப்பு. இவர்களின் தமிழரின் தேசியம் தமிழீழத் தாயகம் பற்றிய கொள்கை உறுதிப்பாடு பற்றி மக்களுக்குத் தெளிவு ஏற்படாத நிலையில், புலிகள் இயக்கம் கூறிய ஒரே காரணத்தால் பதவிக் கதிரைகளுக்கு வந்தவர்கள்தான் த.தே.கூ. ஆயினும் அதன் உறுப்பினர் திம்பு பேச்சு வர்த்தைகளின் போது இக்கோரிக்கைகளை ஒரு முகமாக முன்வைத்த வரலாற்றைக் கொண்டவர்கள் என்பதால் தங்க முலாம் பூசிய பித்தளைகளா? பத்தரை மாற்றுத் தங்கமா என எவரும் உரைத்துப் பார்க்க முயன்றது கிடையாது. இந்த நம்பகத் தன்மையை இவர்கள் காப்பாற்றி வருகிறார்களா என்பதை இவர்களின் கடந்த கால மற்றும் நிகழ்கால செயற்பாடுகளை வைத்தே பார்க்க வேண்டும். நாம் விரும்பியோ விரும்பாமலோ இத்தகைய ஒரு ஆய்வை நடு நிலையுடன் செய்யாது விட்டால் நாம் வரலாற்றுப் பாடங்களை மறந்து விட்டோம் என்பதையே காட்டும்.

நான்காவது ஈழப் போரின் போது த.தே.கூ தனது அதீதமான மெத்தனத்தாலும் மௌனத்தாலும் சிங்களத்தின் போருக்கு அங்கீகாரம் அளித்ததா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாத நிலை தெரிகிறது. ஐ.நா.வுக்கு வந்த டக்ளஸ் புலிகளைப் பயங்கரவாதிகள் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற போதும் கூட இவர்கள் தமிழ் மக்கள் சார்பாக அரசின் முறையற்ற போருக்கு எதிராகப் போதிய அளவு எதிர்ப்புக் குரல் எழுப்பினார்களா?

மக்களின் பிரதிநிதி என்ற தார்மீக உரிமை கூட இல்லாத வீரசிங்கம் ஆனந்த சங்கரி சாகடிக்கப் பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் என்ற உரிமையில் புலிகளுக்கு எதிரான அறிக்கைப் போர் செய்த போதும் கூடப் புலிகளின் தயவில் பதவியைப் பெற்றுக் கொண்ட த.தே.கூ. எங்கே என்ன செய்தார்கள் என்பது எவருக்காவது தெரிந்தால் தகுந்த ஆதாரங்களுடன் தெரியப்படுத்த வேண்டும்.

புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று உலக நாடுகளில் அரசும், அரசின் கைக்கூலித் தமிழர் சிலரும் பிரச்சாரம் செய்து 32 நாடுகளில் தடைசெய்த நிலையிலும் இவர்கள் இல்லை இது ஒரு இனத்தின் விடுதலை இயக்கமே தமிழரின் அமைதி வழி அரசியல் தோற்றதால் ஆயுதமேந்திய புரட்சியாளர் என,

* எங்காவது இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா?
* எங்கே ?
* எப்போ?
* எவரிடம்?

புலிகளைத் தடை செய்த நிலையில் வைத்த படியே ஈழத் தமிழரின் தனித் தமிழீழக் கனவை அழித்து விட இலங்கை இந்திய அரசுகள் செய்யும் எத்தனங்களுக்கு வசதியாக த.தே.கூட்டமைப்பினது செயற்பாடுகள் இல்லை என்பதை எப்படி நிரூபிப்பர்?

முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்குப் பின்னர் தமிழரின் அவலங்களுக்குப் பரிகாரம் எதுவும் செய்யாத நிலையில் மகிந்த அரசு நடக்திய ஜனநாயக மை பூசும் வேலைகளான, எல்லாம் வழமையாகி விட்டதாகக் காட்ட நடத்திய தேர்தலில் பங்கு பற்றி மகிந்தரின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு மறைப்புத் திரை போட உதவியது எப்படித் தமிழ்த் தேசியமாகும்? அதுவும் போரின் போது புலம் பெயர் தமிழர்களுடன் தோளோடு தோள் கொடுத்து உலக நகர வீதிகளில் மக்கள் எழுச்சிகளை நடத்திய ஏனைய உறுப்பினர்களை கூட்டமைப்பிலிருந்து நீக்கியது தமிழர் தேசியமா?

முட்கம்பி முகாம்களில் உள்ள மக்களைப் பார்க்க விடாது தடுத்த போது அதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்குத் தாக்கல் செய்த ஏழு பேர்களில் ஒருவர் கூடத் த.தே.கூ. உறுப்பினர் இல்லாமல் போனது தமிழர் தேசியமா?

சிறைகளிலும் வதை முகாம்களிலும் உள்ள மக்களின் விபரம் அவர்களின் விடுதலை பற்றி உலக நாடுகளும் அமைப்புகளும் குரல் எழுப்பும் போது கூட இவர்களின் குரல் புது டில்லியையும் தமிழரின் கூட்டங்களையும் தவிர்த்து வேறு எங்கும் கேட்கவில்லையே ஏன்?

இன்றும் கூட தமிழ் மக்களின் அவலங்களை வெளி நாடுகளின் கவனத்துக்கு இவர்கள் யாராவது எடுத்துப் போகிறார்களா?

எம்மக்களுக்கான நீதியும் நிவாரணமும் சர்வதேச விசாரணையும் கோரி வெளிநாட்டு அமைப்புகள் மட்டும் தானே வாய் கிழியக் கத்துகின்றன?

இன்றும் தமிழரின் நிலப்பறிப்பும் கோயில்கள் அழிப்பும் புத்தமதத் திணிப்பும் படைமுகாம்களும் சிங்களக் குடியேற்றங்களும் பச்சையாகப் பட்டப் பகலில் நடக்கிறதே எங்கே போனது உங்கள் விடுதலை உணர்வும் தன்மானமும் ரோசமும்?

அன்று எத்தனை அப்பாவிகளை மண்டையில் போட்டும் மண்ணில் மூடியும் மின் கம்பத்தில் கட்டியும் உயிரைப் பறித்தீர்களே அதற்குப் பதில் அவைதானா?

மே 18 2009க்குப் பின்னர் மகிந்தவைத் தோற்கடிப்பதாகக் கூறி செம்மணியில் கிரிஷாந்தி முதலான 800 பேரின் பாலியல் வன்புணர்வு படுகொலைகள் நடத்தியும் அமைதிப் பேச்சில் வைக்கப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலையங்களில் பொது மக்கள் மீளவும் குடியமர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவ நலன்களுக்காக அனுமதிக்காது அமைதிப் பேச்சின் முறிவுக்கு வழி செய்தும் முள்ளி வாய்க்கால் படுகொலைகளையும் நடக்திய மாபாதகன் சரத் பொன்சேகாவை எந்த முகத்தோடு தேர்தலில் ஆதரித்தீர்கள்?

எந்த மக்களின் ஆதரவை கோரினீர்கள் ?

எந்த மக்களுக்காக அரசியல் செய்கிறீர்கள்?

இன்று வதை படும் தமிழ் மக்களுக்கு எவரும் எதுவித உதவியும் செய்ய விடாது தடுத்து வரும் அரசை உலக அரங்கில் அம்பலப் படுத்தி தமிழர் ஆதரவுச் சக்திகளின் செயற் பாடுகளுக்கு உதவாது புலம் பெயர் நாடுகளில் பணம் தாருங்கள் அவர்களின் துயரைப் போக்குகிறோம் என மகிந்தவின் பல்லவியைப் பாடுகிறீர்களே எவ்விதம் எவர்மூலமாகச் செய்ய நினைக்கிறீர்கள்.

நீங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால் முதலில் அங்கே உதவி நிறுவனங்களைத் தடையின்றிச் செயற்பட வழி செய்யுங்கள். அல்லது அங்குள்ள மக்களின் நிலையை அரசின் இராணுவ அடக்கு முறைகளை உலக அரங்கில் கொண்டு வாருங்கள். அதற்கு உயிராபத்து என்ற பயம் உங்களுக்கு இருக்குமானால் உங்கள் கொள்கை அரசிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு பாராளுமன்றத்தில் சந்தர்ப்ப அரசியலை நடக்தி விட்டுப் போங்கள். டக்லஸ் கருணா பிள்ளையான் போன்று நேர்மையாகப் பேசி நேர்மையாக அரசியல் நடத்துங்கள்.

புலம் பெயர் மக்களை சரியோ தவறோ தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் சமூக கலாச்சார விழிப்புணர்வோடு ஒருங்கிணைத்து வழிநடத்தியவர் என்பது வரலாற்று உண்மை.

* இன்று அவர்களுக்குள்ளே பண பதவி ஆதிக்கப் பிரச்சினைகள் அந்த அமைப்பைப் பல கூறுகளாக்கி விட்டன.

உங்களைப் போன்றவர்கள் எங்கும் உள்ளனர் ஆகவே அது எமக்குப் புதுமையானவை அல்ல. ஆனால் ஈழத் தமிழினத்தின் தமிழீழத் தாயகக் கனவை முன்னெடுத்துச் உலகில் உள்ள ஒரே செல்லும் களமாக புலம் பெயர் நாடுகள்தான் உள்ளன. இதே வசதி இலங்கையிலும் இந்தியாவிலும் இப்போது இல்லை என்ற உண்மையை சிறு குழந்தையும் அறியும். எனவே அரசியலில் உள்ள உங்களுக்குத் தெரியாது என்று சொல்ல எவராலும் முடியாது.

த.தே.கூ. உத்தியோக பூர்வமாகத் தனது தமிழர் தேசியம் தன்னாட்சி பற்றிய கொள்கைகளை கைவிட்டு விட்டது. ஆனால் புலத்திலே தமிழர் தமது தாயகக் கனவோடு வேண்டுமானால் யூத மக்கள் போல் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் வாழ்ந்து தமது கனவை நனவாக்குவர். அதை நிறை வேறாமல் தடுப்பது இலங்கை இந்திய அரசுகளின் ஒரே நோக்கமாக உள்ளது.

உலகத்திலேயே தமிழருக்கு ஒரு தாயகம் தமிழ் ஈழம்தான் என்பது வரலாற்று உண்மை அதனை நனவாக்குவதே ஒவ்வொரு தமிழனதும் ஆத்ம தாகமாகும். அதற்காக எமது இனம் தனது எண்ணற்ற வீரத் தியாகிகளையும் அப்பாவி மக்களையும் தமிழரின் பூர்வீக உரிமைகளையும் விலையாகக் கொடுத்து விட்டது.

* இதனை புலத்தில் உள்ள சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் மாற்றுச் சிந்தனையாளரும் உணராது முரண்பாடுகளைத் தமிழருக்குள்ளே வளர்த்து வரலாம். ஆனால் அவர்களையும் தமது தவறை உணர்ந்து ஒன்றிணைய வைத்து நாடு கடந்த அரசின் மூலம் இலங்கை இந்தியாவில் கவனத்தில் கொள்ளப்படாத ஈழத் தமிழர் உரிமைகளையும் அவர்களுக்கான நீதியையும் பெற்றுவிட வைப்பது அறிசார் தமிழ் பெரு மக்களின் தலையாய கடமையாகும்.

மொத்தத்தில் அன்றும் இன்றும் த.தே.கூ செய்வது எதுவுமே உண்மையில் தமிழர் தமிழ்த் தேசியம் தமிழீழம் சார்ந்து காணப் படவில்லை என்பதே அப்பட்டமான உண்மை. எனவே இனியாவது த.தே.கூ. தனது வேலையைத் தாய் நிலத்தோடு நிறுத்திக் கொண்டும் புலத்தில் தமிழ் தேசியம் தன்னாட்சி உரிமை தாயகம் சார்ந்த அமைதி வழி இராஜ தந்திர முன்னெடுப்புகளுக்கு இடையூறு விளைக்கும் முகமாக அவர்களின் கொள்கைகளையும் அரசியலையும் இங்கு விற்க முயலக் கூடாது என்பதே எமது கோரிக்கை.

கட்டுரையாளர் த.எதிர்மன்னசிங்கம்.இன்போ தமிழ் குழுமம்

தொடர்புபட்டவை

* ஏனிந்த கையாலாகாத்தனம் .. ?: “நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் நடந்தது என்ன? "ஓர் உண்மை விளக்கம்"

* "அரசியல்வாதி ஜெயானந்தமூர்த்தி" முதலில் தன் பிள்ளைகளை கரும்புலிகளாக போர்க்களத்திற்கு அனுப்பி வைக்க தயாரா?

* "கறுப்பு மின் வலைப் பத்திரிகைகள்" "புனை பெயர் புரட்டுகள்" "நான்கு சுவருக்குள் நாடகங்கள்" நாகரிக உலகில் பயன்தரா?

* கண்ணீரோடு கதறும் ஈழத்தமிழினம்: கதிரைச் சண்டையில் உலகத்தமிழினம்..............?

Comments