ராஜீவ்... படுகொலை! வெளிவராத வீடியோ கேசட்! - அதிரவைக்கும் ஆதாரம்!

காங்கிரசு கட்சியில் சில மனச்சாட்சியுள்ளவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதற்கு திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள் காலத்திற்கு காலம் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
[rajiv.jpg]
இந்தியாவிற்கும்(தமிழகத்திற்கும்) தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நெருங்க முடியாதளவிற்கு விரிசலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டு வரும் முன்னால் பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களது மரணச்சம்பவம் தொடர்பாக பல்வேறு பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் திருச்சி வேலுச்சாமியின் குற்றச்சாட்டு முக்கியமாக கருதப்படுகின்றது.

சில வாரங்களிற்கு முன்னர் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சென்னை தீ.நகரில் 'ராஜீவ்காந்தி கொலையும் தமிழர்கள் மீதான பழியும்' என்றதலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அங்கு ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த திருச்சி வேலுச்சாமியை வலுகட்டாயமாக தமிழக கா(ஏ)வல்துறையினர் தடுத்து நிறுத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழகத்தில் வெளிவரும் வார இதழ் ஒன்று திருச்சி வேலுச்சாமியை நேரடியாக தொடர்பு கொண்டு பேட்டிகண்ட போதே இவ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

திருச்சி வேலுச்சாமியை 'திடுக்' வேலுச்சாமி என்று தாராளமாக அழைக்கலாம். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் பற்றவைத்த வெடிகுண்டு திரியாய் பதைபதைக்க வைக்கும்.

'இப்போது ராஜீவ் கொலை பற்றி கூட்டம் நடத்தவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டது தான் தாமதம்... புதுத் திகிலை பற்றவைத்தார். ஆனால் யோசித்துப் பார்த்தால் அவரது வாதத்தில் உள்ள நியாயம் நம்மை அதிரவைப்பது என்னவோ உண்மைதான்.

இதோ... திருச்சி வேலுச்சாமி பேசுகிறார்: ராஜீவ் கொலைவழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கே.ரகோத்தமன் 'ராஜீவ் கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம்' என்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

அந்த புத்தகத்தில் ஒரு விசயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறிபெரும்புதூரில் ராஜீவ் கலந்து கொண்ட கடைசிக் கூட்டத்தை வீடியோவில் கவர் செய்ய நினைத்தார் காங்கிரஸ் பிரமுகரான மரகதம் சந்திரசேகர். அதன்படி சிறிபெரும்புதூரில் உள்ள விஜயா வீடியோ சென்டரை சேர்ந்தவர், கூட்டமேடையில் நின்றபடி அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார். ராஜீவ்காந்தியின் கொடுமையான கடைசி நிமிடங்கள் அந்த வீடியோவில் நிச்சயம் பதிவாகியிருக்கும்.

மத்திய அரசின் உளவு நிறுவனமான ஜ.பி.யின் அப்போதைய டைரக்டர் எம்.கே.நாராயணன், 'விசாரணைக்கா' என்று சொல்லி அந்த கேசட்டை வாங்கிச் சென்றார்.

ராஜீவ் கொலை வழக்கை ஆராய நியமிக்கப்பட்ட சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு, கேட்டது. 'விசாரணைக்காக அந்த கேசட்டை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன்' என்று பதில் மட்டும் எழுதிய எம்.கே.நாராயணன் அந்த கேசட்டை தரவே இல்லை.

ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த பலவீனம் குறித்து ஆராயப்பட்ட வர்மா கமிஷனும் அந்த வீடியோ கேசட்டை கேட்டது. இதே சம்பவம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன், பல் நோக்கு விசாரணை கமிஷன் ஆகியவையும் அந்த சேட்டை கேட்டது. ஆனால் எம்.கே.நாராயணன் அந்த கேசட்டை தானே... வைத்துக்கொண்டார்.

கொலை நடந்து கிட்டத்தட்ட இருபதாண்டு காலம் ஆகப் போகின்றது. ஆனால் ராஜீவ் கொலை ரகசியம் அடங்கிய அந்த மர்ம கேசட்டை எம்.கே.நாராயணன் தன்னிடமே வைத்திருக்கின்றார்.

இதை அந்த புத்தகத்தில் ரகோத்தாமன் தெளிவாக எழுதியிருக்கின்றார்.
முன்னாள் பிரதமரின் கொலைக்கு முக்கியமான ஆதாரமான அந்த கேசட்டை தன்வசம் மறைத்து வைத்திருப்பது பெரும் குற்றம். அந்த குற்றத்தைச் செய்த எம்.கே.நாராயணன்னுக்கு தண்டனை வழங்குவதுதானே இயல்பு? என்ற கேள்வியுடன் நிறுத்திய வேலுச்சாமி ஆதங்கமான குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

"குற்றவாளியான எம்.கே.நாராயணனுக்கு பரிசுமேல் பரிசு வழங்கி வருகின்றது காங்கிரஸ் அரசாங்கம்! ஐ.பி. டைரக்கடராக இருந்த அவரை பாதுகாப்பு ஆலோசகராக பதவி உயர்த்தினார்கள். பிறகு மேற்கு வங்காளத்து கவர்னராக ஆக்கினார்கள்" என்றவர், தீர்க்கமான தொனியில் சொல்கிறார்: "எம்.கே.நாராயணன் மறைத்தது வைத்திருக்கும் அந்த வீடியோ கேசட்டில் பதிவாகியிருக்கும் காட்சிகளில் ராஜீவ் கொலையின் மர்ம முடிச்சு சிக்கி இருக்கின்றது. அது வெளியானால் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிஙகோ! அல்லது ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்காக உள்ள யாரோ! பாதிக்கப்படுவார்கள். ஆகவே அந்த கேசட்டை வைத்து மிரட்டியே தனக்கான பதவிகளை வாங்கிக்கொண்டு இருக்கின்றார் எம்.கே.நாராயணன்!" என்றார் வேலுச்சாமி.

சற்று நேர மௌனத்திற்கு பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார் திருச்சி வேலுச்சாமி:
"ராஜீவ் மரணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த காசி ஆனந்தன், சச்சிதானந்தன் ஆகியோர் ராஜீவ்வை சந்தித்தனர். அப்போது ராஜீவ், 'சிலரது தவறான ஆலோசனைகளால் ஈழமக்களிற்கு துன்பம் ஏற்படும் படியான காரியம் செய்துவிட்டேன். மீண்டும் நான்தான் பிரதமர் ஆவேன். அப்போது உங்களிற்கு நியாயமான உரிமையைப் பெற்றுத் தருவேன்' என்று சொன்னார். ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் தன்னைச் சந்தித்த போதும் அதேதான் சொன்னார் ராஜீவ்.

அப்படி இருக்கையில் ராஜீவை விடுதலைப்புலிகள் கொல்ல வேண்டிய அவசியம் இல்லையே!

ஆனால் ராஜீவ் கொலையின் பெயரால், ஈழமக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். ஆகவே உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டவே அன்று பொதுக் கூட்டம் நடத்தினோம்!" என்ற அவர், "மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்ள விரும்பினால், முதலில் மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன் மறைத்து வைத்திருக்கும் அந்த வீடியோவை கைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆதாரத்தை வைத்தே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்." என்று சொல்லி முடித்தார் திருச்சி வேலுச்சாமி.

ஈழதேசம் செய்தியாளர்: மு.காங்கேயன்

http://rajivgandhi-assassination.blogspot.com/

Comments