சிங்கள தேசத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை பயன்படுத்துமா தமிழினம்?

சிறீலங்காவில் தென்னிலங்கையின் அரசியல் உறுதித்தன்மை நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகின்றது. முன்னாள் இராணுவத்தளபதியும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் பொன்சேகாவுக்கு 30 மாத கால சிறைத்தண்டையை சிறீலங்கா அரசு வழங்கியது தென்னிலங்கையின் உறுதித்தன்மையை மேலும் பாதித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறீலங்கா அரசுக்கு எதிரான கசப்புணர்வை தென்னிலங்கையில் அதிகரிப்பதற்கு எதிர்க்கட்சிகளும் முயன்று வருகின்றன. தமிழ் மக்களை பொறுத்தவரையில் கடந்த வருடம் வன்னியில் நிறைவுபெற்ற போரில் சிங்கள தேசத்தின் கதாநாயகர்களாக திகழ்ந்த இரண்டு முக்கிய நபர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலாகவே இதனை பார்க்கின்றனர். இரண்டு துட்டகஜமுனுக்களுக்கு இடையிலான மோதல் என இதனை கூறினாலும் தவறில்லை.

அது தான் உண்மையும் கூட, இந்த இரு தலைமைகளுக்கும் இடையில் ஏற்படும் மோதல் வலுப்பட்டால், அல்லது ஊக்குவிக்கப்பட்டால் சிங்கள தேசம் பெரும் அழிவை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கான சூழ்நிலைகளும், வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எனினும் தனது இனத்தினால் தனக்கு ஏற்படப்போகும் ஆபத்தை சிறீலங்கா அரசு முன்கூட்டியே உணர்ந்துவிட்டதையே அதன் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற போரின் போது இருந்ததை விட சிறீலங்கா இராணுவத்தை மேலும் பலப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

சிறீலங்காவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு படைப்பிரிவையும், சிறப்பு அதிரடிப்படை அணியையும் நிறுத்த அது தீர்மானித்துள்ளது. சிறீலங்கா அரசு இந்த திட்டத்தை முன்னெடுக்குமாக இருந்தால் சிறீலங்கா மக்கள் எல்லோருமே ஒரு இராணுவ வலையத்திற்குள் வாழ வேண்டிய சூழ்நிலையே ஏற்படும்.

தற்போது தமிழ் மக்கள் அவ்வாறு தான் வாழ்கின்றனர், ஆனால் வருங்காலத்தில் சிங்களவர்களும் இராணுவ அழுத்தங்களினுள் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படலாம்.

1971 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஜே.வி.பியின் கிளர்ச்சிகளின் போது சிங்கள தேசம் எவ்வாறு வன்முறைகளையும், படுகொலைகளையும் சந்தித்ததோ அதேபோன்றதொரு நிலை அங்கு ஏற்படலாம்.

சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா கூட அன்று ஜே.வி.பியின் கிளர்ச்சியின் போது சிங்கள இளைஞர்களின் சடலங்கள் ஆற்றில் மிதப்பது தொடர்பில் அதிக அரசியல் செய்திகளை ஊடகங்களில் எழுதியிருந்தார். அவருக்கு முன்னர் ஒரு ஊடகவியலாளராக இருந்த வரலாறும் உண்டு.

சிறீலங்காவை பொறுத்தவரையில், தென்ஆசியா பிராந்தியத்தில் இராணுவ ஆதிக்கம் மிக்க நாடாக ஏற்கனவே மாற்றம் பெற்றுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மக்கள் தொகைகளுடன் ஒப்பிடும்போது சிறீலங்காவில் தான் இராணுவத்தினரின் எண்ணிக்கைகள் அதிகமானது.

எனினும், அதனை மேலும் அதிகரிக்க அரசு முயல்வதும், தெற்கில் படையணிகளை நிறுத்த திட்டமிடுவதும் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

நாலாம் கட்டப்போர் உக்கிரமடைந்தபோது சிறீலங்கா இராணுவம் 9 படையணிகளையே (டிவிசன்) கொண்டிருந்தது. ஆனால் போர் நடைபெற்ற மூன்று வருடகாலப்பகுதியில் அது மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று போர் முடிந்தபோது, அது 20 படையணிகளை கொண்டிருந்தது.

ஏறத்தாள 300,000 இராணுவத்தினர் சிறீலங்காவில் உள்ளனர். ஆனால் தற்போது ஒரு மாவட்டத்திற்கு ஓரு படையணி என அரசு திட்டமிட்டால் இந்த எண்ணிக்கை 24 டிவிசன்களாக உயரலாம். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு டிவிசன் படையணியை மட்டும் அரசு வைத்திருக்கப் போவதில்லை.

தற்போது கூட யாழ் குடாநாட்டில் மூன்று டிவிசன்கள் நிலை கொண்டுள்ளன. வன்னியை பொறுத்தவரையில் அங்கு ஏறத்தாள ஒரு டசின் படையணிகள் (டிவிசன்கள்) நிலைகொண்டுள்ளன.

அதாவது வடக்கில் மட்டும் தற்போது 15 டிவிசன்களை கொண்டுள்ள இராணுவம் அதனை ஒருபோதும் குறைக்க முற்படாது, மேலும் இந்த படையணிகளின் நிரந்தர தேவைக்கு என சீனா 981 இராணுவத்தளங்களையும் அமைத்துக் கொடுத்துள்ளது.

எனவே தென்னிலங்கையில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை ஏற்படுத்த விரும்பும் அரசு தற்போதுள்ள இராணுவத்தின் அளவை மேலும் மூன்று மடங்காக அதிகரிக்கலாம். இவ்வாறான ஒரு இராணுவ வலையமைப்பின் பாதுகாப்புடன் தான் மகிந்தா நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை அங்கு தோன்றியுள்ளது.

இதனை மறுவளமாக கூறினால் அரசியல் ரீதியாக பலவீனமாகும் அரசு இராணுவ அழுத்தங்களின் ஊடாக தனது ஆட்சியை தக்கவைக்க முற்படுகின்றது என்று கூறலாம்.

தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலமை நாள் செல்ல செல்ல உக்கிரமடைந்தால் ஒரு இராணுவ ஆட்சியை ஒத்த ஆட்சி ஒன்றை பொரும்பான்மை சிங்களவர்கள சந்திப்பது தவிர்க்க முடியாதது.

அரசையும், அரச தலைவரின் குடும்பத்தையும் தென்னிலங்கையில் எதிர்ப்பவர்கள் ஒன்றில் நாட்டை விட்டு தப்பியோட வேண்டும், அல்லது தலைமறைவாகி அரசுக்கு எதிராக போராடவேண்டும். இது தான் அவர்களுக்கு உள்ள இரண்டு தெரிவாக இருக்கலாம்.

தற்போது சிங்கள தேசத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த விரிசல்களை ஊக்குவித்து, பேரினவாதிகளின் பேரழிவின் ஊடாக தமிழ் இனத்தை காப்பாற்றும் சந்தர்ப்பம் ஒன்று எம்முன் உள்ளது. ஆனால் அதனை மேற்கொள்ளும் இராஜதந்திரமும், ஒற்றுமையும், அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் எம்மிடம் எஞ்சியுள்ளதா என்பதே தற்போதைய கேள்வி.

- வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி: ஈழமுரசு (08/10/2010)

Comments