பல ஆயிரம் தமிழ் மக்களின் படுகொலைக்கு காரணமானவர் இந்தியாவின் விருந்தாளி – த கார்டியன்

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் என குற்றம் சுமத்தப்பட்டுவரும் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்திய தலைநகர் புதுடில்லியில் வியாழக்கிழமை (14) நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். இளவரசர் எட்வேட்டுடன் அவர் கலந்துகொள்வது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.

அதில் நேற்று (11) வெளியிடப்பட்ட பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் என குற்றம் சுமத்தப்பட்டுவரும் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்திய தலைநகர் புதுடில்லியில் வியாழக்கிழமை (14) நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.

இளவரசர் எட்வேட்டுடன் அவர் கலந்துகொள்வது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எனினும் மனி உரிமை மீறல்களை மகிந்தா அரசு மறுத்து வருகின்றது.

மகிந்தாவுக்கான அழைப்பை இந்திய அரசும், விழா ஏற்பாட்டாளர்களுமே அனுப்பியதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகிந்தா புதன்கிழமை (13) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பிரித்தானியா மகாராணிக்கு பதிலாக விழாவில் கலந்துகொள்ளும் இளவரசர் எட்வேட்டுக்கு அருகில் மகிந்தா கலந்துகொள்வது மனித உரிமை செயற்பாட்டளர்களிடம் பெரும் விசனங்களை தோற்றுவித்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற போரில் பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு மகிந்தா காரணமானவர் என அவை குற்றம் சுமத்தி வருகின்றன. இந்தப் போரில் அனைத்துலக மனித உரிமை விதிகளையும் சிறீலங்கா அரசு மீறியிருந்தது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற 64 வயதான மகிந்தா, தான் எத்தனைமுறை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம் என சட்டத்தையும் மாற்றியுள்ளார்.

இது ஒரு வன்முறையான, சட்டரீதியற்ற நடவடிக்கை என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவா விஜயசிங்கா தெரிவித்துள்ளார். சிறீலங்கா மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையல்ல என மக்கள் உணர்ந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்திய அரசும், விழா அமைப்பாளர்களும் இணைந்தே விருந்தினர்களை அழைக்கும் திட்டத்தை வகுத்ததாக விழாவின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் அஸ்லாம் கான் தெரிவித்துள்ளார். ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் வைபவத்தில் மகிந்தா உரையாற்றப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பு என்பது பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை உள்ளடக்கியது. அங்கு அனைத்துல விதிகளும், மனிதாபிமானமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நடப்பது வெட்கமானது என பிரித்தானியா தமிழர் பேரவையின் உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்களின் கூட்டத்தை சிறீலங்காவில் நடைபெறவிடாது, பிரித்தானியாவும், அவுஸ்திரேலியாவும் எதிர்த்துள்ளன. மனித உரிமைகளை காரணம் காட்டி அவர்கள் இதனை மேற்கொண்டிருந்தனர். ஆனால் தலைவர்கள் ஒன்றை கூறிவிட்டு, பிறிதொன்றை செய்வது துரதிஸ்ட்டமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக பிரித்தானியா மகாரணியே உள்ளபோதும், இளவரசர் சார்ள்ஸ் தான் விழாவை ஆரம்பித்து வைத்தார்.

65,000 பார்வையாளர்கள் மற்றும் பல மில்லியன் தொலைக்காட்சி பார்வையாளர்கள் முன் மகிந்தா மூத்த தலைவர்களுடன் தோன்றப்போகின்றார். இது பொதுநலவாய நாடுகள் மீதான விமர்சனத்தை ஏற்படுத்தும்.

தமது அமைப்பில் உள்ள 54 நாடுகள் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பில் பேசும் அமைப்பு தமது அமைப்பு அல்ல பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் பொதுநலவாய அமைப்பு தொடர்பில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்கப்போவதாக பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரோன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹெக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவில் சீனாவின் பிரசன்னத்தை குறைப்பதற்கான செயற்பாடாகவே இந்தியாவின் அழைப்பு உள்ளது. மகிந்தாவை தம்வசப்படுத்த இரு நாடுகளும் போட்டி போட்டு உதவி வருகின்றன. அபிவிருத்தி நடவடிக்கைகள், நிதி உதவிகள், தொழில்நுட்ப உதவிகளை இந்த இரு நாடுகளும் மகிந்தாவுக்கு வழங்கி வருகின்றன.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு சிறீலங்கா அரசு முயன்று வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.

Comments