புலித் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? எதிர்காலம் இதற்கு பதில் சொல்லும் -நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்ரகுமாரன் பேட்டி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0oTdMLBeopjeKWP3dj2e4ksQ1z_yzEJIjn3olUVOlOtUv9uO6WkZsFb1ZgNLHAdZsXALImxJ-Rr91ESn852SQjSQwrQjSO91yiP7uDT_A85_ZAHwwW0y0ArWng8dNCkctdoiqcVTxvEqV/s400/tetg+udruthirakumar.jpg)
![](file:///C:/Users/ramanan/AppData/Local/Temp/moz-screenshot-1.png)
அமெரிக்காவில் இருக்கும் உருத்ரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமரான பிறகு முதன் முறையாக ஜூனியர் விகடனுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி வருமாறு:
கேள்வி: நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?
பதில்: சிறிலங்கா அரசின் பயத்தையே இது வெளிப்படுத்துகிறது. சிறிலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்றை சட்டங்களாக என்றுமே ஏற்கவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவர்களின் சட்டங்களுக்கு முரணாக இருப்பதாகச் சொல்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
எமது அரசாங்கம் அனைத்து நாடுகளின் சட்டங்களுக்கும், குறிப்பாக அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கும் பொருந்துவதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை ஓர் ஆயுதமாக ஏந்திய வண்ணம், தமிழீழ மக்களுக்கான சுதந்திரத் தமிழீழ அரசினை அமைப்பதற்காக எமது அரசாங்கம் அயராது உழைக்கும்.
கேள்வி: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இன்று இலங்கை அரசுக்கு ஆதரவாகிவிட்ட கே.பி-யின் சிந்தனையில்தான் முதலில் உருவெடுத்ததாகப் பரபரப்பு கிளம்பி வருகிறதே?
பதில்: மே மாதம் 19-ம் தேதிக்குப் பின்னர் தோற்றம் பெற்ற புதிய சூழலில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்த நகர்வுகளை முன்னெடுப்பதற்கு தாயகத்திலும் புலத்திலும் உள்ள அரசியலாளர்கள், அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்தே இந்த 'அரசாங்கம்' என்ற அரசியல் அமைப்பை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்தோம்.
இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகள் பொறுப்பாளர் என்ற பொறுப்பு நிலையில் இருந்து, கே.பி. களம் அமைத்துத் தந்தார். அதே வேளை, இந்த அமைப்பு உருவாக்கப்படும் முறையிலும், செயற்படும் முறையிலும் சுயாதீனமாகவே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அந்த அடிப்படையில், இதை உருவாக்கும் முயற்சிக்குத் தலைமை தாங்க, நான் உடன்பட்டேன். மலேசியாவில் கே.பி. கைது செய்யப்பட்டு சிறிலங்கா அரசிடம் கையளிக்கப்பட்ட பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
எமது அரசாங்கம் வெளிப்படையாக... தனது அமர்வுகளில் மக்களும் அவதானிப்பாளர்களாகப் பங்கு பெறக்கூடிய வகையில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மக்களால் நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் முடிவுக்கு ஏற்பவே இது தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
கேள்வி: கே.பி-க்கு மிக நெருக்கமானவராக உங்களைச் சொல்கிறார்கள். சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி அவர் பரப்பும் கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: நான் போராட்டத்துக்குத்தான் நெருக்கமானவன். உண்மையில் கே.பி. அனைத்துலக உறவுகள் பொறுப் பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், மிகக் குறுகிய காலமே அவருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவருடன் மட்டுமல்ல... அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் காஸ்ட்ரோ ஆகியோருடன் இதே காலப் பகுதியில் தொடர்புகள் இருந்தன.
மக்கள் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த இனப் படுகொலையை, எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என்பதே இந்தத் தொடர்புகளுக்குக் காரணமாக இருந்தன.
சிங்களத்தின் பிடியில் உள்ள கே.பி-யால் சுதந்திரமாக இயங்க முடியாது. சிறிலங்காவின் சிறைகளுக்குள் இருக்கும் எவராலும் தமிழ்த் தேசியத்துக்குப் பங்காற்ற முடியாது.
கேள்வி: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமராக எப்போது தமிழகத்துக்கு வரப்போகிறீர்கள்?
பதில்: அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சக்தி தமிழக மக்களுக்கு உண்டு என்றே நான் கருதுகிறேன்!
கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் - இந்நாள் தலைவர்கள், நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரித்து உங்களிடம் பேசினார்களா?
பதில்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தை... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக அடுத்த கட்டம் நோக்கி முன்னெடுக்க விரும்பும் அனைவரும் எங்களின் முயற்சியை ஆதரிக்கிறார்கள். உங்கள் கேள்வியின் நோக்கத்தை இந்த வார்த்தைகள் பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj07kUtm4wYLTNu1gZSaSJ-JmWjePG7Xob858cYkDAJzMQAsHR7nOlt0RD3Wq8MzuH26-Uqh6LKCp2gd-7zSa9Np3ks96bBmlnW8Bd1LTkIXeyzQO4J9PRVxI-4ysrXxVbQ7DAURTGGkxlY/s400/uruthra_thalaivar.jpg)
கேள்வி: புலித் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா?
பதில்: எதிர்காலம் இதற்கு பதில் சொல்லும்.
Comments