108 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது: சிங்களத்தின் அடுத்த சதியா ?

கடந்த சில மாதங்களாக இந்திய மீனவர்கள் யாழ் கடற்பகுதிகளில் அத்துமீறி நுளைந்து இயந்திர இழு படகுகள்(ரோலர்) மூலம் மீன் பிடித்துவருவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இழு வலைகளை உபயோகித்து மீன் பிடிப்பதன் மூலம் அப்பகுதிகளில் மீன் வளம் அறவே அற்றுப்போகும் நிலை தோன்றும் அபாயம் உள்ளதாகவும், இந்திய மீன்பிடி படகுகள் யாழ் மீனவர்களின் வலைகளை அறுத்துச் செல்வதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இச் சம்பவங்களைப் பயன்படுத்தி, தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் யாழ் மீனவர்களுக்கும் இடையே ஒரு கலகத்தை உண்டுபண்ண இலங்கை சதிசெய்து வருகிறதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற இலங்கை அரசுக்குச் சொல்லிக்கொடுக்கவா வேண்டும் ?

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தது மட்டுமல்லாமல் பிரதேச மீனவர்களின் வலைகள் உட்பட கடற்றொழில் உபகரணங்களை சேதப்படுத்திய இந்திய தமிழக மீனவர்கள் 108 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்திகளும் அங்கிருந்து கிடைக்கப்பெறுகின்றன். குறித்த மீனவர்கள் இன்று மதியம் பருத்தித்துறைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் என்றும். இது தொடர்பாக பிரதேச மீனவர்கள் பொலிஸ் மற்றும் கடற்படைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து கடற்படை, பொலிஸ் மற்றும் பிரதேச மீனவர்கள் இணைந்து பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மாலை7.00 மணி வரைக்கும் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் தொண்டைமானாறு தொடக்கம் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் வைத்து 108 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய 18 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தில் நாகப்பட்டினம், காரைக்கால் பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதாவது தமிழக தொப்புழ்கொடி உறவுகளான தமிழ் மீனவர்களோடு பேசித் தீர்க்கவேண்டிய இப் பிரச்சனையை, இலங்கை கடற்படையினரின் உதவியோடு கைதுசெய்வது ஒரு பொருத்தமில்லாத செயலாக உள்ளதோடு, இலங்கை அரசு யாழ் மீனவர்களிடையே ஊடுருவி இவ்வாறானதொரு ஒற்றுமைச் சீர் குலைவை ஏற்படுத்தி பிராந்தியத்தில் பதற்றத்தைத் தோற்றுவிக்க முனைவது தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. பல தடவைகள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று இலங்கை இராணுவம் தமிழ் நாட்டு மீனவர்களைக் கொலைசெய்துள்ளது. அப்படி இருக்கும்போது தற்போது நூற்றுக்கணக்கில் அவர்களைக் கைதுசெய்துள்ளது, தமது செயல்களை ஞாயப்படுத்தவே இவ்வாறு செய்கிறது என்ற ஒரு தோற்றம் பெற்றுள்ளது.

தமிழ் நாட்டு மீனவச் சங்கங்களும், யாழ் மீனவச் சங்கங்களும் உடனடியாக பேசி இதற்கு ஒரு தீர்வைப்பெற முயற்ச்சிக்கவேண்டுமே தவிர எந்த ஒரு பகுதியும் சிங்கள கடற்படையினரின் உதவிகளைப் பெறக்கூடாது. வீடு ரெண்டுபட்டால் பகையாளிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அதைப்போல இந்த நிலையும் ஆகிவிடக்கூடாது.

Comments