தியாகச்சுடர் முத்துக்குமாரன் - திருப்பி அடிப்பேன்!: சீமான் பாகம் 15

தனி ஒருவன் தணலானால், தமிழகமே தகித்தெழும் என நம்பி தேகத்தை தீக்குத் தின்னக் கொடுத்தவன் முத்துக்குமாரன்!


நெருப்பு விதையானால்

நெருப்பே பயிராகும்

இன்னும்தான் கொஞ்சம்கூட

எரியாமல்

சில பட்ட மரங்கள்!

- கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள்,

வலிகளாய் நெஞ்சத்து நரம்புகளைப் புடைக்கவைக்கிறது. தமிழ் சொர​ணையைச் சுடராக ஏந்திய தம்பி முத்துக்குமாரின் நினைவு தினத்தில், இன்றைய இளைய சமூகத்தை நோக்கிய பார்வை என்னி​டத்தில் பரிதாபமாக நீள்கிறது. தமிழ்ச் சாதியின் தளர்ச்சி பொறுக்காமல் உணர்ச்சியாய் வெடித்து சதையையே விதை​யாக்கிய இளைஞன் அவன். சிறு நெருப்பை மட்டுமே காற்று சிதைக்க முடியும் எனக் கருதி, பெரு நெருப்பாகப் பிரளயம் படைத்தவன். ஈழக் கொலைகளைத் தடுக்க தன் ஈரக்குலையைக் கருக்கியவன். தனி ஒருவன் தணலானால், தமிழகமே தகித்தெழும் என நம்பி தேகத்தை தீக்குத் தின்னக் கொடுத்தவன்.


நம்பிக்கை நரம்பு முறுக்க வேண்டிய இளைஞர் கூட்​டமே… அந்தத் தமிழ் மறவனைப்போல் உன்னை நான் தணலில் குதிக்கச் சொல்லவில்லை. தமிழைத் தணலில் தள்ளி​விடாதே என்பது மட்டுமே உன்னிடம் நான் இறைஞ்சும் கோரிக்கை.

நம்பிக்கை நட்சத்திரங்களாக கல்வியில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் படிப்பு முடித்த உடன் வெளிநாட்டு வேலை​களுக்குக் கிளம்புகிறார்களே… அதைத் தவறு எனச் சொல்லித் தடுக்க இந்தத் தாய்த் தமிழகத்தில் ஆள் இல்லாமல் போய்​விட்டது. விதை பாகி நாற்றங்கால் செழித்த நிலையில், அங்கே வளர்ந்த பயிர் வேறு நிலத்தில் நடப்படும். அப்போது, பயிரை உற்பத்தி செய்த நாற்றங்கால் வெறுமனே கிடக்கும். அந்த நாற்றங்காலைப்போலத்தான் நம் நாடும் வெறுமனே கிடக்கிறது. இங்கே உருவாக்கப்படும் அறிவார்ந்த மூளைகள் அடுத்த நாடுகளில் அல்லவா நடப்படுகிறது. ’30 லட்சம், 40 லட்சம் எனப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துத்தானே, நாங்கள் படித்தோம். அவற்றைச் சம்பாதிக்க நாங்கள் அடுத்த நாடுகளுக்குத்தானே போக வேண்டி இருக்கிறது?’ என்கிற கேள்வியை இன்றைய இளைய தலைமுறை எழுப்பக்கூடும். தம்பி… நீ கொடுத்த பணம் இந்த நாட்டுக்கோ, இங்கு வாழும் மக்களுக்கோ இல்லை. ‘அன்பளிப்பு’ என்கிற பெயரில், கல்லூரி நிர்வாகத்துக்கு நீ வலியக் கொடுத்த வசூல் அது!

வலிக்க வலிக்க உழைத்தவனின் வரிப் பணத்​தில்தான் நீ மருத்துவத்தையும் பொறியியலையும் படித்திருக்கிறாய். எங்களின் பணத்தில் படித்த நீ எங்களின் வலிக்கு ஊசி போடாமல் ஓடுவது நியாய​மாடா தம்பி? ‘என் படிப்பு உனக்குப் பங்கு அளிக்காது’ எனச் சொல்லிப் புறக்கணிப்​பவனைக்கூட இந்த தேசம் புகழாரப்​படுத்துகிறது. ‘மகன் ஃபாரின்ல டாக்டரா ஒர்க் பண்றார்!’ என வியந்து பேசும் விந்தைத்தனங்கள் இந்தச் செம்மறி ஆட்டுச் சந்தையில் வெகுவாகக் கேட்கிறது.

கர்ம வீரர் காமராஜரின் ஆட்சி அமைய அப்போது பேருதவியாய் இருந்தார் தந்தை பெரியார். ‘நான் என்ன நன்றிக்கடன் செய்யப்போகிறேன்’ என காமராஜர் கேட்டபோது,. »நீங்க பெரிசா ஒண்ணும் பண்ண வேணாம்… நம்ம புள்ளைங்களை நல்லபடியாப் படிக்க​வெச்சுடுங்க. அது ஒண்ணு போதும்… அத்தனை விதமான வெளிச்சத்துக்கும்! » எனச் சொல்லி இருக்கிறார் பெரியார்.

உடை, குறிப்பேடு, புத்தகம் உள்ளிட்ட தேவை​களை இலவசமாக வழங்கிய காமராஜர், இலவச மதிய உணவையும் அறிவித்தார். ‘அதற்குப் பெரிய அளவில் நிதி தேவைப்படும்!’ என அதிகாரிகள் அச்சம் தெரிவித்த​போது, ‘நிதி இருக்கும் வரை போடுங்க… மற்றபடி தேவைப்​படுவதை நான் மக்களிடம் மடிப் பிச்சை கேட்டு வாங்கித் தருகிறேன்!’ எனச் சொன்னார் காம​ராஜர். எத்தகைய இக்கட்டுக்களைத் தாண்டி கல்வியில் நாம் கரையேறி இருக்கிறோம் என்பதை உணர்ந்தால், காசுக்​காக அதனை அந்நிய நாட்டுக்கு கடை விரித்து இருக்க மாட்டோம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என அந்நிய நாட்டுக் கனவுகளை நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஏந்தி அலைகிறார்களே… அதேபோல் இந்தியக் கனவுகளை எந்த நாட்டுக் குடிமகனும் ஏந்தாதது ஏன்?

படிக்கவே வழியற்றவர்கள் ஒரு பக்கம்… படிப்பை முடித்த உடனேயே பயணப்படுபவர்கள் ஒரு பக்கம்… என இருப்பதால்தான் அடி மடியைச் சுரண்டும் அயோக்​கியத்தனங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. அந்நிய நாடுகள் தொழில் தொடங்க அனைத்து சலுகைகளை வழங்கும் இந்த தேசம், சொந்தமாகத் தொழில் தொடங்க கதியற்றுக்கிடக்கிறது. அந்நியத்துக்குப் பச்சைக் கம்பளம் விரித்து சொந்த நாட்டினரைக் கூலி​களாக மாற்றும் இந்தத் தேசம் என்ன பெருமைக்காக 71 ஆயிரம் கோடிக்கு விளையாட்டு விழா நடத்த வேண்டும்? ஆட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தை ஆலைகளுக்கு ஒதுக்கி இருந்தால், எத்தனை பேரின் வாழ்​வாதாரங்களுக்கு வழி பிறந்திருக்கும்? இதற்கிடையில், பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை வலியக் கொடுத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கவும் இந்த தேசம் வெளிநாடுகளிடம் வேண்டுகோள் வைக்கிறது. வல்லாதிக்க நாடுகளின் வர்த்தக மையமாகவும், ஏகபோக முதலாளிகளின் எடுபிடி இடமாகவும் இந்த தேசம் மாறிக்கிடக்கும் கோலத்தைப் படித்த இளைஞர்கள் அல்லவா பதறி அறிய வேண்டும்? சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இந்திய அரசியல் சட்டம் பொருந்தாது என்கிற உண்மை என்ன கொடுமை? அங்கே ஏதும் குற்றங்கள் நிகழ்ந்தால், இந்திய அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது தெரியுமா? கடலுக்குள் இருக்கும் தீவுகள் நமக்குத் தெரியும். கடனுக்கு முளைத்த தீவுகளாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலமாக ஒவ்வொரு தேசமும் இந்த மண்ணில் ஆட்சி நடத்தும் அவலங்கள் எவருடைய கன்னத்தையும் அறையாதது ஏனோ? தேகத்தில் தேமல் விழுந்ததுபோல், இந்தத் தேசத்தில் விழுந்த தேமல்கள்தான் சிறப்புப் பொருளாதார மண்ட​லங்கள். இங்கே மனித உழைப்பு மலிவாகக் கிடைப்ப​தாலேயே வாரிச் சுருட்டும் எண்ணத்தோடு இத்தகைய அந்நியச் சுரண்டல் கூட்டங்கள் அடியெடுத்துவைக்கின்றன. மொத்​தத்தில், அன்றைக்கு இங்கிலாந்துக்கு மட்டுமே அடிமையாக இருந்தோம். இன்றைக்கு எல்லா நாடுகளுக்கும் அடிமையாக இருக்கிறோம்.

கல்வியைக் கற்றவர்களும், பேரறிவைப் பெற்றவர்​களும் இந்த தேசத்திலேயே இருந்து இருந்தால், நம்மை இப்படிக் கொள்ளையடிக்க முடிந்​திருக்குமா? கண் முன்னாலேயே சுரண்டிக் கொழுக்கும் கயமைத்​தனங்கள் நிலை பெற்றிருக்க முடியுமா?

கல்வியும் மருத்துவமும் எட்ட முடியாத இலக்காக இருப்பதாலேயே, இந்தத் தேசத்தில் ஏழை வர்க்கம் எப்படி எல்லாம் திண்டாடிப்போகிறது? வல்லரசாக வடிவெடுக்கும் நாடாக சொல்லப்படும் இங்கே அரசு மருத்துவமனையின் அவலங்கள்கூட தீர்க்கப்படாமலே கிடக்கிறதே. ஏழை ஒருவனின் உயிருக்கு இங்கிருக்கும் மருத்துவங்கள் உதவப்போவது இல்லை என்பது பாரபட்சத்தின் கொடூரம்தானே? அமைச்சர் பெரு​மக்களோ அதிகாரத் துரைமார்களோ ஏதாவது ஓர் அரசு மருத்துவமனையில் எப்போதாவது சிகிச்சை பெற்று இருக்கிறார்களா? அரசு மருத்துவமனையின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது, அப்பாவி மக்​களுக்கு எப்படி அங்கே உரிய சிகிச்சை கிடைக்​கும்?

சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த​தாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் தன் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டது ஆச்சர்யமான ஒன்றாகப் பத்திரிகைகளால் அறிவிக்கப்​படுகிறது என்றால், இதர அதிகாரிகள் அரசு மருத்துவ​மனையை எப்படிப் பார்க்​கிறார்கள் என்பது நமக்குப் பொட்டில் அடித்தாற்போல் புரிகிறதே!

கடைசிக் கால உயிரோட்டத்தைக் காப்பாற்ற அரசு மருத்துவமனையின் கட்டிலைக் கட்டிப்பிடித்தபடி காத்துக்கிடந்த அய்யா கக்கனைப்போன்ற அமைச்சர்​களை இன்றைய காலத்தில் எங்கே காண்பது? ‘இருந்தால்​தான் மருந்து’ என்கிற நிலையை உடைத்து எறியாத வரை, இங்கே ஏழை உயிருக்கு எந்த உத்திர​வாதமும் இல்லையடா தம்பி.

இதேபோல்தான் கல்வியும்… ‘பணம் இருந்தால்தான் படிப்பு’ என்கிற நிலை அரசுப் பள்ளிகளை ஆரம்​பித்த​போதே அகற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசுப் பள்ளிகளின் நிலை எப்படி இருக்​கிறது? எந்த மாநகரத் தந்தையாவது தன் மகனை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கவைக்கிறாரா? ஏன்… மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்கூட தங்களின் வாரிசுகளைத் தனியார் பள்ளிகளுக்குத்தானே தயார் செய்கிறார்கள். லட்ச லட்சமாய்க் கொட்டிக்​கொடுக்க கதியற்று கண்ணீரில் கதறும் பெற்றோர்களின் நிலை என்​றைக்குத் தீரும்? அன்றைக்குக் கல்வியும் மருத்துவமும், அரசின் கைகளில் இருந்தன. கள்ளுக் கடையும் சாராயக் கடையும், தனியார் கையில் இருந்தன. ஆனால், இன்றைக்கு கல்வியும் மருத்துவமும் தனியார் கையில்… சாராயக் கடை அரசாங்கத்தின் கையில்!

கல்லாதவனும் தேசப் பிடிப்பு இல்லாதவனும் இருப்பதால்தானே ஏழைகளின் நிலை மட்டும் இங்கே இன்னும் இன்னும் இழிவாகிறது. ‘நமக்கென்ன’ என்கிற ஒற்றை வார்த்தையை மட்டுமே கெட்டியாய்ப் பிடித்து அலையும் இளைஞர் கூட்டமே… ஒரே ஒரு கணம் தம்பி முத்துக்குமாரின் தியாகத்தை உள்ளுக்குள் உணர்ந்து பார்.

அப்பா, அன்றாடக் கூலிக்காரர். தங்கை, கர்ப்பவதி. வறுமையை மட்டுமே விலாசமாகக்கொண்ட வாடகைக்​குடியில் பிறந்த அவன் எதற்கடா இந்த தேசத்துக்காகத் தீயில் விழ வேண்டும்? ஈழத்தில் இழவு விழுந்தாலும் இல்லத்தில் உணவு வெந்தால் சரி என நினைத்தவர்களுக்கு மத்தியில், அவனுடைய நெஞ்சுக்கூடு மட்டும் ஏனடா தீயை நோக்கித் திரும்ப வேண்டும்? தமிழ்ச் சொந்தங்கள் மீது அவன்கொண்ட பற்றுதானே அப்படிப் பற்றி எரிந்தது. முத்துக்குமாரையும் அவனுக்கு முன்னரே தீயில் விழுந்த அப்துல் ரவூப்பையும் ‘இளைஞன்’ வடிவமாக முன்னிறுத்தி, உன் மூச்சுக்குள் மூர்க்கம் பெருக்கு. திரையில் தோன்றியவன் எல்லாம் ‘இளைஞன்’ அல்ல… தீயில் தோன்றியவனே இளைஞன்!


Comments