2 ம் உலகப் போருக்குப் பின் தமிழர் மீதான மாபெரும் இனப்படுகொலை!

பான் கி மூன் பதில் பொறுப்பற்றது, நியாயமற்றது

  • “2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது மட்டுமன்றி, அந்த படுகொலைக்கு நீதி பெற்றிடவும் தவறிவிட்டது. இதற்கு மேலாவது - உங்க்ளது பதவிக் காலத்திற்குள் - அதற்கு நீதி பெற்றுத் தருவீர்களா?” என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையில் உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனிடம் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் கேட்ட கேள்வி இது.

    இதற்கு பான் கி மூன் அளித்த பதில்,

    “உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வாக்குவாதம் நிறைந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு புரிய வைத்தேன். அது எனக்கு நியாயமானதாகத் தெரிந்தது. அந்த நிபுணர் குழு இன்னமும் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்கவில்லை, அது தொடர்பாக சிறிலங்க அரசுடன் பேசி வருகின்றேன்” என்று கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி மிகப் பெரிய படுகொலையுடன் போரை சிங்கள இனவெறி அரசு முடித்த பிறகு அந்நாட்டிற்குச் சென்ற பான் கி மூன், அந்தப் படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் ராஜபக்சாவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருந்தார்.

இலங்கையில் நடந்த படுகொலை குறித்து பன்னாட்டுக் குழுவை அனுப்பி, சுதந்திரமான ஒரு விசாரணையை நடத்தி, அங்கு நடந்த படுகொலைக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று குரலெழிப்பியும், சிறிலங்க அரசே அதனைச் செய்ய வேண்டும் என்று, தமிழினப் படுகொலை செய்ய உத்தரவிட்ட அந்தத் தலைமையிடமே விசாரணை பொறுப்பை ஒப்படைத்தார் பான் கி மூன்.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் இராணுவமும், விமானப் படையும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் என்று 1,200 பேர் கொல்லப்பட்டதற்கு உலக அளவில் கண்டனம் எழுந்தபோது, அது குறித்து விசாரணை நடந்த நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையில் பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைத்து, அது காசா பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி, அறிக்கையும் அளித்தது, இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என்று. இவை யாவும் சில மாதங்களில் நடந்து முடிந்தன.

ஆனால், இலங்கையில் நடந்த இனப் படுகொலை குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை, அதற்கான குற்றவாளியாக உலக சமூகத்தால் தெளிவாக குற்றம் சாற்றப்பட்ட ராஜபக்சவுடமே அளித்தது மட்டுமின்றி, அவர் விசாரணைக் குழு அமைக்காமல் காலம் கடத்தியதைக் கண்டும், அதற்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசாமல், கண்டனம் தெரிவிக்காமல் காலம் கடத்தினார் பான் கி மூன்.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மாபெரும் இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இதனை திட்டமிட்டு அந்நாட்டு அரசு செய்து முடித்துள்ளது. அதற்கு தெற்காசிய வல்லாதிக்கங்களும் துணை நின்றுள்ளன. சிறிலங்காவின் இனவெறி அரசு மட்டுமின்றி, தெற்காசியாவின் ஜனநாயக, பொதுவுடமை அரசுகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகு 2010ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கைப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், ராஜபக்ச அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்றும், போர் முடிந்து ஈழத் தமிழர்கள் தஞ்சமடைந்த வன்னி முகாம்களில் அவர்களுக்கு எதிராக இழைத்த குற்றங்கள் ஐ.நா.வின் மானுடத்திற்கு எதிரான குற்றப் பிரகடனத்தின்படி குற்றமாகும் என்றும் பிரகடனம் செய்த பிறகு எழுந்த அழுத்தத்தால், ஒரு நிபுணர் குழுவை அமைத்தார் பான் கி மூன். அது இதுநாள் வரை ஒரு நாள் கூட விசாரணை தொடர்பான அமர்ந்து கலந்தோலோசிக்கவில்லை!

அதற்குக் காரணம், ஐ.நா.நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சிறிலங்க அரசு கூறியதே. அதற்கும் எந்தக் கண்டனத்தையும் பான் கி மூன் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது கேள்வி எழுப்பியவுடன், “சிறிலங்க அரசுடன் பேசி வருவதாக” பதில் கூறுகிறார்.

  • பான் கி மூனின் நடத்தை வினோதமாக உள்ளது என்பது மட்டுமின்றி, ஐயத்திற்கிடமானதாகவும் உள்ளது.

    “எங்கு எது நடந்தாலும், அதற்கான பொறுப்பு யாருடையது என்றதை உறுதி செய்ய வேண்டும், யாராயிருந்தாலும் அதற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும் என்பதே நீதியின் கொள்கை”

    என்று பேசும் பான் கி மூன்,

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையின் பொருட்களுக்கு அளித்து வந்த வணிக வரிச் சலுகையை நிறுத்தியது போன்று, சிறிலங்க அரசிற்கு அழுத்தம் தரும் வகையில் அப்படிப்பட்ட எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?

    சிறிலங்க அரசு விடயத்தில் மாத்திரம் பான் கி மூன் மென்மையான உள்ளத்துடன் நடந்துகொள்ளக் காரணம் என்ன?

கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சம்!

  • இறுதி கட்டப் போரில் கொல்லப்பட்டவர்கள் 40 ஆயிரம் பேர் என்பதோடு மட்டுமே அந்த படுகொலை தொடர்பான உண்மை முற்றுப் பெறவில்லை. ஐ.நா.நேரடியாக திரட்டிய தகவல்களின் அடிப்படையில் மட்டும் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை 7,100 பேர்.

    இப்போது சிறிலங்க அரசு அமைத்த கற்ற பாடங்கள் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation commission - LLRC) முன் மன்னார் மாவட்ட பேராயர் ராயப்பு ஜோசஃப் அளித்த வாக்குமூலத்தின் படி, 2008ஆம் ஆண்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வன்னிப் பகுதிக்கு வந்த சேர்ந்த மக்கள் எண்ணிக்கையுடன், 2009ஆம் ஆண்டு போர் முடிந்து வன்னி முகாம்களுக்கு வந்த சேர்ந்த மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1,46,678 பேர் இல்லை. இவர்கள் என்ன ஆனார்கள் என்பதை சிறிலங்க அரசு விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆக சொந்த நாட்டு மக்கள் ஒன்றரை இலட்சம் பேரை சிறிலங்க அரச படைகள் கொன்று குவித்துள்ளன என்கிற உண்மை வெளியாகியுள்ளது.

    இதற்கும் பிறகும் சிறிலங்க அரசுடன் தான் பேசிக்கொண்டிருக்கின்றேன் என்று பான் கி மூன் கூறுகிறார் என்றால், அடுத்தது ராஜபக்சவுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது?

    பான் கி மூன் அளித்த பதிலின் மற்றொரு பகுதி இன்னும் வினோதமானது.

    அரசியல் நிலைத்தன்மை பற்றியும், நீதியைப் பற்றியும் பேசுகிறார்.

    “எவ்வாறு அரசியல் நிலைத் தன்மையையும், அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் ஒரே நேரத்தில் நிலை நிறுத்த முடியும் என்று சிலர் கருதக்கூடும்.

    அரசியல் நிலைத்தன்மை அவசியம்தான், ஆனால் அதோடு நியாயமும் நிலைநிறுத்தப்படவிலையென்றால் அந்த நிலைத்தன்மை நீடிக்காது. அதே நேரத்தில் அரசியல் நிலைத்தன்மை இல்லையென்றாலும் நீதியை நிலை நிறுத்த முடியாது. எனவே அரசியல் நிலைத்தன்மையும், நீதியும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். அதைத்தான் நான் இலங்கையில் நிலைநிறுத்த முயன்றுக் கொண்டிருக்கின்றேன்” என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.

    இது ராஜபக்சவுக்கு சாதகமான பேச்சாகும். “இன்னமும் அரசியல் நிலைத் தன்மை ஏற்படவில்லை” என்று அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்னரும், பிறகு அதிபர் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னரும் ராஜபக்ச கூறிக்கொண்டிருந்தார். இதெல்லாம் முடிந்து, ராஜபக்ச, தான் மூன்றாவது முறையாக தேர்தலில் நின்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட சட்ட திருத்தமெல்லாம் செய்து கொண்டுள்ளார். எனவே அங்கு அரசியல் நிலைத் தன்மை ஏற்பட வேண்டும் என்று இப்போது பான் கி மூன் பேசுவது வேடிக்கையானது.

‘அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுவிட்டது, ஆனால் பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட வேண்டும்’ என்று ராஜபக்ச பேசினால் அதற்காகவும் ஐ.நா.வின் பொதுச் செயலர் காத்திருப்பாரா?

இப்போது இன்னொரு செய்தியும் வந்துள்ளது. ஐ.நா. நிபுணர் குழு, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தும் என்றும், எழுத்துப்பூர்வமான புகார்களைப் பெற்று ஆராயும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்தி உண்மையாக இருக்குமென்றால் அது மிகத் தவறான முன்னுதாரணம் ஆகும்.

அங்கு நடந்த இனப் படுகொலையின் சாட்சியங்களாக அங்கு வாழ்ந்துவரும் மக்களை நேரில் கண்டு வாக்குமூலங்களைப் பெறுவதுதான் சரியாக நடவடிக்கையாக, நீதியின் பார்ப்பட்ட செயலாக இருக்க முடியும். ஐ.நா.வின் நிபுணர் குழுவை அனுமதிக்க மறுத்தால், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க பான் கி மூன் முன்வர வேண்டும்.

  • இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மாபெரும் இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இதனை திட்டமிட்டு அந்நாட்டு அரசு செய்து முடித்துள்ளது. அதற்கு தெற்காசிய வல்லாதிக்கங்களும் துணை நின்றுள்ளன. சிறிலங்காவின் இனவெறி அரசு மட்டுமின்றி, தெற்காசியாவின் ஜனநாயக, பொதுவுடமை அரசுகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதனை விசாரணை நடத்தி வெளிப்படுத்த தவறுமானால், பான் கி மூன் மட்டுமல்ல, ஐ.நா.மன்றமு்ம நம்பிக்கையிழக்கும், அதுவே அதன் முதலாம் உலகப் போருக்கு முன் செத்துப்போன லீக் ஆஃப் நேஷன்ஸ் போல் ஐக்கிய நாடுகள் சபையும் சாகும் நிலையை ஏற்படுத்துவிடும்.

    பான் கி மூன் அதற்கான காரணியாக மாட்டார் என்று எதிர்ப்பார்போம்.

ஆரூரன்

Comments