சிறிலங்கா - ஈரான்: 2030ம் ஆண்டு ஏற்படுத்தப்படவுள்ள அணு மின் நிலையமும் ஈரானிய ஆதரவும்

சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பு ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஈரான் கடனாக வழங்கியிருந்ததோடு சிறிலங்காவினது படைத்துறையினருக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கியிருந்தது.

இவ்வாறு Eurasia Review இணையத்தளத்தில் Lydia Walker எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அந்த ஆய்வின் விபரமாவது,

அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்குள் தனது முதலாவது அணு மின் நிலையத்தினை நிறுவப்போவதாக கடந்த செப்ரெம்பரில் சிறிலங்கா அறிவித்திருந்தது.

அனைத்துலக அணுசக்தி ஆணைக்குழுவிடமிருந்து இதற்கான அனுமதியினைத் தாங்கள் பெறவுள்ளதாக சிறிலங்காவினது மின்சக்தி அமைச்சினது செயலாளர் கூறியிருந்தார்.

சிறிலங்கா அமைக்க விரும்பும் இந்த அணுமின் நிலையத்தில் ஈரானின் பங்கு எத்தகையது என இவர் குறிப்பிடவில்லை. இன்று சிறிலங்காவிற்கான பிரதான எரிபொருள் வழங்குநராக ஈரானே திகழ்கிறது. அத்துடன் இந்த இஸ்லாமிய நாட்டுடன் கொழும்பு நெருங்கிய உறவினைக் கொண்டிருக்கிறது.

ஈரானுடன் சிறிலங்கா கொண்டிருக்கும் நெருக்கமான பொருளாதார உறவுகள் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் ஈரானிடமிருந்து ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்வதை உடனடியாக நிறுத்துமாறும் 2007ம் ஆண்டு அமெரிக்கா கோரியிருந்ததை அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தின் இரகசியத் தகவல்கள் உறுதிப்படுத்துகிறன.

தற்போது சிறிலங்கா அணுமின் நிலையத்தினை அமைக்க விரும்புவது ஈரானிய எரிபொருட்களில் தங்கியிருக்காது சுதந்திரமாக செயற்படுவதற்கான ஒரு முனைப்பா அன்றி அணுசக்தியினைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஈரானுடனான உறவினை விரிவுபடுத்துவதற்கான ஒரு செயலா?

ஈரானுடன் புதிய பொருளாதார அல்லது முதலீட்டு உடன்பாடுகள் எதனையும் ஏற்படுத்துவது தொடர்பாக அதியுச்ச அவதானத்துடன் செயற்படுமாறு 2007ம் ஆண்டு சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் சிறிலங்காவினது அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். தன்னிடம் அணுவாயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருக்கிறது என்பதை ஈரான் நிரூபிக்க முனையுமிடத்து சிறிலங்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுமா?

சிறிலங்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் வரலாற்று ரீதியிலான பொருளாதார ஒத்துழைப்பு இருந்துவருகிறது. தனது மசகு எண்ணெயினை குறைந்த விலையில் ஈரான் சிறிலங்காவிற்கு விற்பனை செய்துவரும் அதேநேரம் ஈரானியத் தயாரிப்புப் படைத்தளபாடங்களைச் சிறிலங்கா கொள்வனவு செய்துவருகிறது.

தவிர சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல வலுத் திட்டங்களுக்கு ஈரான் நிதியுதவியளித்து வருகிறது. நீர்மின் நிலையங்கள் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் வரை பலதரப்பட்ட திட்டங்களுக்கு ஈரான் நிதி வழங்குகிறது.

2008ம் ஆண்டு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளை ஈரான் சிறிலங்காவில் மேற்கொண்டிருந்தது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுப் பணிகளுக்காக அதிக நிதியினைக் கொடையாக வழங்கும் நாடாகவும் ஈரான் இருந்து வருகிறது.

சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பு ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஈரான் கடனாக வழங்கியிருந்ததோடு சிறிலங்காவினது படைத்துறையினருக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கியிருந்தது. முகமட் அகமதுஜாட் [President Mahmoud Ahmadinejad] ஈரானிய அதிபராகப் பதவியேற்ற பின்னர் பயணம்செய்த முதலாவது ஆசிய நாடு சிறிலங்காதான்.

இதுபோல ஈரான் வழங்கிநிற்கும் ஆதரவு சிறிலங்காவிற்கு மிகவும் முதன்மையானது. விடுதலைப் புலிகளுடனான போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை ஆராய்வதற்காக வல்லுநர்கள் குழுவினை ஏற்படுத்துவதென 2010ம் ஆண்டு ஐ.நாவின் செயலாளர் நாயகம் முடிவெடுத்தபோது அந்த முடிவுக்கு எதிராக ஈரான் கருத்தினைத் தெரிவிக்கும் அளவிற்கு அதனது ஆதரவினைப் பெற்றதன் ஊடாக சிறிலங்காவின் வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சர் வீமல் வீரவன்ச வரலாறு படைத்திருந்தார்.

"உலகிலுள்ள பல நாடுகள் எங்களுக்குத் தோள்கொடுக்கத் தயங்குகின்ற போதிலும் ஈரான் ஒருபோதும் சிறிலங்காவினைக் கைவிடாது. சகோதரத்துவத்துடன் எங்களை நடாத்திய ஈரானை இந்த நாடு ஒருபோதும் மறவாது" என அமைச்சர் வீரவன்ச கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் யூன் 2010ம் ஆண்டு கருத்துத் தெரிவித்த ஈரானிய அமைச்சர் ஒருவர், சிறிலங்காவினை ஒரு 'சகோதரன்' என்றே ஈரானும் கருதுவதாகவும் ஈரான் கொழும்புக்கு வழங்கிவரும் ஆதரவினைத் தொடரும் என்றும் கூறினார்.

சிறிலங்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் நீண்ட நெடுங்காலமாக பொருளாதார மற்றும் அரசியல்சார் உறவுகள் காணப்படுகிறது. இந்த உறவானது சிறிலங்காவின் உட்கட்டுமான மற்றும் மின்சக்தியுடன் நெருக்கிய தொடர்பினைக் கொண்டது.

ஈரான் அணுவாயுதங்களைத் தனதாக்கும் தனது திட்டத்தில் வெற்றிகாணுமிடத்து அது சிறிலங்காவிற்கும் ஈரானுக்குமிடையிலான உறவினைச் சிக்கல் நிறைந்ததாக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

எவ்வாறிருப்பினும், அண்மைய வரலாற்றில் சிறிலங்காவிற்கும் ஈரானுக்குமிடையில் பரஸ்பர ஆதரவு நிலைமையே தொடர்கிறது. அணுசக்தியினைப் பெறுவதற்கான மற்றும் அதனைப் பயன்படுத்துவதற்கான உரிமை ஈரானுக்கு இருக்கிறது என வெளிப்படையாகவே கூறிய சிறிலங்காவினது அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஈரானின் அணுவாயுத உற்பத்திக்கான தேடலுக்கு 2007ம் ஆண்டு தனது ஆதரவினை வழங்கிநின்றார்.

ஏப்பிரல் 2008ம் ஆண்டு ஈரானிய அதிபர் அகமதுஜாட்டுக்கும் சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் கூட்டு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்கள்.

இந்த அறிக்கையில், அனைத்துலக ரீதியில் அணுவாயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் எவையோ அவை தங்களது அணுவாயுதங்களைக் களையவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

இது இவ்வாறிருக்க சிறிலங்கா அணுசக்தியினை ஆக்கபூர்வமான, அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கு வழிசெய்யும் வகையில் யுரேனியத்தினைப் பிரித்தெடுக்கும் தொழினுட்ப விபரங்களைச் கொழும்புடன் பகிர்ந்துகொள்வதற்கு ஈரான் தயாராக இருப்பதாக ஈரானிய வெளிவிகார அமைச்சர் ஓகஸ்ட் 2008ம் ஆண்டு குறிப்பிட்டிருந்தார்.

பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அமைந்த மூத்தவர்-இளையவர் என்ற உறவுக்கு அப்பால் இந்த இரண்டு நாடுகளுக்குமிமைடயிலான உறவு சிக்கல் நிறைந்ததொன்று.

ஈரானிடமிருந்து தனக்குத் தேவையானதை அகத்துறிஞ்சும் கபடத்தனத்துடன் கூடிய உறவையே கொழும்பு ஈரானிடம் கொண்டிருக்கிறது என இலங்கையர்கள் சிலர் எண்ணுகிறார்கள்.

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தபோது வேண்டுமென்றே கொழும்பில் மின்வெட்டினை ஏற்படுத்தி தங்குதடையற்ற மின் விநியோகம் அவசியமானதொன்று என்பதை ஈரானிய அமைச்சருக்குக் குறிப்புணர்த்துவதற்கு கொழும்பு முயன்றதாகவும் கொழும்பினது இராசதந்திர வட்டகைகளில் கதைகள் உலாவின.

அத்துடன் சிறிலங்கா அணுமின் உலைகளை அமைப்பதை இலங்கையர்கள் அனைவரும் விரும்பவில்லை. "தினமும் வீடுகளிலிருந்து வரும் கழிவுப்பொருட்களை கையாள முடியாமல் திணறும் ஒரு நாடு எவ்வாறு அணுமின் உலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளை பாதுகாப்பாகக் கையாள முடியும்" என சுற்றுச்சூழல்சார் நீதிக்கான மையத்தினைச் சேர்ந்த கேமந்த விதானகே கேள்வி எழுப்புகிறார்.

இங்கு ஈரான் சிறிலங்காவிற்கு வழங்கிவரும் இதர உதவிகளையும் நாம் கருத்திலெடுக்கவேண்டும். டென்மார்க், இந்தியா, உலக வங்கி மற்றும் யப்பான் ஆகிய நாடுகளிடமிருந்தும் சிறிலங்கா அதிக உதவிகளைப் பெற்று வருகிறது. சிறிலங்காவிற்கு அதிக உதவிகளை வழங்கிவரும் இந்த நாடுகள் அல்லது நிறுவனங்கள் அணுவாயுதப் பரவலாக்கத்தினை எதிர்த்து வருகின்றன அல்லது ஈரான் அணுவாயுதங்களைத் தனதாக்குவதற்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றன.

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் ஈரான் கொழும்புக்கு வழங்கிநிற்கும் உதவிகள் மிகவும் முதன்மையானதொன்று. அணுவாயுதத்தினைப் பெறுவதற்கான தனது தேடலில் ஈரான் குறிப்பிட்டுக் கூறக்கூடிய முன்னேற்றத்தினைக் காணுமிடத்து அனைத்துலக சமூகம் ஈரானினை ஒதுக்கிவைக்கும் நிலை தேன்றும். இதுபோன்றதொரு சூழமைவில் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து ஈரானின் அணுவாயுத் திட்டத்தினை எதிர்க்கும் நிலைப்பாட்டினைச் சிறிலங்கா எடுக்குமா என்பது சந்தேகமானதே.

சிறிலங்காவிற்கும் ஈரானுக்குமிடையிலான வரலாற்று ரீதியிலான உறவானது பரஸ்பர நலன்களை அடிப்படையாகக்கொண்டிருந்தாலும் தொடர்புடைய இந்த நாடுகளின்
வெளியுறவுக்கொள்கையினைத் தீர்மானிக்கும் ஒன்றாக இல்லை. அத்துடன் சிறிலங்கா அணுமின் உற்பத்தி நிலையத்தினை அமைக்க முனைவது உள்நாட்டில்கூட
வரவேற்கப்படவில்லை.

நாட்டினது வலு உற்பத்திக் கொள்கை எதுவென்பதற்கு அப்பால் அரசியல் மயப்படுத்தப்பட்ட நவீனமயப்படுத்தலை நோக்கிய எதிர்காலத்தினையே சிறிலங்கா எதிர்பார்த்து நிற்பதாகத் தெரிகிறது.

தி.வண்ணமதி

Comments