சிறிலங்காவைச் சேர்ந்த 73 போர்க்குற்ற சந்தேகநபர்கள் பிரித்தானியாவில் – கார்டியன் இணையத்தளம் தகவல்

போர்க்குற்றங்களில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சிறிலங்காவைச் சேர்ந்த 73 பேர் பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாக தி கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போர்க்குற்ற சந்தேகநபர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பிரித்தானியாவின் எல்லை முகவர் அலகு எச்சரித்துள்ளது.

குடிவரவு அமைப்பின் சிறப்புப் போர்க்குற்ற விவகாரப் பிரிவான இது கடந்த 5 ஆண்டுகளில் 495 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.

சித்திரவதை, இனக்கொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருக்கலாம் என்று இவர்கள் மீது சந்தேகம் கொண்டுள்ளது இந்த அமைப்பு.

ஆனால் இனக்கொலைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு இவர்களில் ஐந்தில் ஒரு பங்கினருக்கே பிரித்தானிய நுழைவிசைவினை வழங்க மறுத்துள்ளது.

இவர்கள் பிரித்தானியாவுக்கு நுழைய தடை செய்யப்பட்டது அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர் அல்லது தாமாகவே வெளியேறினர்.

ஆனால் போர்க்குற்றங்களில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 383பேர் தொடர்ந்தும் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 47 பேர் மீதான விசாரணைகள் ஸ்கொட்லன்யார்ட் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்களில் 73 பேர் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள்.

ஏனையோரில் 105 ஈராக்கியர்களும், 75 ஆப்கானியர்களும், ருவாண்டாவைச் சேர்ந்த 39 பேரும், சிம்பாப்வேயை சேர்ந்த 32 பேரும், கொங்கோ குடியரசை சேர்ந்த 26 பேரும் அடங்குகின்றனர்.

இவர்களில் சதாம் ஹுசேனின் படைப்பரிவைச் சேர்ந்தவர்களும், ஆப்கானிஸ்தான் புலனாய்வுச் சேவையைச் சேர்ந்தவர்களும், அடங்கியுள்ளனர்.

அதேவேளை சிறிலங்காவைச் சேர்ந்த போர்க்குற்ற சந்தேகநபர்கள் 73 பேர் பிரித்தானியாவில் உள்ளதாக கூறப்பட்டுள்ள போதும் அவர்கள் யார் என்பது பற்றிய எந்தத் தகவலையும் தி கார்டியன் வெளியிடவில்லை.

Comments