அடித்தவன் தூங்குவான் அடிப்பட்டவன் தூங்கமாட்டான் - சீறும் இயக்குநர்.கௌதமன்

தமிழ்: ஈழத்தின் மீது உங்களுக்கு தாக்கம் ஏற்பட்டது எப்போது?

கௌ : அப்பா ஒரு கம்யூனிசவாதி என்பதால் நான் சிறுவயதாக இருந்தபோதே எங்கள் வீட்டு திண்ணையில் ஈழத்தை பற்றி பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெறும்.அதனால் பள்ளி பருவங்களில் இருந்தே ஈழத்தின் மீது எனக்கு தாக்கமிருந்தது.

தமிழ்:
ஈழத்தின் கடந்த கால நிகழ்வுகள் ஓர் உணர்வாளனாக,படைப்பாளியாக உங்களுக்குள்
என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

கௌ : எல்லாம் சிதைந்து உலகமே நின்று வேடிக்கை பார்த்து உலக வல்லரசுகள் பல ஒன்று சேர்ந்து மொத்தமும் அழித்து முடித்து சொல்ல முடியாத துயரை தந்துள்ளது. ஈழ மக்களின் சிதைவை மீண்டும் நினைத்தாலும்,எங்காவது பேசினாலும் என் மனநிலையை பாதிக்கிறது ஆனாலும் ஒரு நொடி சுதாரித்து வந்துவிட்டால் மனதளவில் என்னுள் பெரும் நம்பிக்கையுண்டு.தமிழன் என்கிறவன் ஆதிகாலம் தொட்டு இந்த மண்ணில் ஆளுமை செலுத்திய இனம்,மனிதனாக இருந்துள்ளான்.வட இந்தியரான அம்பேத்கரே சொல்லியுள்ளார் தமிழன் தான் இந்தியா முழுதும் இருந்துள்ளதாக,இன்னும் பல ஆராய்ச்சிகளில் பார்ப்போமேயானால் ஈழம் தான் ஆதித்தமிழன் தோன்றிய இடமாக சொல்லப்படுகிறது.மண்ணையும்,மானத்தையும் காப்பதற்கு குடும்பம் குடும்பமாக சென்று போரிட்டு வீரமரணம் அடைந்தயிடம் ஈழம்."அடித்தவன் தூங்குவான்,அடிபட்டவன் தூங்கமாட்டான்"அந்த வகையில் மனதளவில் உடைந்திருந்தாலும் என் படைப்பின் மூலம் இனவிடுதலைக்காக ஏதேனும் செய்தே தீருவேன்.

தமிழ் : திரைப்பட படைப்பு துறை கலைஞர் குடும்பத்திடம் மட்டும் உள்ளது உண்மையா?

கௌ : உண்மையாக சொல்லப்போனால் அப்படியான ஆளுமையே நடந்து கொண்டுயிருக்கிறது.எல்லோரும் வாழணும்,இதுவே ஒரு மன்னன் மக்களை பார்த்து வழிநடத்தி செல்லக்கூடிய செயல். அதுபோன்று கலைஞர்
குடும்பத்தை மட்டுமில்லாமல்
பொதுபடையாக சிந்தித்து எல்லோரும் சமம் என்று நினைக்க வேண்டும்.

தமிழ் : இந்திய அரசு சாமன்ய மக்களுக்குரியதாக உள்ளதா?

கௌ : சாமன்ய மக்களுக்கு உரியதா என்பதை விட என் மொழிக்கும் இனத்திற்கும் சாதகமாகயில்லை என்பது உண்மையான விசயம்.இந்தியா என் தாய்நாடு,இந்தியர் யாவரும் என் உடன்பிறப்புக்கள் என் தாய்திருநாட்டை உளமாற நேசிக்கிறேன் என்று பள்ளி பருவங்களில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தமிழன் நான்.ஆகா தற்போது ஆள்கின்ற காங்கிரசு அரசு என் இனத்தை காப்பாற்றுவதற்கு மாறா அழிப்பதற்கு துணை நின்றிருக்கிறது.

தமிழ் : ஈழத்தை போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற
கொடுமைகள் நடந்து கொண்டுள்ளது அதைபற்றி பேசுவீர்களா?

கௌ : மனிதர்கள் எங்கு சிதைந்தாலும் குரல்கொடுக்க வேண்டியது மனிதனின் கடமை.அந்த வகையில் இந்து,முசுலீம்,சீக்கியர் யாரை கொடுமை படுத்தினாலும் மனிதனாக வேடிக்கை பார்க்ககூடாது.என்னை பொறுத்தவரை அடிப்பவனை விட அடிக்கிறவனை வேடிக்கை பார்ப்பதே மிகப்பெரிய வன்முறையாகும்.அதன் அடிப்படையில் ஓர் அரசு தன் மக்களை பிள்ளையாக பார்க்க வேண்டும்,அதைவிட்டு விட்டு தொல்லையாக நினைத்து மக்களை அழிக்க கூடாது.

தமிழ் : கடந்த நாடாளமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக நீங்கள் சீமான் போன்றோர் பேசினீர்கள். அதன்படி கடந்தயாண்டு சீமான் அவர்கள் தமிழர் உரிமைகளை தாங்கி நாம் தமிழர் கட்சியினை தொடங்கியுள்ளார்,அதைபற்றிய கருத்து.

கௌ : அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக நான் பேசவில்லை என் இனத்தை அழித்த எதிரியை அடையாளம் காட்டுவதற்கே நான் போனது.ஈழத்திற்காக என் இனத்திற்காக என் மொழிக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர் பக்கம் நிற்பேன்,அதற்காக அந்தக் கட்சியில் இணைந்து கொள்ளமாட்டேன்,மற்றபடி சீமான் அண்ணன் எனக்கோர் உயிர் நண்பர்,பிடித்தமான தமிழர்.

தமிழ் : அப்பொழுது உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்ட தலைவன் யார்?

கௌ : நான் தலைவனாக ஏற்றுகொண்டது என் அண்ணன் பிரபாகரனை மட்டுமே,தலைவன் என்பதற்கான ஒழுக்கமும்,நேர்மையும் கொண்டு வழிய வழிய வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரே மனிதர் பிரபாகரன் மட்டும் தான்.

தமிழ்: வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களின் ஆதரவு யார் பக்கமிருக்கும்.

கௌ : என்னுடைய ஆதரவு யார் பக்கமும் இல்லை.நான் அரசியல்வாதியுமில்ல,என் பின்னாடி ஒரு கூட்டமுமில்ல என்னை உணர்வாளனாக காட்டியது சந்தனக்காடு,மகிழ்ச்சி.அந்த படைப்புகளால் தான் தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்தேன்.ஈழத்திற்கு உண்மையாக யார் குரல் கொடுக்கிறார்களோ,பேசுகிறார்களோ அவர்களுக்கு உறுதுணையாகயிருப்பேன்.அது எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி,ஓர் படைப்பாளியாக,தமிழனாக குரல் கொடுப்பேன்.

தமிழ்: பாசிசவாதிகள் சிங்களராகயிருந்தாலும் தமிழர்களையே சொல்கிறார்கள் அது ஏன்?

கௌ : விடுதலை புலிகள் இது வரை ஒரு பொது மக்களையோ,சிங்கள பத்திரிக்கையாளர்களையோ கொன்றதாக பதிவில்லை.ஆனால் இதற்கு நேர்மறையாக இருந்தவர்கள் சிங்களர்கள்.இந்த பழிச் சொற்களுக்கெல்லாம்
துரோகிகளே காரணம்.ஈழத்தில் கருணா போன்றே உலகெங்கும் பல கருணாக்கள் பணத்திற்காக இனத்தை விலைபேசியதே தமிழன் பாசிசவாதி என்று முத்திரை குத்தப்படக் காரணம்.

தமிழ்: “சந்தனக்காடு" என்ற வரலாற்று தொடரின்
வெற்றியாக எதை கருதுகிறீர்கள்.

கௌ : தொடரின் முழு ஒளிபரப்பு முடிந்த பின்னர் ஒரு நாள் சீமான் அண்ணன் அந்த முழுத்தொடரின் இறுவெட்டையும் தயார் செய்ய சொன்னார்.பின்னர்,
மொத்த தொடரையும் மூன்றே நாளில் என் அண்ணன் பிரபாகரன் பார்த்துவிட்டு வீரப்பன் பற்றிய தகவல்களை துல்லியமாக,அற்புதமாக பதிவு செய்துள்ளார் கௌதமன் என்று என் தாய்க்கு நிகராக உள்ள அண்ணன் பிரபாகரன் பாராட்டி,ஈழத்தை பற்றிய வரலாற்று நிகழ்வை பதிவு செய்ய தம்பியை கூப்பிடணும் என்று சொல்லியதே ஆசுகார் விருதை விட மிகப்பெரிய விருதாக எண்ணுகிறேன்.

தமிழ்: வீரப்பன் அவர்களின் மனைவி,குழந்தைகளின் நிலையென்ன?

கௌ :
வீரப்பனின் மனைவி தற்போது கர்நாடக சிறையில் உள்ளார்.அவர் ஒரு பாவப்பட்ட பெண்னென்று தான் சொல்லணும்.இது கர்நாடகாவின் பழி வாங்கும் செயல்,எல்லை காத்த வீரனின் மனைவியை காப்பாற்ற தமிழர்கள் நாம் முயற்சி செய்யணும்.
குழந்தைகள் படித்து கொண்டுள்ளனர்.

நன்றி !வணக்கம்...

நேர்காணல் : மகா.தமிழ்ப் பிரபாகரன்
வலைப்பக்கம் : http://magatamizh.blogspot.com

Comments