தமிழர்கள் பிரிந்த செல்ல கருத்தக் கணிப்பு நடத்துவீர்களா? ஒக்ஸ்போட்டில் பான் கி-மூனிடம் கேள்வி


இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டனவா எனக் கண்டறிந்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, தனது முதற்கட்டப் பணியைப் பூர்த்தி செய்யவில்லை எனவும்,

சிறீலங்கா அரசாங்கதுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி-மூன் தெரிவித்திருக்கின்றார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை (03-02-2011) பான் கி-மூன் மாணவர்கள் முன்னிலையில் (Cyril Foster lecture) மனித உரிமைகளைப் பாதுகாத்தலும், 21ஆம் நூற்றாண்டில் ஐ.நாவும் ((“Human Protection and the 21st Century United Nations”) என்ற தலைப்பில் உரையாற்றியதைத் தொடர்ந்து, கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் ஐ.நா செயலர் நாயகம் உரையாற்றியபோது, சிறீலங்கா அரசாங்கம் புரிந்த இனவழிப்பு பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தனது உதவியாளர்களுடன் அங்கு வழங்கல் செய்த அக்ட் நவ் (Act now) அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான ரிம் மார்டின் (Tim Martin) அதன் பின்னர் இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது பான் கி-மூனிம் இலங்கை பற்றிய வினாவைத் தொடுத்திருந்தார்.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட போதிலும், ஐக்கிய நாடுகள் சபை அதனைத் தடுக்கத் தவறிவிட்டது எனவும், உங்களது பதவிக் காலத்தில் இந்தப் படுகொலை புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவேன் என்ற உறுதிமொழியைத் தர முடியுமா எனவும், போர்க்குற்ற சுயாதீன விசாரணை நடத்தப்படுமா எனவும், மொழி, கலாசாரம், சமயம் என்வற்றால் மாறுபட்டுள்ள தமிழ் மக்களும் சூடான் போன்று பிரிந்து செல்லும் உரிமைக்காக ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பு நடத்துமா எனவும் ரிம் மார்டின் (Tim Martin) கேள்வி எழுப்பியிருந்தார்.

சிறீலங்காவிற்கு இரண்டு தடவைகள் நேரில் சென்றிருந்தபோது அரச அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் மிகவும் கடும் தொனியில் பேச்சு நடத்தியிருந்ததாகவும், போரின்போதும், போர் முடிவுக்கு வந்தபோதும் தாமும் அங்குள்ள மக்கள் மீது கரிசனை கொண்டிருந்ததாகவும் மூன் கூறினார்.

மிக நீண்ட, முரண்பாடான, கடுமையான பேச்சுவார்த்தையின் பின்னர் சிறீலங்கா அரசாங்கத்தை ஒருவாறு பணிய வைத்து, நிபுணர் குழுவை நிறுவியதாகவும், அந்தக் குழு தமது முதற்கட்ட பணியை இதுவரை பூர்த்தி செய்யவில்லை எனவும் பான் கி-மூன் மேலும் தெரிவித்தார்.

யாராவது நீதிக்குப் புறம்பாக குற்றம் புரிந்திருந்தால், மனித உரிமைகளை மீறியிருந்தால் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே நீதியின் அடிப்படைத்தன்மை எனக் கூறிய ஐ.நா செயலர் நாயகம் பான் கி-மூன், நீதியை நிலைநாட்ட அரசியல் நிலையான தன்மை மிகவும் முக்கியம் எனவும், அதனுடன் இணைந்து நீதியை நிலைநாட்டவே தாம் மிகவும் பாடுபட்டு வருவதாகவும், தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அக்ட் நவ் மனிதநேய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்திற்குள் சிறீலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்திய போதிலும் பதவியில் இருந்த பான் கி-மூன் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கத் தவறியிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், போர்க்குற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இந்த அமைப்பு அழைப்பு விடுத்திருக்கின்றது.

அக்ட் நவ் அமைப்பின் இயக்குனர்களில் ஒருவரான ரிம் மார்டின் முள்ளிவாய்க்கால் படுகொலை தடுத்து நிறுத்துமாறு கோரி பிரித்தானியத் தூதுரகத்திற்கு முன்பாக பல நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியவர் என்பதுடன், முன்னர் மனிதநேய அமைப்பொன்றிற்காக கிளிநொச்சியில் பணியாற்றியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்குரிய ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கே சிறீலங்கா அரசாங்கத்துடன் கலந்து பேசியதாகவும், முரண்பட்டதாகவும் கூறும் பான் கி-மூன், போர்க்குற்ற சுயாதீன விசாரணைக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பார் அல்லது முன்னெடுப்பார் என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.

தனது இரண்டாவது பதவிக் காலத்தை தக்க வைப்பதற்காகப் போராடிவரும் பான் கி-மூன், படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
img src="http://www.pathivu.com/uploads/images/Act_now_20100203_004.jpg" border="0" height="488" width="651" />

Comments