தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிக் கொள்வதற்காக அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது – ரொர்ட் ஒ பிளக்

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் பொய்ப்பித்த போதிலும், அதற்காக கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த வெற்றிக்காக பல பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காக பிரபல தொகுப்பாளர் கிராண்ட் ரியாருக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளை யுத்த ரீதியாக தோற்கடிக்க முடியாது என பலர் கருதிய போதிலும், அந்தக் எண்ணக்கரு பிழையானது என அரசாங்கம் நிரூபித்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், அதற்காக அதிகளவு பொதுமக்களின் உயிர்கள் இழக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் ஆகியனவே தற்போதைய இன்றியமையா தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இராணுவத் தந்திரோபாயங்கள் சில நாட்டு அரசாங்கங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை யுத்தத்தில் அதிகளவு பொதுமக்களின் உயிர்கள் இழக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்த வலயத்திலிருந்த பொதுமக்களை பாதுகாப்பாக விடுதலை செய்வதற்கு புலிகள் தவறியதாகவும், இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்களை தெற்கு நோக்கி நகர்வதற்கு புலிகள் அனுமதித்திருந்தால் பாரியளவு உயிர்ச் சேதங்களை தவிர்த்திருக்கு முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் நிலைகளிலிருந்து படையினர் மீது தாக்குதல் நடத்தி, பதில் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்த புலிகள் திட்டமிட்டு செயற்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுமக்கள் இழப்புக்களை காரணம் காட்டி சர்வதேச சமூகத்தைக் கொண்டு அரசாங்கப் படையினரின் முன்நகர்வுகளை தடுத்து நிறுத்த புலிகள் முயற்சித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டிய அதேவேளை பொதுமக்கள் உயிர்ச் சேதங்களை அடையக் கூடாது என்பதே மேற்குலக நாடுகளின் நிலைப்பாடாக அமைந்ததென அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் உயிரிழப்புக்களுக்கு இரு தரப்பினரும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் உயிரிழப்புக்களுக்கு பொறுப்பானர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments