ஈழத்தாயின் மரணம் எமக்கு உணர்த்திச் சென்ற செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் மறைவு ஈழத்தமிழ் மக்களை மீண்டும் ஒரு துயரத்திற்குள் தள்ளியுள்ளது.

பல தசாப்தங்களாக சிங்கள அரசுகளின் அடக்குமுறைக்குள் வாழ்ந்த ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைக்காக பேராடுவதற்கு துணிச்சலும், தன்னம்பிக்கையும், விவேகமும், படைத்துறை நிபுணத்துவமும், அசைக்கமுடியாத இனப்பற்றும் கொண்ட ஒரு தலைவனை தமிழ் இனத்திற்கு தந்தது மட்டுமல்லாது, அவர் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார் ஈழத்தாய் பார்வதி அம்மா.

அதற்கு சிறு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். 1970 களில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கெரில்லா போராளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தபோது, அவரை வந்து சந்தித்திருந்தார் ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறீசபாரத்தினம். தனது வீட்டுக்கு கூட்டிவந்த சிறீசபாரத்தினத்திற்கு உணவு அளித்து மீண்டும் அவரின் இடத்தில் விட்டுவிட்டு வேறு பணிக்காக புறப்பட்டிருந்தார் பிரபாகரன்.

ஆனால் சிறீலங்கா காவல்துறையினரின் கைகளில் சிக்கிய சபாரத்தினம், வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு, சாதாரன உடை அணிந்த சிறீலங்கா காவல்துறையினரின் புலனாய்வுப் பிரிவினருடன் சென்றிருந்தார். அந்தசமயம் பிரபாகரன் வீட்டில் இல்லாததால் அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.

ஆனால் சபாரத்தினத்தின் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களைக்கொண்டு, மறுநாள் அதிகாலை வீட்டை முற்றுகையிட்டு பிரபாகரனை கைது செய்வது என்பதே காவல்துறையினரின் திட்டமாக இருந்தது. இயக்கத்தின் பணிகளை முடித்துவிட்டு மாலை வேளையில் வீட்டுக்கு திரும்பிய பிரபாகரனுக்கு பார்வதி அம்மா நடந்தவற்றை விளக்கினார்.

ஒருமுறை தான் பார்த்தாலும் சிறீசபாரத்தினத்தை அவர் தெளிவாக இனம் கண்டிருந்தார். அவருடன் வந்தவரின் குட்டையான தலைமயிரின் தோற்றத்தை கொண்டு அவர் சிறீலங்கா காவல்துறையை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் அவர் கணிப்பிட்டிருந்தார். பிரபாகரனின் கேள்விகளுக்கு சளைக்காது தகவல்களை வழங்கிய அம்மாவின் மதிநுட்பம் பிரபாகரனை அன்று இரவு தூங்காது எச்சரிக்கை நிலையில் வைத்திருக்க உதவியது.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே அதிகாலையின் அமைதியை குலைத்தது சிறீலங்கா காவல்துறையினரின் ஜீப் வண்டியின் சத்தம். ஜீப் வண்டி பிரபாகரனின் வீட்டு வாசலில் நிற்பதற்கு முன்பாகவே வீட்டின் பின்வழியாக தப்பித்துவிட்டார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவ்வாறு ஆரம்பகாலம் தொட்டே தனது மகனின் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கிய பார்வதியம்மா, வன்னியில் நடைபெற்றபோரில் ஈழத்தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை தானும் சுமந்திருந்தார்.

பனாங்கொட இராணுவமுகாமில், பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கும், அவமானத்திற்கும் உள்ளாகிய அவர். தனது இனத்தின் உரிமைக்கான இலட்சியத்தை இழக்கவில்லை. மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இழப்பிற்கு பின்னர் பார்வதியம்மா விடுவிக்கப்பட்டபோதும், அவர் நோயுடன் போராடிக்கொண்டிருந்தார்.

சிறீலங்கா அரசின் புறக்கணிப்புக்கும், அவமதிப்புக்கும் உள்ளாகிய தயார், இந்தியா சென்று மருத்துவ சிகிச்சையை பெறமுனைந்தபோது, அதனை நிராகரித்தன இந்திய மற்றும் தமிழக அரசுகள். விமானநிலையத்தில் வைத்து அவரை திரும்பி அனுப்பி அவமரியாதை செய்திருந்தார் தமிழக முதல்வர் கருணாநிதி.

பின்னர் தமிழக முதல்வரின் மனிதாபிமானற்ற தன்மையை இந்திய நீதிமன்றம் மூலம் நிரூபித்திருந்தனர் தமிழ் உணர்வாளர்கள். நீதிமன்ற உத்தரவால் அச்சமடைந்த கருணாநிதி, தனது அரசியல் நலனுக்காக பார்வதி அம்மாவை அழைத்தபோது, அதனை நிராகரித்து மரணத்தை விட தமிழ் மக்களின் உரிமையும், மானமும் பெரிதானது என நிரூபித்திருந்தார் பார்வதி அம்மா அவர்கள்.

உரிய சிகிச்சை அளிக்காதுவிட்டால் தனது உயிர்வாழும் காலம் குறைந்துவிடும் என்று தெரிந்தும், மக்களோடு மக்களாக, தனது சொந்த ஊரில் உள்ள வசதிகள் குறைந்த மருத்துவமனையில் கிடைக்கும் சிகிச்சையை பெற்று, தனது உயிரை தியாகம் செய்துள்ளார் அம்மா.

விடுதலைப்போராளிகளின் வாழ்வில் தியாகங்கள் தான் முதன்மையானவை. தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், இலட்சிய உறுதியையும் கொண்டவர்கள் போராளியாகின்றனர். அதில் இருந்து தவறி அற்பசலுகைகளுக்கு அடிமையாகின்றவர்கள் ஒட்டுக்குழுக்களாகின்றனர். இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறைவானவை.

இன்று அவலம், அவலம் என கூக்குரல் போட்டு போராட்டத்தின் இலட்சியத்தை மழுங்கடிக்க நினைப்பவர்களுக்கு பார்வதியம்மாவின் இறுதிக்கால வாழ்க்கை மிகவும் முக்கியமாக பாடத்தை விட்டுச் சென்றுள்ளது. நோயின் துன்பத்தில் (அவலத்தில்) இருந்து விடுபடுவதற்கு கருணாநிதி போட்ட அரசியல் பிச்சையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

விடுதலைப்போராளிகளுக்கு அவர்களின் இலட்சியத்தின் முன், அவர்கள் அனுபவிக்கும் அவலங்கள் ஒன்றும் பெரிதல்ல. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் இருந்து விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் விடுத்த இறுதி உரையும் அதனை தான் சுட்டிக்காட்டி நிற்கின்றது.

அந்த உரையை அவர் விடுத்தபோது கடலில் வைத்து அவரின் மனைவி, பிள்ளைகள் கைது செய்யப்பட்டு, திருமலை சிறீலங்கா கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் சூசையின் குரல் தெளிவாகவே ஒலித்தது, போராடுங்கள், தொடர்ந்து போராடுங்கள். எமது நிலை தொடர்பில் நீங்கள் கவலை கொள்ளவேண்டாம் என அவர் தெரிவித்த இறுதி வாசகங்கள் இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன. தனது குடும்பத்தின் அவலத்தை சூசை அவர்கள் கருத்தில் எடுக்கவில்லை. அவர்கள் சிறீலங்கா கடற்படையின் கைகளில் சிக்கியபோதும், அவர் அடிபணிவு அரசியலை கையில் எடுக்கவில்லை. தனது குடும்பத்தின் அவலத்தை முன்நிறுத்தவில்லை.

மாறாக தமிழகத்தில், நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இருந்து தேம்பி அழுத தம்பிக்கும் தமிழர்கள் தமது உரிமைக்காக போராடவேண்ட திசை நோக்கி கையை காண்பித்திருந்தார். அவலம் என்பது விடுதலைப்போராளிகளுக்கு மட்டுமானதல்ல, அவர்களின் உறவுகளுக்கும் தான். ஏன் அது உரிமைக்காக போராடும் மக்களுக்கும் சொந்தமானது தான்.

இரண்டு மில்லியன் மக்களை பறிகொடுத்த தென்சூடான் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றது. ஈழத்தில் சிறிய தொகையை கொண்ட நாமும் எமது உரிமைக்கான போரில் ஏறத்தாள இரண்டு இலட்சம் மக்களை இழந்துவிட்டோம்.

ஆனால் இந்த இழப்பினால் நாம் பெற்றுக்கொண்ட நகர்வுகள் முக்கியமானவை. அவை தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து உலகின் முக்கிய நாடுகளின் வாசல் கதவுகளை தட்டுகின்றன.

ஒடுக்கப்படும், இனஅழிப்புக்கு உள்ளாகும் ஒரு இனமாக எமது இனத்தை உலகம் பார்க்கும் நிலையை இந்த இழப்புக்கள் எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளன. எனவே இனிவரும் காலத்தில் எமது உரிமைக்கான போரை நகர்த்துவது மிகவும் இலகுவானது. தமிழ் மக்களின் விடுதலைப்போர் அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அரசு மார்தட்டும்போதும், விட்டஇடத்தில் இருந்து போரை பல வடிவங்களின் ஊடாக நகர்த்தும் பாதைகளை விடுதலைப்புலிகள் எமக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

சிறீலங்கா அரசுக்கு துணைபோகிறவர்கள் கூறுவதுபோல விடுதலைப்புலிகளின் வரலாற்றை அழித்துவிட்டு புதிதாக போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டிய தேவை தமிழ் இனத்திற்கு இல்லை. முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாகவே எமது விடுதலைப்போர் தொடரப்போகின்றது.

அது விடுதலைப்புலிகளின் வரலாற்றுடன் தான் நகரும். அதனை தான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு பா. நடேசன் அவர்களும் தெரிவித்திருந்தார். அதாவது “விடுதலைப்புலிகளுக்கு பின்னரான காலம் என்பது ஒன்று இல்லை” என்று.

எமது இனத்திற்கு ஒரு உன்னதமான போராளியை, தலைவரை தந்த தாயின் மரணத்தின்போது அணிதிரண்ட உலகத்தமிழ் மக்களின் எழுச்சிகளும் அதனை தான் மீண்டும், மீண்டும் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

நன்றி: ஈழமுரசு (26.02.2011).

– வேல்ஸ் இல் இருந்து அருஷ்

Comments