எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதியன்று 301 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரில் பதிவு செய்திருந்த ஆளும் கட்சி, “கூட்டமைப்பு” என்ற சொல்லின் மீதுள்ள காதலால், முன்னணியை, கூட்டமைப்பாக்கி, தம்மால் யாழ். மாவட்டத்தில் தாக்கல் செய்த அனைத்து வேட்பு மனுக்களையும் நிராகரிக்கச் செய்து விட்டது.
nomination_3மக்களின் சுதந்திரமான நடமாட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ். குடாவில் தேர்தல் நடைபெறப் போகிறது. அரசியல் தீர்விற்கõன முதல்படிக்கல் இதுவென சிலர் கூற முற்படலாம். அடுத்தபடிநிலை மாகாண சபையொன்றும் அதற்கு அடுத்ததாக சமஷ்டி முறையொன்று வடகிழக்கில் நிறுவப்படும் வாய்ப்புண்டு என்றும் கூறுவார்கள்.
அரசியல் போராட்டத்திற்கு சமாந்தரமாக அபிவிருத்திக்கான போராட்டத்திற்கென இன்னுமொரு குழுவொன்றும், யாழ். மாவட்டத்தில் களமிறங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை யுத்த நிறுத்த ஒப்பந்தம் அரசால் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறியப்பட்ட போது, காணாமல் போன சர்வதேச அனுசரணையாளர்கள், மறுபடியும் உள்நுழைய முனைவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
வன்னிக்கும் கொழும்பிற்குமிடையே சமாதானப் பாலம் அமைக்க முற்பட்ட நோர்வே அனுசரணையாளர் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கொழும்பிற்கும் புலம் பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளுக்கிடையே மேம்பாலம் ஒன்றிணை நிர்மாணிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
தனித் தமிழீழக் கோரிக்கையை தாம் ஆதரிக்கவில்லையென உறுதிபடக் கூறும் நோர்வே அமைச்சர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த முடியுமென்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஜனநாயக அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், தமது இலக்கினை அடைய முனைப்பு காட்ட வேண்டுமென்பதே அமைச்சரின் விருப்பம்.
இவர் ஏற்றுக் கொள்ளாத தீர்வினை தமது இலக்காகக் கொண்டவர்களுடன் எதனடிப்படையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது என்பதனை அவர் புரிந்து கொண்டாலும் இவருடைய புதிய நகர்வு, இன்னுமொரு சர்வதேச சதிவலையின் ஆரம்பமாக இருக்குமோவென மக்கள் சந்தேகமடைவதில் நியாயமுண்டு.
Solheim_AFP_40573_10024 மணி நேரத்தில் மூதூரின் பெரும் பகுதி நிலப் பரப்பைக் கைப்பற்றி, இறங்குதுறையிலிருந்து திருமலை நகரை நோக்கி விடுதலைப் புலிகள் நகர முற்பட்ட வேளையில் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள், புலிகள் மீது செலுத்திய அழுத்தங்களை தற்போது நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாகவிருக்கும்.
இவை தவிர ஜனாதிபதியின் அமெரிக்கப் பயண காலத்திலேயே அனுசரணையாளர், பேச்சாளராக மாறும் செய்தியும் வருகிறது. இந்த “வெள்ளைப் புலி’யின் வேண்டுகோளினை பேரினவாதச் சக்திகள் அனுமதிக்குமாவென்பது வேறு விடயம்.
இருப்பினும் சர்வதேச போர்க் குற்ற விசாரணை மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து அதிக அக்கறை கொள்ளும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், எரிக் சொல் ஹெய்மின் “பேச்சாளர்’ நகர்வினை, எவ்வளவு தூரம் உள்வாங்கிக் கொள்ளுமென்று தெரியவில்லை.
அதேவேளை சூடான் வேறு, இலங்கையின் அமைவிடமும் சிக்கலும் வேறு என்பதை நோர்வே புரிந்து கொள்ளும்.
இலங்கையில் எண்ணெய் வளம் சூடான் போன்று பெரிதாக (?) இல்லாவிட்டாலும் ஆசியாவிற்குச் செல்லும் 70 சதவீதமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள், அம்பாந்தோட்டைக்கு அண்மித்த கடற் பரப்பினூடாகவே செல்கின்றன என்பதுதான் அமைவிடத்திற்கான முக்கியத்துவமாக கூறப்படுகின்றது.
இவை தவிர, இந்தியாவின் வகிபாகத்தைப் புறந்தள்ளி, மேற்குலகின் பிரதிநிதியாக, நோர்வேயின் அமைச்சர் செயல்பட முடியுமா என்கிற கேள்வி மறுபடியும் எழுப்பப்படும். சமாதான கால நிலைமையோடு ஒப்பிடுகையில் இன்றிருக்கும் பூகோள அரசியல் நிலைமைகள், முற்றிலும் மாறுபட்ட இரு உலக ஒழுங்கு நிலை நோக்கி நகர்வதைக் காணலாம்.
தற்போது சுவிசில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டிலும் (World Economic Forum) சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பங்களிப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. வர்த்தக உபரியைப் பயன்படுத்தி, இறக்குமதியை அதிகரிக்கும் சீனாவின் நகர்வுகளால், முரண்நிலை தணிந்து போவதையும் காண்கிறோம்.
ஆகவே ஆர்டிக் கடல் பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடும் ரஷ்யாவும், குறிப்பாக நோர்வேயும் பெறப்படும் மசகு எண்ணெய்யை, பொருளாதார ஸ்திர நிலை பேணும் ஆசியா நாடுகளுக்கே விநியோகிக்கும்.
ஐரோப்பாவின் பொருளாதார அடித்தளம் ஆட்டங்காணும் இவ்வேளையில் நோர்வே போன்ற நாடுகள், இலங்கை விவகாரத்தில் அக்கறை செலுத்துவதிலும் சில பொருளாதார சூட்சுமங்கள் உண்டு. பெரும்பாலான இந்திய ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அச்சப்படும், “”விரிவடையும் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம்” என்கிற விவகாரம், மேற்குலகின் நலனிற்கும் அச்சுறுத்தலாக அமையுமென்று கூறலாம்.
ஆனாலும் இலங்கை அரசிற்கு சவாலாக விளங்கும் புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களின் போராட்ட முனைப்பினை மழுங்கடிப்பதன் ஊடாக, இலங்கை தேசத்தை தம்வசப்படுத்தி, சீன உறவினை ஓரங்கட்டி விடலாமென மேற்குலகம் கணிப்பிட்டால், அது தவறான நகர்வாகவே அமைந்து விடும்.
sudanreferendum203தென் சூடானின் விடுதலைக்கு மேற்குலகம் ஆதரவளித்தது போன்று நாம் கூறும் பாதையில் நீங்கள் பயணம் செய்தால் உங்களின் இலக்கினை அடையலாமென்று எரிக் சொல்ஹெய்ம் கூறுவது போலுள்ளது.
அந்நாட்டு விவகாரத்திலும் போர்க் குற்றம், சீன ஊடுருவல் என்கிற விவகாரங்களே மேற்குலகால் முன்னிலைப்படுத்தப்பட்டன. சூடான் உள்நாட்டுப் போரினால் இருபது இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
அரச ஆதரவில் இயங்கிய ஜன்ஜாவி துணை இராணுவக் குழுவினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டோர் மிக அதிகமென, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு சூடானிய அதிபர், பாபூரில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை முன்னின்று நடத்தியவர் என்பதன் அடிப்படையில் அவரை ஒரு போர்க் குற்றவாளியாக அந்நீதிமன்றம் பிரகடனப்படுத்தியது.
மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளை கட்டவிழ்த்த ஒமர் அல் பசீரின் அரசினை, பெரும்பாலான உலக நாடுகள் புறக்கணித்த நிலையில் எண்ணெய் வளச் சுரண்டலில் ஈடுபட்ட சீன தேசம் ஆதரித்தது.
2005 இல் ஐ.நா. சபையால் விதிக்கப்பட்ட ஆயுத ஏற்றுமதித் தடையையும் மீறி 212, டொங் வெங் ரக கனரக வண்டிகளை, சீனா, சூடானிற்கு வழங்கியதென அனைத்துலக மன்னிப்புச் சபை அன்று குற்றஞ்சாட்டியது.
இவைதவிர 2006 இல் போர் விமான ஓட்டிகளுக்கு பயிற்சி வழங்கவென கே 8 (K 8) ரக விமானங்களை சீனாவும் எம். ஐ. 24 ரக உலங்குவானூர்திகளை ரஷ்யாவும் சூடானிற்கு விற்பனை செய்தது. அத்தோடு பென்ரன் ஏ5 (Pantan A – 5) ரக போர் விமானங்களை சீனா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இத்தனை இலட்சம் மக்கள் டாபூரில் கொல்லப்பட்டாலும் அங்கு நிலவுவது வெறும் பொருளாதாரப் பிரச்சினையென சீன அதிபர் சூ ஜிந்தாவோ கூறியிருந்தார்.
ஆகவே ஏறத்தாள 5 பில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய் வளத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் சூடானிற்கு, சீனா ஏன் ஆயுத உதவி வழங்கியது என்பதைப் புரிந்து கொள்ள ஆழமான ஆய்வுகள் எதுவும் தேவையில்லை.
சீனாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 7 சதவீதம் சூடானில் இருந்தே பெறப்படுகின்றது.
அத்தோடு தென் டாபூர் பிரதேசத்திலுள்ள புளோக் 6 பகுதியின் பெரும்பாலான பங்கு சீனாவின் வசம் உள்ளது.
ஜோன் கரங் (John Garang) அவர்களால் 1983 இல் உருவாக்கப்பட்ட சூடான் மக்கள் விடுதலை இராணும் (SPLA) 2005 இல் அரசுடன் உடன்பாடு ஒன்றினை ஏற்படுத்தி, வாக்கெடுப்பினூடாக பிரிந்து செல்லும் நிலை நோக்கி இன்று வளர்ந்துள்ளதைக் காணலாம்.
அத்தோடு அரசியல் இயக்கமான எஸ். பி. எல். எம் (S P L M) இவ்வாக்கெடுப்பில் வெற்றி பெறுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
பல வகைகளில் தென்சூடான் விடுதலைப் போராட்டம் பதித்த நிகழ்வுகள் ஈழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தோடு ஒத்ததாகக் காணப்பட்டாலும் பிராந்திய சர்வதேச களச் சூழலும் மூன்று பெரும் வல்லரசுகளின் கேந்திர நலன்சார்ந்த தலையீடுகளும் வேறுபட்டதன்மைகளை இனங்காட்டுகின்றன.
இருப்பினும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது சென்னையில் தீக்குளித்து உயிர் நீத்த தியாகி முத்துக்குமாரின் மரண சாசனத்தில் குறிப்பிடப்பட்ட சில வரிகள், புவிசார் அரசியலை தெளிவாக்கியிருந்ததை சுட்டிக் காட்டலாம்.
“”சீனாவின் டாங்கிகள்,
இந்தியாவின் உளவு விமானங்கள்,
பாகிஸ்தானின் ஆட்டிலறிகள் மட்டுமல்ல…
இப்போது எம்மக்களை கொலை செய்து வருவது
சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதனை எப்போது உணர்வீர்கள்?
நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம்
பூமியில் இருந்து முற்றாக துடைத்து அழிக்கப்பட்ட பிறகா?”.
புதிய பேச்சாளர் எரிக் சொல்ஹெய்மும், ஆலோசனைக் குழு அமைத்திருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனும், மார்ச்சில் கூடவிருக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையும், 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்னமும் பொறுத்தருளும் இந்திய அரசும் இதற்கான பதிலை வழங்க முன்வர வேண்டும்.
- இதயச்சந்திரன்,
நன்றி: வீரகேசரி
Comments