இந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரமே

'இந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரமே. உள்ளுர்ச் சூழல்கள் நாடுகளின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை நாங்கள் அறிவோம்'

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZt6jE8uJOhCJUrLoY0E8KTpVpV6GQvQDYU1479pHpheEXGkFdyM4T5iB4hVHhMkj2mJjQmAwcxn8FbIkrpLBrpi5qXpJ-LjQtudxi2rz-XzYKq3JoR5NcPxrhpy-KSmnjqSOmEQPhmGE/s1600/25857_104571952909846_100000711251422_91887_7936700_n.jpg
'இந்திய மக்களும் தமிழ்நாட்டில் இருக்கும் சகோதரர்களும் எங்கள் நீதிக்கான போராட்டத்தில் இணைந்து இந்திய அரசை வரும் காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் The Sunday Indian இணையப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாட்டில் எங்களுக்கான ஆதரவு இருப்பதை நான் உணர்கிறேன். அத்துடன் தமிழ் ஈழத்துக்கான போராட்டமானது ஈழத்தமிழர்களால் மட்டுமல்லாமல் உலக தமிழர்களாலும் எடுத்துச் செல்லப்படவேண்டியது. கடந்த 30 ஆண்டுகளாக செய்ததுபோலவே தமிழக மக்கள் எமது அரசுக்கும் ஆதரவு அளிப்பார்கள்' என ருத்ரகுமாரன் இச்செவ்வியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாடுகடந்த அரசாங்கம் என்பது ஒரு புதிய கருத்தாக்கம். இந்த கருத்தாக்கம் சிலகாலமாகப் பேசப்பட்டு வந்தது. இதில் தேசங்கள் அடிப்படை உறுப்புகளாகப் பேசப்பட்டன. ஆனால் நாங்கள் தற்போது முன்வைத்திருப்பது வித்தியாசமானதாகும். இது ஒரு புதிய மாதிரியாகும்.

எங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசு, ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்துக்கு தங்கள் அரசியல் விருப்பங்களை சர்வதேச அளவில் பேசுவதற்கு உதவும் கருவியாகும். ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைக் கொண்ட, தற்போதைய சர்வதேச உலக அமைப்பில் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் மக்களுக்கும் இடமில்லை.

உலகில் பல்வேறு இடங்களில் நிலவும் ஆயுதப் போராட்டங்களானது, தற்போதைய சர்வதேச அமைப்பு தோற்றுவிட்டமைக்கான ஒரு சாட்சியாகும். தமிழர்கள், குர்தியர்கள், பாலஸ்தீனர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு ஒரே வழி நாடுகடந்த அரசு என்கிற வலிமையான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகத்தான் ஒருவேளை இருக்கக்கூடும் என ருத்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அங்கிகாரம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், 'ஓர் அமைப்பிற்கான அங்கீகாரம் என்பது இரண்டு வடிவங்களில் வருகிறது. ஒன்று வெளிப்படையான அங்கீகாரம். இன்னொன்று வெளிப்படையாக சொல்லப்படாத அங்கீகாரம். இதை நான் வெளிப்படையாகச் சொல்லப்படாத அங்கீகாரம் என்று கருதுகிறேன். வெளிப்படையான அங்கீகாரம் உலகின் புவிசார் மாறுதல்களைச் சார்ந்தது என ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை புலம்பெயர் தமிழர்களின் லட்சியத்திற்கு மேலும் உறுதியளித்துள்ளது. குறிப்பாக அயல்நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் மேற்கு நாடுகளில் தாராளவாத ஜனநாயக வழிமுறைகளில் வளர்க்கப்பட்டவர்கள். 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைப் பார்த்து அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பலனாக ஈழத்தமிழ் தேசம் உருவாவதைப் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.

லிதுவானியா, லத்வியா, எஸ்டோனியா ஆகியவை தங்கள் தாயகத்துக்கு வெளியே இருந்து போராடி வெற்றிபெற்றவை. சுதந்திரத்துக்கு முன்பு அவர்களது நாட்டில் அவர்களுக்கு எந்த தளமும் இல்லை. சர்வதேச அரசியல் சூழ்நிலை கனிந்தபோது சுதந்தர நாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

மேலும் எங்களது அரசை நாடு கடந்த அரசாகவே நாம் உருவாக்கியிருக்கிறோம். எங்கள் செயல்பாடுகள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், இலங்கைக்குள் வாழும் ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலும் செயல்படுவதாக இருக்கும்.

அகதிகளுக்கு பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் உள்ளன என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகும். இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அகதிகளும் நாடு கடந்த அரசில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு. வெளிப்படையாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. சுதந்தரமான தேர்தல் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அரசியல் சாசனக் குழு அமைத்து அரசியல் சாசனம் வரையப்பட்டது.

ஒவ்வொரு இரண்டு வாரத்துக்கும் ஒருமுறை அமைச்சரவை கூடி அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி முடிவுகளை எடுக்கிறது. இப்போது நாங்கள் உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பல நடைமுறைகள் நாங்கள் சுதந்தரமான தனித்து இயங்கும் அமைப்பு என்பதை நிரூபிக்கின்றன.

சமீபத்தில் கொசோவா மற்றும் தெற்கு சூடான் ஆகியவை விடுதலை அளிக்கப்பட்டதையும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம். இது தமிழ் ஈழத்துக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது என ருத்ரகுமாரன் இச்செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Comments