தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு என்ன நடந்தது….?

ஈழத் தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையும் தாயும் நோய்வாய்பட்டு இறந்தமையானது முக்கியத்துவம் பெறுகிறது.

மக்களோடு மக்களாக இருவரும் வெட்டுவாகல் ஊடாகச் செட்டிகுளம் முட்கம்பி முகாம் கொண்டு செல்லப்பட்ட காட்சி கல்நெஞ்சரையும் உருகவைக்கும் சோக நிகழ்ச்சியாகும். பக்க வாதத்தால் பீடிக்கப்பட்ட பிரபாகரன் அவர்களின் தாயார் சக்கர நாற்காலியில் வைத்து அந்த ஐனசமுத்திரத்தின் ஊடாகத் தள்ளிச் செல்லப்பட்டார்

இரத்த அழுத்தம் உட்பட வயிற்றோட்டம், தலைச்சுற்று போன்ற ஒரு தொகுதி நோய்களால் துன்புற்ற பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை தூக்கிச் செல்ல முன்வந்த அன்பர் உதவியை ஏற்க மறுத்தார். அவர் பலமுறை தரையில் வீழ்ந்தார் மீண்டும் எழுந்து நடை பயணத்தை தொடர்ந்தார்

இவர்கள் செய்த குற்றம் ஈழத் தமிழர் விடுதலைக்காக ஆயுதம் எந்திய விடுதலை வீரன் பிரபாகரனை ஈன்ற பெருமைக்குரிய, கிடைத்ததற்கரிய பெரும் பேறாகும். செட்டிகுளம் முகாமுக்கு பல இன்னல்களைக் கடந்து சென்ற இருவரையும் இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றனர்.

இளைப்பாறிய அரச ஊழியரான வேலுப்பிள்ளையின் மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு அரசினால் நிறுத்தப்பட்டது. அவருக்கு என்ன வகைச் சிகிச்சை வழங்கப்பட்டதோ தெரியவில்லை வேலுப்பிள்ளை இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கொழும்பில் இறந்தார்.

அவருடைய பூத உடல் பிறந்த மண் வல்வெட்டித்துறைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு தகனஞ் செய்யப்பட்டது. மனைவி பார்வதியம்மாளின் சோக வரலாறு தொடர்ந்தது. அவர் விரும்பிய நாட்டிற்குச் சென்று சிகிச்சை பெறலாம் என்று மகிந்த அரசு பெருந்தன்மையாக அறிவித்தது.

கொழும்பு, கோலாலம்பூர், சென்னை என்று இந்த மூதாட்டி பந்தாடப் பட்டார். கோலாலம்பூரில் அவருக்கு சென்னைக்குச் செல்லும் உள்நுளைவு அனுமதியை இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வழங்கினார். பின்பு பார்வதியம்மாளின் விமானம் சென்னையை அடைந்ததும் அவரை உள் வரவு திணைக்கள அதிகாரிகள் விமானத்தை விட்டு இறங்க விடாமல் மீண்டும் கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பினர்.

வீசா வழங்களில் தவறு நடந்து விட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் காரணம் கூறினர். சிதம்பரமும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் நகமும் சதையும் போன்றவர்கள். பார்தியம்மாளுக்கு நடந்தது பற்றித் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று கருணாநிதி கையை விரித்தார்.

தன்னைச் சனநாயக நாடாகப் பிரசாரம் செய்யும் பாரத தேசம் பார்வதியம்மாளைப் பொறுத்தளவில் காட்டு மிராண்டித் தனமாக நடந்துள்ளது. பாரதம் திரும்பி வரும்படி பார்வதியம்மாளை அழைத்தது. இது வெந்த புண்ணில் வேல் பாய்சுவதற்குச் சமமாகும். அவர் பிரபாகரனின் தாய் — மறுத்து விட்டார்.

அழைப்பை ஏற்க மறுத்த பார்வதியம்மாளுக்கு வல்வெட்டித்துறையில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. உடலும் உயிரும் சோர்வுற்ற நிலையில் கொடிய நோய்களின் தாக்கத்தால் அவர் 20.02.2011 காலை 6.10 மணியளவில் காலமானார்.

தமிழீழ மக்களின் இக்கட்டான காலகட்டத்தின் வெளிப்பாட்டைத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றாரின் இறுதி கால வரலாற்றில் காணலாம் இருவரையும் செட்டிக்குளம் வர உதவியவர்கள் கூடச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். என்றால் வஞசம் தீர்க்கும் கொடிய உள்ளங்களின் பகைமையை உணர முடியும்.

காலம் ஒரு நாள் மாறும் எமது கவலைகள் எல்லாம் தீரும். பிரபாகரனின் பெற்றோருக்குரிய மதிப்பும் கவுரவமும் அப்போது சரிவரக் கிடைக்கும்.

நன்றி தமிழ்க்கதிர்

Comments