இணையத்தள உரிமையாளர்களைக் குறிவைக்கும் இலங்கை புலனாய்வு

புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் தேசிய இணையத்தள உரிமையாளர்களை குறிவைத்து உள்நுளையும் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய இணையங்களைக் குறிவைத்து இந்தப் பெரும் காய்நகர்வுகள் திரைமறைவில் மிகவும் ரகசியமாகவும் நேர்த்தியாவும் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஒட்டுக்குழுவினர் சிலர், இணையத்தள உரிமையாளர்களை அணுகி விளம்பரம் போடவேண்டும் என்ற போர்வையில், அவர்களோடு நட்பை ஏற்படுத்த முனைகின்றனர். அதன் மூலம் அவர்களோடு உறவாடி பின்னர் உங்கள் இணையத்தளத்தை தான் வடிவமைத்து தருவதாகவும் கூறுகின்றனர். சில நாட்களில் ஏற்பட்ட பழக்கம் காரணமாகச் சிலர் அதற்கு ஒத்துக்கொண்டு தமது இணையத்தை திருத்தி வடிவமைக்க அவர்களிடம் கொடுக்கும் போது, குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் இயங்கக்கூடிய வகையிலான வைரஸை ஏற்றுகிறார்கள்.

சிலர் இவர்களை நம்பி தனது முழு இணையத்தையும் கொடுத்து அதன் கட்டுப்பாடுகளை இழந்து, பறிகொடுத்தும் உள்ளனர். விளம்பரத்துக்கான பணத்தை கட்டும் போது, வங்கி கணக்குகளை கேட்டறிந்து, பின்னர் அந்தந்த வங்கிகளில் வேலைசெய்யும் தமது சில சகாக்களை வைத்து இணையத்தள உரிமையாளர்களின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. அதனை இவர்கள் இலங்கை தூதரகத்துக்கு கொடுத்து, இலங்கையிலிருந்து செய்தி வழங்குவோரையும் அச்சுறுத்துகின்றனர். இது போன்ற பாரிய மறைமுக அச்சுறுத்தலுக்கு தமிழ் தேசிய ஊடகங்களின் உரிமையாளர்கள் முகம் கொடுக்கவேண்டி உள்ளது. இது போன்ற இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் எல்லை கடந்த தாக்குதலை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, இச் செயல்பாட்டாளர்கள் யார் யார் என்பது குறித்து பிரித்தானிய மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பொலிசாருக்கு தெரியப்படுத்தவும் உள்ளோம்.

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கிவரும் இலங்கை அரசு, தனக்குத் தலைவலி தரும் புலம் பெயர் மக்களுக்கு ஊக்கம் மற்றும் செய்திகளைக் கொடுக்கும் இணையத்தளங்கள் மீது இத் தாக்குதலை நன்கு திட்டமிட்டு நடாத்தி வருகிறது. இவ்வாறு நடத்தப்படும் தாக்குதலுக்கு தமிழ் தேசிய இணையங்கள் முகம்கொடுக்கவேண்டி உள்ள சூழ் நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டு சில இணையங்கள் செயல் இழக்கிறது. அந்த நேரத்தைப் பாவித்து, அவர்கள் இலங்கை அரசுக்காகவே வேலைசெய்வதாக, அரசுக்கு ஆதரவாக இருக்கும் சில இணையங்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதோடு அந்த தமிழ் தேசிய இணையங்களை மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கச் செய்கிறது.

இதுவரை காலமும் எந்தத் தமிழ் இணையங்கள் வைரஸ் தாக்குதலுக்கு, சைபர் தாக்குதலுக்கு முடக்கப்படவில்லையோ அந்த இணையங்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பதே தற்போதைய கேள்விக்குறி. ஏன் அந்த இணையங்கள் மீது இன்னும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதனையும் மக்கள் ஒரு முறை எண்ணிப்பார்ப்பது சாலச்சிறந்ததாகும் !

Comments