தமிழக மீனவர்களை இனிமேல் சுட மாட்டோம் என்று இலங்கை உறுதி கூறியிருக்கிறது. 2008-ம் ஆண்டு வரை மீனவர்கள் சுடப்பட்டபோது விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருள்களைக் கடத்துகிறார்கள், அதனால் சுட்டோம் என்றார்கள். வருத்தப்பட்டோம். பிறகு எங்களுக்குப் பயந்து உதவி செய்யாத மீனவர்களை புலிகளே சுட்டுக் கொல்கிறார்கள் என்றனர். பேசாமல் இருந்தோம். பின்னர், போரில் புலிகள் அழிக்கப்பட்டனர் என்று பறைசாற்றிய பின்பும் சுட்டுக் கொல்கிறார்கள். மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புகிறோம்.
÷தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை சுடப்படும்போதும் மத்திய அரசின் மென்மையான கண்டிப்பும், கடிதம், தந்தி மட்டுமே அனுப்பும் தமிழக அரசின் நடவடிக்கைகளும் ஜன.12-ம் தேதியும், ஜன.22-ம் தேதியும் நடந்த படுகொலைச் சம்பவங்களின் பின்பு மாறியிருக்கிறது. இருமுறையும் சற்றே வேகம் காட்டியுள்ள மத்திய, மாநில அரசுகளைப் போன்று இலங்கை அரசும் துரிதமாகச் செயல்பட்டிருக்கிறது.
÷இந்த நிகழ்வுகளில் கவனிக்க வேண்டியது 3 விஷயங்கள். முதலில், இம்முறை மீனவர் ஜெயக்குமார் என்பவர் சுடப்படவில்லை. கயிற்றால் கழுத்து இறுக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். அதாவது, தெரியாமலோ அல்லது தவறுதலாகவோ சுடப்படவில்லை என்பது தெளிவாகிறது. இரண்டாவது, ஜன.12-ம் தேதி மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவித்த பின்னும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் படுகொலை செய்ததற்கு மத்திய அரசு மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது (எச்சரிக்கை அல்ல!). மூன்றாவது, இலங்கை அரசு இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் மூலம் இனிமேல் சுடமாட்டோம் என உறுதி அளித்திருக்கிறது. அதாவது "இதுவரை சுட்டது நாங்கதான்' என்பதை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல ஒத்துக்கொண்டிருக்கிறது.
÷மீனவர் கொல்லப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்தது குறித்து விளக்கம் அறிய வந்தபோதுதான், தமிழக அரசு தலைமைச் செயலரிடம் மேற்கண்ட உறுதியைக் கூறியிருக்கிறார் இலங்கைத் தூதர்.
÷முதலில் ஒரு மீனவர் கொல்லப்படுகிறார். பிறகு ஒரு கும்பல் இலங்கை சங்கத்தின்மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், தூதரோ தாக்குதல் நடத்தப்பட்டதை முதன்மைப்படுத்தி மாநில அரசைச் சந்திக்கிறார். ஒரு தாக்குதலுக்கே இலங்கை அரசு தூதரை அனுப்பி விளக்கம் கேட்கிறது. ஆனால், 400-க்கும் மேலான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் மத்திய அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை என்ன என்பதுதான் தெரியவில்லை. எப்படிச் சொன்னாலும் இலங்கையில் யாரும் கேட்க மாட்டார்கள் என்று மென்மையான கண்டிப்புடன் நிறுத்திவிட்டார்கள் போலும்!
÷தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கைக் கடற்படையினரை அறிவுறுத்தியிருக்கிறோம் என்கிறார் இலங்கைத் தூதர். இலங்கைக் கடற்படையினரும் சுடவில்லை, அங்கு இல்லாத புலிகளும் சுட வாய்ப்பில்லை. அப்படியெனில் யார் இந்தப் படுகொலையைச் செய்திருப்பார்கள் என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும் என்று மூடி மறைக்கப் பார்க்கிறார் அவர்.
÷கடற்படையும் அல்ல, புலிகளும் அல்ல என்றால் அப்பகுதியில் வேறு நாடு ஏதாவது கப்பலில் ரோந்து சுற்றுகிறதா? அப்படியே இருந்தாலும் அது இந்தியக் கடற்படைக்குத் தெரியாதா? அல்லது சோமாலியக் கடற்கொள்ளையர்கள் யாரேனும் வழி தவறி வந்து விட்டார்களா? அல்லது சீன வீரர்களும் இலங்கை கடற்படையுடன் வருகிறார்கள் என்று சில மாதங்களுக்கு முன் மீனவர்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்ததே, அவர்கள் செய்த வேலையா?
÷கடந்த காலங்களிலும் மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கடும் கண்டனம் தெரிவிக்காத மத்திய அரசு இம்முறை தெரிவித்திருக்கிறது. அதேபோல் எப்போதும் வராத இலங்கைத் தூதர் இப்போது வந்து விளக்கம் சொல்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன என்பதை இந்தியத் "தேர்தல்' ஆணையத்திடம்தான் கேட்க வேண்டுமோ என்னவோ!
÷வேதாரண்யத்தில் இருந்து சென்றவர்கள் சுற்றுலாப் பயணிகளும் அல்ல. அவர்கள் சென்றது சொகுசுக் கப்பலும் அல்ல. மீன் வலையை வீசினால்தான் பசி வலையை அறுத்தெறிய முடியும் என்று வாழும் மீனவர்கள். அவர்களுக்கு நடுக்கடலில் வருவது யார்? என்ன மொழி பேசுகிறார்கள்? என்ன உடை அணிந்திருக்கிறார்கள்? என்பது நன்றாகவே தெரியும். நடுக்கடலில் நடந்ததை தப்பி வந்த 2 மீனவர்களும் விரிவாகக் கூறிய பின்னரும் வந்தது நாங்கள் அல்ல, இருந்தாலும் இனி சுடமாட்டோம் என்று இலங்கை அரசு கூறினால் அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.
÷ஈரானியப் பெற்றோருக்குப் பிறந்த அமெரிக்கப் பத்திரிகை நிருபர் ரோக்ஸôனா சபேரி ஈரானில் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டபோது அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் முயற்சி எடுத்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், 2008-ம் ஆண்டு இந்திய, இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இந்தியா கண்டனம் தெரிவித்த 10-வது நாள் மீண்டும் ஓர் இந்தியக் குடிமகனை நடுக்கடலில் இலங்கை படுகொலை செய்கிறது என்றால், அதை மத்திய அரசின் மெத்தனப்போக்கு என்பதா அல்லது இலங்கை அரசின் அலட்சியம் என்பதா எனத் தெரியவில்லை.÷குஜராத் மீனவர்களுக்கோ, மேற்குவங்க மீனவர்களுக்கோ இப்படி நடந்தால் மத்திய அரசு சும்மா இருக்குமா? என்று விரக்தி அடையும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளக் குமுறலையும் யார் தடுப்பது?
÷ஜூலை 2008-ம் ஆண்டு இதுபோல் ராமேசுவரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, "ராமேசுவரத்தில் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதைப்பற்றி தமிழக அரசு அக்கறையோடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும் தெரிவித்து வருகிறது. ஏதாவது ஒரு சுமுகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். அது பிரதமர் மன்மோகன் சிங் கையில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்னை பற்றி இங்கே செய்தியாளர்களிடம் ஆழமாக விவாதிக்க முடியாது. சில விஷயங்களை நான் இங்கே வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை' என்று முதல்வர் கருணாநிதி கூறினார். (9 ஜூலை 2008 தினமணி)
÷2008 ஜூலையில் இருந்த அதேநிலை இப்போதும் தொடர்கிறது. இப்போது முடிவு பிரதமர் கையில் மட்டுமல்ல, முதல்வர் கையிலும் உள்ளது. விரைவில் சுமுகமான முடிவு ஏற்பட்டாக வேண்டும். இல்லையெனில், கரை மேல் பிறக்க வைத்தான், எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற வரிகள் உண்மையாகி, மீனவர்கள் தங்கள் வாழ்வின் முடிவை நடுக்கடலில் சந்திக்கும் பேரவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
Comments