எட்டி உதைபடும் கால்பந்து ஈழத் தமிழர் பிரச்சனை...?

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இந்தியாவை நம்புவது அர்த்தமற்றது - ஐ.தே.க..! இந்தியாவிற்கு இருக்கும் ஏகப்பட்ட பிரச்சனையில் எப்படி முடியும்...?! ஜயலத் எம்.பி. !
mahi-sonija
தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கு, இந்தியாவையே எதிர்பார்த்திருப்பது அர்த்தமற்றது. ஐ.தே.க.வின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதே சிறந்தது என்கிறார் ஜயலத் எம்.பி., என்னத்த சொல்லுறது..! தேசிய ரீதியில் தமிழர் பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் விடயத்தில் தமிழகத்தையோ அல்லது இந்தியாவையோ நம்பி இருப்பது அர்த்தமற்ற எதிர்பார்ப்பாகும். இவ்விடயத்தில் இந்திய அரசின் இயலுமையில் தளம்பல் நிலை காணப்படுகிறது. 'இயலுமையில் தளம்பல்'...? இப்படியெல்லாம் நிலைமைகள் அதாவது தளம்பல் இருக்கும், இருந்து கொண்டே இருக்கும் என்ற காரணத்தில் தானே விடுதலைப் புலிகள் தனி ஈழம் கேட்டனர். கொடுத்து விட்டு போய் இருக்க வேண்டியது தானே. அதைவிடுத்து யோசனை மேல் யோசனை கூறுகின்றனர். புலி அரசியலை எதிர்க்கும் அணைத்து களவானிகளும் மொள்ளமாரிகளும் என்ற நமது கோபம் நியாயமற்றவை என்று யாராவது சொல்ல முடியுமா..?

தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்ட கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி விளங்குகிறது. இந்நிலையில், தமிழ் மக்களின் பிரதிநிதியான த.தே.கூ.அமைப்பினர், ஐ.தே.க. கட்சியுடன் கலந்து பேசி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறார்கள். மகிந்தா ராஜபக்சேவுக்கு முன்னர் யார் இருந்தார்கள் இலங்கை ஆட்சி அதிகாரத்தில்..? ஒருவேளை, மகிந்தாவின் மூதாதையர்கள் யாரேனும் இருந்திருப்பார்களோ..? யாம் அறியோம் பராபரமே..!

தமிழ் மக்களால் எதிர் நோக்கப்படுகின்ற பிரச்சனைகள் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்ற ஐ.தே.க. வினர், தமிழர் விவகாரத்தை ஒரு போதும் அரசியல் நோக்கமாக கருதி செயற்பட்டது கிடையாது என்று சொல்கிறார் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனே. இதோடு நிற்கவில்லை, கிழிந்து கந்தலான இலங்கையின் ஜனநாயக குடையை உயர்த்தி பிடிக்கிறார்கள், எவ்வாறு எனில், அணைத்து சமூகமும் சகோதரத்துடன் ஒரே குடையின் கீழ் வாழ வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். இன, மத, குல பேதங்கள் ஐ.தே.க. வினரிடம் இல்லை என்று வேறு. இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் இருப்பதையும் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் இழுத்தடித்துச் செல்லப்படுவதையும் இந்நாட்டில் உள்ள ஏனைய தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டுமாம்.

இந்த விவகாரம்..? பிரச்சனைகள் அல்லது விவகாரம் அல்லது சிக்கல்..? என்ன மொழி நடை இது..? தமிழர்களுக்கு என்ன பிரச்சனை..? என்ன விவகாரம் ..? இலங்கையில்..! இந்த விவகாரத்தில் அரசாங்கம் அதாவது மகிந்தா ராஜபக்சே அரசு, என்னதான் கதைகளைக் கூறினாலும், வாக்குறுதிகளை வாரி இழைத்தாலும், இல்லாவிட்டால் பேச்சு வார்த்தை சுற்றுக்களை நடத்தினாலும், அதில் இதய சுத்தி இல்லை என்கிறார் நம்ம ஜயலத். டாக்டருக்கு படித்தவர் அல்லவா, சரியாகத்தான் சொல்லுவார்.

த.தே.கூ அமைப்பினர் மகிந்தாவுடன் என்ன தான் பேசினாலும் ஒன்றும் கவைக்கு உதவாது என்கிறார் நம்ம டாக்டர். மேலும் த.தே.கூ வினர் எப்பொழுதுமே தமிழகத்தையும் இந்தியாவையும் நம்பிக் கொண்டே இருக்கின்றனர். இவை ஒருபோதும் எந்த பலனையும் தரப் போவதில்லை. ஏனெனில், இந்தியாவில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கே அங்கு நேர காலம் போதாது காணப்படுகின்ற சந்தர்பத்தில், இலங்கை விவகாரம் இந்தியாவிற்கு பாரிய விடயமாக இருக்கப் போவதில்லை. இது தான் உண்மை நிலையும் கூட. எனவே நமது உள்நாட்டு பிரச்சனைகளுக்கு நாமே தீர்வுகளை தேடியாக வேண்டும். இதில் அரசாங்கத்தின் அதாவது மகிந்தா ராஜபக்சேவின் பங்கு அதிகமானதாக உள்ளது.

மேலும் படு பயங்கரமான கருத்தை சொல்லுகிறார் இந்த மெத்த படித்த டாக்டர் அவர்கள். தேசிய பிரச்சனை எனும் போது, அங்கு பாகுபாடுகளுக்கு இடமளிக்க முடியாது. இனங்களை மொழிகளை வைத்து பிரித்தறிந்து செயற்படுவதற்கும் அனுமதிக்க முடியாது. மகிந்தா ராஜபக்சே அரசு, பொதுவானதாக இருக்க வேண்டும். அவ்வாறே பிரச்சனைகளையும் அனுக வேண்டும். அந்தவகையில், தமிழர் விவகாரத்தில் மகிந்தா அரசு நேர்மையாக செயற்பட்டு தீர்வுகளை முன்வைக்க வேண்டியது அதன் பருப்பும் கடலையும் ( பொறுப்பும் கூடவே கடமையாம்..! ) ஆகும்..!

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஐ.தே.க. என்றும் அக்கறையுடன் செயற்படுகின்ற கட்சி என்ற வகையில் த.தே.கூ. எம்முடன் கலந்து பேசி ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும். இந்தியா எமது நேச நாடு, இதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எமது உள்நாட்டு பிரச்சனைகளுக்கு நாமே ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்கும் பட்சத்தில் இந்தியாவினால் எமக்கு உதவ முடியும். எனினும் இந்தியாவையே நம்மியிருக்கவோ எதிர்பார்த்திருக்கவோ முடியாது என்று செப்பி இருக்கிறார் நம்ம டாகடர்.

எப்படி சொல்லுகிறார்கள் இந்த ரணில் கோஷ்டியினர் தீர்வுகளை முன்மொழிதலை..! இந்திய அரசு உதவாதாம். நம்மக் கூடாதாம். எனவே நாமே பேசி தீர்க்க வேண்டுமாம். மகிந்தா ராஜபக்சே அவர்களின் மனம் நோகாமல் இருக்க வேண்டுமாம். ! எது..? தமிழர் பிரச்சனை..? அப்படி என்ன உள்ளது பிரச்சனை இலங்கையில் தமிழர்களுக்கு..? நாம் அறிந்த வரையில் இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே..! ஏன் வீணாக குழப்பிக் கொள்கிறார்கள் இந்த ஐ.தே.க.வும் மெத்த படித்த டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தனேவும்...!

சங்கிலிக்கருப்பு
ஈழதேசம் !

Comments