குழம்புகிறதா கூட்டமைப்பு ??

sampanthan
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது ஆளும் கூட்டணிக்கும் ஈபிடிபிக்கும் பேரிடியாக அமைந்து விட்டது.

வடக்கில் சிங்கள அரசின் ஆட்சியையே தமிழர்கள் விரும்புகிறார்கள் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த மகிந்த ராஜபக்ஸவுக்கும் சரி- அவரது சொல்லுக்கெல்லாம் தலையாட்டும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சரி- வேட்புமனுக்கள் நிராகரிப்பு அதிர்ச்சி வைத்தியமாகவே அமைந்துள்ளது.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான ஒரு சக்தியாக மாற்றம் பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணியும், புளொட்டும் இணைந்து கொண்டது மிகப்பெரிய பலம்.

ஈபிஆர்எல்எவ் கைவிடப்பட்ட போதும் அது போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது.

ஒரு வகையில் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமானதே.

அந்த வகையில் இதை அவர்களின் பெருந்தன்மையாகவும் பார்க்கலாம்.

இன்னொரு பக்கத்தில் தமிழ்மக்களின் உச்சமட்ட அரசியல் அபிலாசைகளை தற்போதை நிலையில் பிரதிபலிப்பதாக கூறும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது.

தமிழ்க் காங்கிரஸ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன் போன்றோரை உள்ளடக்கியதே இந்தக் கட்சி.

இவர்கள் தேர்தலுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டே வந்தனர். ஆனால் வேட்பாளர்கள் கிடைக்கமுடியாதவாறு நகர்த்தப்பட்ட அரசின் அச்சமூட்டும் கொலைகளும் அதன் நடவடிக்கைகளும் அக்கட்சியானது தேர்தலை விட்டு ஒதுங்கிக் கொள்ள நேரிட்டது.

இவர்கள் ஒதுங்கிக் கொண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சாதகமே.

அல்லாவிட்டால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

இப்போது அப்படியான நிலை இல்லை.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் பேச்சுக்கள் தோல்வி கண்ட போது யாழ்ப்பாணத்தில் அனைத்து சபைகளுக்கும் புதிய இடதுசாரி முன்னணியுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அறிவித்தார் சிவாஜிலிங்கம்.

ஆனால் கடைசி நேரத்தில் காட்சி மாற்றம் நிகழ்ந்தது.

சிவாஜிலிங்கத்துக்கும் மாவை சேனாதிராசாவுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாடு ஒன்றின் அடிப்படையில் அவர் வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதன்மூலம் சிவாஜிலிங்கத்தின் கட்சியும் புதிய இடதுசாரி முன்னணியும் வாக்குகளைப் பிரிக்கின்ற நிலை மாற்றமடைந்துள்ளது.

ஆயினும் இந்த முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்களைத் தோற்றுவிக்கத் தவறவில்லை.

சிவாஜிலிங்கத்தை வல்வெட்டித்துறை நகரசபைக்கான வேட்பாளராக நிறுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அல்ல என்றும் அது மாவை சேனாதிராசாவின் தனிப்பட்ட முடிவு என்றும் செல்வம் அடைக்கலநாதனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இவர்களே இந்தக் குழப்பத்தைபை வெளியே கசியச் செய்தனர். வல்வெட்டித்துறை நகரசபை வேட்பாளர் பட்டியலில் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் குலநாயகமும் ஒருவர்.

அவரும் அங்குள்ள பிரமுகர்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் தான் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கூறுகிறார் மாவை சேனாதிராசா.

சிவாஜிலிங்கம் தன்னை முதன்மை வேட்பாளராகக் காண்பிக்க முனைந்தாலும் அதை நிராகரித்துள்ளார் மாவை.

எனினும் குலநாயகமும், சிவாஜிலிங்கமும் முதல்வர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்குப் பகிர்ந்து கொள்வதாகவே இணக்கப்பாடு.

சிவாஜிலிங்கத்தைப் பொறுத்தவரையில் செல்வாக்கை இழந்து போய் விட்டார். அவரால் கட்சியை நடத்த முடியாது.

இந்தக் கட்டத்தில் தனக்கு ஏதாவதொரு பதவி கிடைத்தால் போதும் என்ற நிலையில் சரணாகதி அடைந்துள்ளார்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நல்லூரில் வேட்பாளர்களுக்கான பட்டறை ஒன்று நடத்தப்பட்டது.

அதில் சிவாஜிலிங்கம் ஒரு வேட்பாளராக மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சிவாஜிலிங்கத்தை உள்வாங்குவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பும் சரி, ஆனந்தசங்கரி, சித்தார்த்தனின் வருகைக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பும் சரி எல்லாமே அரசியல் நலன்களை முன்னிறுத்தியவையாகவே உள்ளன.

அரசியல் முனைப்புகள் மேலோங்கியுள்ள நிலையில் கட்சிகளின் தலைவர்கள் தம்மைச் சுற்றிச் தனியானதொரு வட்டத்தை உருவாக்க முனைகின்றனர்.

அதற்கு இத்தகைய கூட்டணிகள் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம் பலருக்கும் வந்துள்ளது.

சிவாஜிலிங்கம் விவகாரத்தைக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசியிருக்க வேண்டிய சுரேஸ் பிறேமச்சந்திரனும், செல்வம் அடைக்கலநாதனும் அதை அறிக்கையாக வெளியிட்டனர்.

இப்போது கூட்டமைப்புக்குள் குழப்பம் என்று அரசாங்கம் பிரசாரத்தைச் செய்ய, அப்படி ஏதும் இல்லை என்கிறார் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

அப்படியானால் அதைத் தொடக்கி வைத்தது யார் என்பதை அவர் மறந்து போய் விட்டார்.

அது மட்டுமன்றி கிளிநொச்சியில் ஆனந்தசங்கரியின் வருகையைக் கடுமையாக எதிர்த்தவர் சிறிதரன்.

இணக்கப்பாடு ஏற்பட்ட பின்னரும் கூட அவர் ஆனந்தசங்கரியை மறைமுகமாகத் தாக்கியிருந்தார்.

கடைசியில் அவர் அவசரப்பட்டு சமர்ப்பித்த வேட்புமனுக்கள் இரண்டு நிராகரிக்கப்பட ஆனந்தசங்கரியின் காலில் விழ நேரிட்டது.

ஆனந்தசங்கரியின் உதயசூரியன் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு பிரதேச்சபைகளில் போட்டியிட நேரிட்டுள்ளது.

இல்லாது போனால் இரண்டு பிரதேச சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து போகும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

இங்கு சுயேட்சையாக நிற்கவும் வாய்ப்புக் கிடைத்திருக்காது. ஏனென்றால் சுயேட்சைகள் கட்டுப்பணம் செலுத்தும் காலக்கெடு முடிந்து போன பின்னர் தான் தமது வேட்புமனுவில் தவறுகள் உள்ளதை உணர்ந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இந்தத் தவறு கூட சிறிதரனின் அவசரத்தனத்தால் ஏற்பட்டது தான்.

கடைசி நேரத்தில் தனது தெரிவு வேட்பாளர்களை மாற்றும் நிலை வந்து விடுமோ என்ற பயத்தில் தான் அவசர அவசரமாக சமாதான நீதிவானின் ஒப்பத்தை பெறாமல் அவர் வேட்புமனுவைக் கையளித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்போது வலுவான தலைவர்களாக தம்மை நினைத்துக் கொள்ளும சிலர் தமது நலன்களுக்காக வெளியே இருக்கும் சிலரைத் துரும்பாக நினைக்கின்றனர்.

ஆனால் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை யாரும் மறந்து போக முடியாது.

எத்தகைய காரணங்கள் இருந்தாலும் எதைக் கூறினாலும் உண்மையில் இந்தத் தேர்தலில் ஆனந்தசங்கரியும், சித்தார்த்தனும், வரதராஜப்பெருமாளும், கஜேந்திரகுமாரும் நிறையவே விட்டுக் கொடுத்துள்ளனர் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்து போகக் கூடாது.

எல்லாக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தலில் நின்றிருந்தால் அது அரசதரப்புக்கு சாதகமானதாக மாறியிருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அது சவாலாகவும் அமைந்திருக்கும். உள்ளூராட்சித் தேர்தலுக்கு அப்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான சக்தியாக இருக்க வேண்டுமானால் இந்த அரசியல் கூட்டணி நிலைத்திருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சியில் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட போது அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டது. ஆனால் திருகோணமலையில் தம்பலகாமத்திலும், மொறவெவ எனப்படும் முதலிக்குளத்திலும் அதன் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்குப் போதிய கால அவகாசம் இருந்தது.

அப்போதெல்லாம் எதையிட்டும் கவலைப்படாதிருந்த கூட்டமைப்புத் தலைவர்கள் கடைசி நேரத்தில் தான் கண் விழித்துக் கொண்டனர். இது கூட்டமைப்பின் வழக்கமான பாணியாகி விட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்டால் தான் அவர்களுக்கு சுறுசுறுப்பு வரும். முன்னரே எல்லாவற்றையும் தயார்படுத்தி வைத்திருந்தால் கடைசி நேரத் தவறுகளைத் தவிர்த்திருக்கலாம்.

தம்பலகாமம் பழம்பெரும் தமிழர் பிரதேசம். முதலிக்குளம் என்ற தமிழர் பிரதேசம் இப்போது சிங்கள மயமாகியதன் விளைவே மொறவெவ என்றாகியது.

இவற்றின் மீதான ஆதிக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிட்டிருக்கிறது.

இதுபோன்ற நிலைமைகள் இனிமேலும் ஏற்படக் கூடாது. அந்தக் கூட்டுப் பொறுப்பை அனைத்து தமிழ்க் கட்சிகளினதும் முக்கிய தலைவர்களும் உணர வேண்டும்.

அடுத்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் வரப் போகிறது. அதில் வலுவான பலத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கு உள்ளூராட்சித் தேர்தல் கை கொடுக்கும்.

அதற்குள்ளாகவே விருப்பு வாக்கு மோதல்களில் சிக்கிக் கொள்ளாமல், இணைந்த கைகளைப் பற்றிக் கொண்டு கூட்டமைப்பை வலுப்படுத்த முனைய வேண்டும்.

அதுவே வடமாகாண சபைக்கான தேர்தலில் மிகவும் பலமான சக்தியாக உருவெடுக்க வழிவகுக்கும்.

உள்ளூராட்சித் தேர்தலில் அடிபட்ட பாம்பாகக் கிடக்கும் ஆளும் கூட்டணியும், ஈபிடிபியும் மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பை எப்படியாவது துரத்துவதற்கு முயற்சிக்கும்.

அந்தத் தடைகளையெல்லாம் தாண்டி வெற்றிபெற வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை இன்னும் வலுவடைய வேண்டும்- பலம் பெறவேண்டும்.

அதற்கு முதலில் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் ‘ஈகோ‘ வைக் கைவிட்டு தமிழரின் நலன்களை முன்னிறுத்தி சிந்திக்க வேண்டும்.

Comments