இராணுவ நடவடிக்கைகளின் வாயிலாக இலங்கை அரசு வன்னி நிலத்தை கைப்பற்றிய பொழுதும் அதனால் முழு நிலத்தையும் கொள்ளையடிக்க முடியவில்லை. விடுதலைப் புலிகள் தங்கியிருந்த இடங்கள் தங்களுக்கு சொந்தமானவை என்று சொல்லி வந்த படைகள் இப்பொழுது விடுதலைப் புலிகள் மக்களுக்கு நிலம் வழங்கினார்கள். அப்படி வழங்கிய நிலங்களும் தங்களுக்கு சொந்தம் என்று சொல்கிறது. நிலத்தை கொள்ளையடிக்க எல்லா வகையிலும் நடவடிக்கைகளை அரசு விரித்திருக்கிறது.எண்ணிக்கையறிப்படாத உயிரிழப்புக்கள் ஏற்பட்டு உறவுகளை ஈழ மக்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்து பத்திரிகைகளில் உறவுகளை தேடுகிறோம் என்ற அறிவிப்பு இன்னும் வந்து கொண்டிருக்கிறது. அங்கங்களை இழந்து பலர் அலைகிறார்கள்.
அனைத்து சொத்துக்களையும் இழந்து என்ன செய்வது? ஏது செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்கள். இன்னும் துயரக்கதைகளை இறக்கி வைத்து முடியவில்லை. மீள்குடியேற்றம் என்று வண்டிகளில் மக்கள் தொடர்ந்தும் கொண்டு வரப்படுகிறார்கள். யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகின்றன. மக்கள் குடியேற்றப்படாத பல கிராமங்கள், நகரங்கள் பேயறைந்த மாதிரி கிடக்கின்றன. துயரத்திற்கு துயரம் கொடுப்பதைப்போல ஈழ மக்களை வதைக்கிறார்கள்.
யுத்த வெற்றியை வைத்து சிங்கள அரசும் மக்களும் எந்தளவு மகிழ்ச்சியடைகிறார்களோ அந்தளவு ஈழ நிலத்தை கொள்ளையடிப்பது எப்படி என்றும் அவர்கள் கங்கனம் கட்டி நிற்கிறார்கள். ‘எங்கள் அரசன் வேட்டையாடி வென்ற நிலம்’ என்றுதான் சிங்கள மக்கள் எண்ணுகிறார்கள். எங்கள் அரசனும் எங்கள் படைகளும் போரேடுத்து ஈழ மண்ணை வென்றோம் இனி அது எங்களுக்கே சொந்தம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஈழ மண்ணில் குடியேறி அதை சிங்கள பூமியாக மாற்ற வேண்டும் என்ற கனவுடன் வருகிறார்கள். நமது சந்ததிகள் நிலமின்றி அலையும் காலம் இப்பொழுது முதல் அச்சுறுத்தத் தொடங்குகிறது. இலங்கைத்தீவில் சிங்கள அரசு ஆட்சி கொள்ளத் தொடங்கிய காலம் முதல் ஈழ நிலத்தையும் ஈழ மக்களின் உரிமையையும் இப்படித்தான் கொள்ளையடித்தது வருகிறது.
நிலத்திற்காகவும் உரிமைக்காகவும் அந்த வாழ்வுக்காக ஈழத் தமிழர்கள் அன்று தொடங்கிய போராட்டம் இன்று அதிகம் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஈழ மக்களுக்காக போராடிய ஈழப் போராளிகள் சிதைத்து மௌனிக்கப்பட்ட இன்றைய நிலையில் ஈழ நிலத்தை ஈழ உரிமையை சிதைப்பதில் அரசு கனகச்சிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
நொந்திருக்கிற மக்களிடமிருந்து மெல்ல மெல்ல நிலங்களை பிடுங்க அரசு முனைகிறது. இதற்காக வன்னியில் பல இடங்களில் கிராமங்களுடன் நிலத்தை அள்ளிக் கொள்ள முனைந்தது. இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பல பகுதிகளில் மக்களை குடியேற்ற இராணுவம் தொடர்ந்து பின்னடித்து வந்தது.
சாந்தபுரம் பகுதியில் தொடங்கிய பிரச்சனை இன்று இரத்தினபுரம் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. மிதிவெடிகள் அகற்றப்படவில்லை என்றும் அவை மக்கள் வாழ உகந்த பகுதியல்ல என்றும் சொல்லும் இராணுவம் மக்களை அவர்களின் காணிநிலத்தை சென்று பார்க்கவும் அனுமதியை மறுத்து வந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம் என்ற இடத்தில்தான் முதல் முதல் இந்தப் பிரச்சினை வெடித்தது. அந்தக் கிராமத்தை கையகப்படுத்த நினைத்த இராணுவம் மிதிவெடி அகற்றப்படாததால் மக்களை குடியேற்ற முடியாது என்று சொல்லி மக்களின் மீள்குடியேற்றத்தை தள்ளிக் கொண்டு சென்றது.
ஆனால் அந்தப் பகுதியை இராணுவம் கொள்ளையடிக்க நிற்பதை அறிந்த மக்கள் தொடர்ந்தும் தாங்கள் காணிநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்று போராடி வந்தார்கள். அதன் காரணமாக மக்கள் முகாமிலிருந்து அவர்களின் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களின் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்கள்.
சாந்தபுரம் மக்கள் தொடர்ந்தும் தங்கள் காணிகளுக்கு செல்லுவதற்காய் போராடினார்கள். அரசும் படைகளும் மக்களை காணிக்கு செல்லுவதை தடுத்ததுடன் புலிகளால் உருவாக்கப்பட்ட கிராமம் என்றும் அதற்குப் பதிலாக வேறு பகுதிகளில் காணி தருவதாகவும் மக்களிடம் தெரிவித்தார்கள். ஆனால் மக்களோ நாங்கள் எங்கள் காணிகளுக்குச் செல்ல வேண்டும்.
காலம் காலமாக வாழ்ந்த நிலம் தங்களுக்கு வேண்டும் என்று சொன்னார்கள். தங்கள் நிலத்திற்காக தீக்குளிப்போம் என்றார்கள். நிலத்தை விட்டு எங்கும் பெயர்ந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாகச் சொன்னார்கள். தொடர்ந்தும் ஊடகங்களின் வாயிலாக தங்கள் நிலம் குறித்து குரல் கொடுத்து வந்தார்கள்.
மக்களின் எதிர்ப்பினால் எதுவும் செய்ய முடியாத நிலையில் சாந்தபுரம் கிராமம் மக்களிடம் வழங்கப்பட்டது. ஆனால் சாந்தபுரம் என்ற பெயர் மாவீரர் ஒருவரின் பெயரை வைத்து உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்ட இராணுவம் அந்த பெயரை இல்லாமல் செய்ய சூழ்ச்சிகரமான வேலைகளில் ஈடுபடுகிறது. சாந்தபுரம் கிராமத்திற்கு பெயர்ப்பலகை ஒன்றை அன்பளிப்புச் செய்கிறோம் என்று கூறிவிட்டு சிங்களத்திலும் தமிழிலும் அமைந்த பெயர்ப்பலகையில் ‘இரணைமடு’ என்ற பெயரைப் பொறித்திருந்தது. இப்படி நிலத்தின் அடையாளத்தை அழிக்கவும் திட்டமிட்டு அரச படைகள் செயல்படுகின்றன.
பொன்னகர் என்ற கிராமத்து மக்களின் காணிகளும் வீடுகளும் இப்படித்தான் அபகரிக்கப்பட்டன. பொன்னகர் கிராம மக்களுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் கட்டிக் கொடுத்த வீடுகளை மக்களிடம் இருந்து பறித்த அரசு அவை புலிகளால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் என்றும் மாவீரர் குடியிருப்பு என்றும் சொல்லி மக்களை காணிகளுக்குள் செல்ல விடாமல் தடுத்தன.
இராணுவத்தின் காவல்களையும் அச்சுறுத்தல்கைளயும் உடைத்துக் கொண்டு தங்கள் காணிகளுக்குள் சென்ற பொன்னகர் மக்கள் தங்கள் வீடுகளில் தறப்பாள்களை கட்டிக் கொண்டு குடியிருக்க முற்பட்ட பொழுது அங்கு உள்நுழைந்த இராணுவம் மக்களை பலவந்தமாக வெளியேற்றியது. இன்றுவரை பொன்னகர் மக்களின் கதை தறப்பாள் கூடாரங்களில் சோமாய் கழிகிறது.
விடுதலைப் புலிகள் வசித்த இடங்கள் எங்களுக்குத்தான் சொந்தமானவை என்று படையினர் சொல்லுகிறார்கள். அவர்கள் முகாம் அமைத்திருந்த இடங்கள் தங்கள் இராணுவத்தின் இரத்தம் சிந்திப் பெறப்பட்டவை என்றும் அவை தங்களுக்கு உரியவை என்றும் சொல்கிறார்கள். இப்படி வன்னியின் முக்கிய இடங்கள் பலவற்றை படைத்தரப்பினர் தங்கள் கைகளில் வைத்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் போன்ற முக்கிய நகரங்களில் முக்கியமான நிலப்பகுதிகளை தமது வசப்படுத்தியிருக்கிறார்கள். அங்கு பாரிய முகாங்களை நிரந்தரமாக கட்டி எழுப்பி உள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலின் வளாகத்தில் அரைவாசியைப் இப்படித்தான் படையினர் அபகரித்து வைத்திருக்கின்றனர். கிளிநொச்சியின் முக்கிய இடமான விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அமைந்திருந்த பகுதியை படையினர் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவித்து ‘பரவிப்பாஞ்சான்’ என்ற இடத்தின் முக்கிய பகுதிகளை தமது வசப்படுத்தியிருக்கிறார்கள். அங்கு விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அலுவலகம், விருந்தினர் அலுவலகம், சமாதான செயலகம், பெண்போராளிகளின் அரசியல் துறை முதல் நிலை அலுவலகம் என்பன அமைந்திருந்தன.
மக்களின் வீடுகளில்தான் விடுதலைப் புலிகள் முகாமிட்டிருந்தனர். யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்ற மக்களின் ஆட்களற்ற வீடுகளில்தான் போராளிகள் முகாமிட்டிருந்தனர். தங்கள் அலுவலகங்களை அமைத்தனர். மக்கள் மீண்டும் நிலம் திரும்பி பொழுது அவர்களிடம் திரும்ப கையளித்து வந்தார்கள். ஈழ மக்களுக்காக போராடிய விடுதலைப் புலிகள் தமக்கென்று நிலங்களை வைத்திருக்கவி;லலை. அவர்கள் மக்களின் நிலத்திற்காகவே போராடினார்கள். புலிகள் நிலம் என்ற பெயரால் அந்தப் பகுதியை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதானால் அந்தப் பகுதியில் தொடர்ந்து வசித்த மக்கள் பலர் இன்னும் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.
அந்தப் பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்றும் அங்கு மக்கள் குடியமர அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் இராணுவம் சொல்லுகிறது. மக்களோ தொடர்ந்தும் தங்கள் காணிநிலத்தை தங்களிடம் தரும்படி இராணுவ முகாங்களுக்கும் அரச அலுவலகங்களுக்கும் திரிகிறார்கள். மக்களை இராணுவம் ஏமாற்றுவதைப்போல அலைப்பதைப்போல அரச அதிகாரிகளும் ஏமாற்றுகிறார்கள் அலைக்கிறார்கள். மக்களின் காணிகள் மக்களுக்கு கிடைக்க எடுக்க வேண்டிய சிவில் நடவடிக்;கைகளை தவிரித்து அரசுக்கும் இராணுவத்திற்கும் அதன் அபகரிப்புச் செயற்பாடுகளுக்கும் ஒத்தாசை புரிகிறார்கள்.
மக்களுக்காக நீதியாகச் செயற்படும் அதிகாரிகளை இடம் மாற்றி ஒடுக்குகிறார்கள். கிளிநொச்சி மாவட்ட மாவட்ட செயலர் திருமதி ருபாவதி கேதீஸ்வரன் அரசின் இராணுவக் கொள்ளைக்கு இடமளிப்பவர். சாந்தபுரம் போன்ற கிராமங்களின் நலன்களின் உரிய நடவடிக்கைகளை செய்ய திருமதி சுலோஜினி என்ற உதவி அரச அதிபரை இடமாற்றினார். ரூபவதி போன்றவர்கள் தமது நலன்களுக்காக மக்களின் நலன்களை மக்களின் உரிமையை ஒடுக்க உதவுகிறார்கள்.
இப்பொழுது இரத்தினபுரம் என்ற எனது கிராமத்திலும் நில அபகரிப்புப் பிரச்சினை தொடங்கியிருக்கிறது. எங்கள் கிராமம் ஆறுகள் நிறைந்த அழகான குளிர்ச்சியான கிராமம். காலம் காலமாக வாழ்ந்து வருகிறோம். யுத்தத்தில் அரசால் அழிக்கப்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் எங்கள் கிரமாத்தை விட்டு வெளியேறிச் சென்றால்தான் வேறு கிராமத்தில் வீடு கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் கிராமத்தில் உள் மக்களே வீட்டை விட நிலமே எங்களுக்குத் தேவை என்று தொடர்ந்து எங்கள் கிராமத்தில் தறப்பாள் கூடாரங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் பூர்வீக பூமி. ஈழத் தமிழ் அரசர்களின் ஆட்சியால் சிறந்திருந்த பூமி. ஈழத்து மக்கள் தனித்துவமாக வாழும் பகுதி. சிறப்பான கலை கலாசாரங்கள் ஈழ அடையாளங்கள் உள்ள நிலம். ஈழத் தமிழர்களின் முக்கியம் வாய்ந்த இந்த நிலத்தில் இப்பொழுது தாங்களும் பூர்வீகக் குடிகள் என்று சொல்லிக் கொண்டு சிங்களவர்கள் குடியேறியிருக்கிறார்கள். நாவற்குழி என்ற இடத்தில் குடியேறியிருக்கிறார்கள். இந்த அத்துமீறிய குடியேற்றத்தை சிங்கள அரசே செய்தது. ஆத்தோடு தமிழர் நிலத்தில் சிங்களவர்களுக்கு காணி கொடுக்க வேணும் என்று சிங்கள அமைச்சர்கள் அறிக்கை விடுகிறார்கள்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளுக்கு தினமும் வரும் சி;கள சுற்றுலாப் பிரயாணிகள் சில அடாடித்தனங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். அன்றொருநாள் யாழ் நூலகத்தை தீயிட்டு கொழுத்தியவர்கள் இப்பொழுது வந்து அந்த நூலகத்தில் உள்ள நூல்களை தூhக்கி வீசி எறிந்தார்கள். இப்படி இங்கு வந்து நிலத்தை கொள்ளையடிப்பது முதலான அடிவடிகளில் ஈடுபடலாம் என்ற சுகந்திரத்துடனும் இனவாதத்துடன் வந்த சிங்களவர்களில் சிலரே நாவற்றுகுழிக் கிராமத்தில் குடியேறி யாழ்ப்பாணம் தங்கள் பூர்வீக நிலம் என்று சொல்லுகிறார்கள்.
வன்னிக் காடுகளில் பல முக்கிய பகுதிகளும் வன்னிக் கோயில்கள் குளங்கள் என முக்கிய பகுதிகள் பலவற்றை இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. முறிண்டியில் மக்கள் இன்னும் குடியமர்த்தப்டாத நிலையில் அதனை அண்டிய காட்டுப் பகுதியில் பல ஏக்கர்காணிகளில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி நிலங்களை அபகரிக்க பல உத்திகளை ஆளும் அரசு வகுத்துக் கொண்டிருக்கிறது. குந்தியிருப்பதற்கான நிலத்திற்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் முகம் கொடுக்க முடியாதபடியிலான வியுகங்களையும் நிலக் கொள்ளை விடயத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வடிவமைக்கிறார்கள். அவை நம்பிக்கைகளை முறியடிக்கப் பார்க்கின்றன. எமது குழந்தைகள் நிலமின்றித் தவிக்கப் போகிறார்கள் என்ற ஏக்கம் ஒவ்வொரு ஈழத் தமிழரையும் பற்றி எரிய வைக்கிறது.
இன்று ஈழ மக்கள் எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளில் இந்த நிலப்பிரச்சனை மிக முக்கியமாக எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கள் நிலத்திற்காக போராடுங்கள். வாழ் நிலத்திற்காக தவிக்கிற, பூர்வீக நிலத்தில் வாழ ஆசைப் படுகிற எங்கள் நிலத்திற்காக தயவு செய்து பிரார்த்தியுங்கள்.
- தீபச்செல்வன்
நன்றி – தமிழ்முழக்கம்
Comments