வடபகுதி கடல் வழியாகவே விடுதலைப்புலிகள் தரையிறங்குவார்கள்

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்ககும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட த லக்பிம வாரஏடு தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படையணிகள், தமது ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்ததும், வடபகுதி கடற்கரை ஊடாகவே தரையிறக்கத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

வடபகுதி கடல் ஊடாக தரையிறங்ககும் விடுதலைப்புலிகளின் அணிகளே அடுத்த கட்ட ஈழப்போரை ஆரம்பிக்கவுள்ளதாக புலம்பெயர் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. அதேசயம், தென் சூடானை போன்றதொரு, தீர்வை வடக்கு – கிழக்கில் கொண்டுவரவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முற்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்து வழங்கியவாறு உள்ளது. விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கிளைகள் தமது செயற்பாட்டை வேகப்படுத்தி வருகின்றன.

கனடாவையே விடுதலைப்புலிகள் பிரதான தளமாகப் பயன்படுத்தக்கூடும். சன் சீ கப்பலில் சென்றவர்களில் பலர் இறுதிக்கட்டச் சமரில் தப்பியவர்கள் என கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் பல இளநிலை தளபதிகள் கனடாவுக்கு சென்றுள்ளதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடா 250,000 தமிழ் மக்களை கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடாக தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதானமாக தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாகவே பல படையணிகள் தப்பிச் சென்றுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 இற்கு மேற்பட்டோர் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்ததும், அவர்கள் தமது இராணுவக்கட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நகர்வுகளை அனைத்துலக மட்டத்தில் அவர்கள் மேற்கொண்டு வந்தாலும், இராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புவதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனவே அவர்கள் முதலில் கெரில்லா தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. எனினும் அவர்களின் நடவடிக்கையை தெரிவுகள் தீர்மானிப்பதில்லை. சூழ்நிலை தான் தீர்மானிக்கின்றது.

வடக்கு – கிழக்கில் அதிக படையினரை சிறீலங்கா அரசு குவித்துள்ளதால், தென்னிந்தியாவில் வைத்து தமது அணிகளை விடுதலைப்புலிகள் தயார்படுத்தலாம். தாக்குதல்களுக்கான திட்டங்களும் அங்கிருந்தே வகுக்கப்படவுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் தற்போதும் அதிக ஆதரவுகள் உண்டு.

தமிழகத்தின் காடுகளில் விடுதலைப்புலிகள் தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய புலனாய்வுப்பிரிவும் தகவல்களை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவும், வான்படையும் அங்கு பிரவேசித்துள்ளன. விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படைகளும் தயாராகி வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில்: ஈழம் ஈ நியூஸ்.

Comments