பூத்த கொடி பூக்களின்றி வதங்கிப் போய்க் கிடக்கிறது

பிறப்பிற்கு மட்டுமல்ல மானிடர்களின் இறப்பிற்கும் அர்த்தமுண்டு இருப்போம் என்று நினைப்பவன் கண்களைத் திறப்பதிலிருந்து கடைசி வரை யாரோ என்ற சுடலை ஞானத்தை அளிப்பது வரை பொதுவாக எல்லா இறப்புக்களுமே விதம் விதமான பல போதனைகளை வழங்குகின்றன.

முதுமையையும், இறுதி ஊர்வலத்தையும் கண்டு விழித்த இள இந்து அரசகுமாரன் சித்தார்த்தனே புத்தனானான்.

முழு உலகையும் பிடித்த அலெக்ஸ்ஜாண்டரிற்கு ஆறடி நிலமே தேவை என்ற சுடலை ஞானத்தை உணரத்தியதும் இந்த மரணமே.

மெய்ஞஞான நாட்டமுள்ளவர்களாலேயே மனதார உணர இயலாத நீர்க் குமிழி வாழ்க்கையின் நிலையாமையை, எந்த ஒரு மூடனும் உணரும் வண்ணம், சடுதியாகச் சுட்டு பட்டென உணரத்துபவை மரணச் சடங்குகளே.

மிடுக்கான முடிசார் மன்னரையும் பிடி சாம்பலாக்கும் எவருடைய மரணத்திலும் பல படிப்பினைகள் இருக்கும். அதில் பல உண்மை நிலவரங்களும் துலங்கும்.

இந்த முதுமாதின் மறைவிலும் பல உண்மைகள் உறைந்து போயுள்ளன.

இந்தத் தாயின் “இந்த” நிலை, தமிழ்த்தாயின் இன்றைய நிலையை ஒத்ததாக இருக்கிறது

காரணம் இவள் வயிற்றில் பிறந்தவன் தமிழர்களை பிரதிபலித்தவன்.

தமிழர்களிற்காய்ப் போராடியவன் – உண்மையாக, உறுதியாக அதுவும் ……..இறுதிவரை.

எனவே தமிழினத்தின் உண்மையான நிலை இந்த அன்னையின் நிலையிற் தெரிகிறது.

தாயே ! என்றுமில்லாதவாறு உன் மைந்தனின் தேவையை இந்த உலகமே உணர்ந்திருக்கிறது

பிரபாகரனும் புலிகளுமிருப்பதாலத் தான் சிங்களவர் எதையும் கொடுக்க அஞ்சுகிறார்கள் இல்லாவிட்டால் எதையாவது கொடுப்பார்கள் என்று எண்ணியவர்கள் தங்கள் நம்பிக்கை தவறானது என்பதை உணர்ந்துள்ளனர்.

இந்த ஓலம் இயக்க விரோதிகளின் முகாகங்களிலிருந்து மட்டுமல்ல துரோகிகளினது கூடாரங்களிலிருந்தும் கேட்கிறது

இருந்தும் சிலர், இப்போதும் அரசியற் தீர்வு பற்றி பகற் கனவு காண்பது பற்றி கற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.

13 பிளஸ் அப்பலோ 13 போல் திரும்பியாகிவிட்டது.

நாடியிற் கை வைக்க தாடி தடையாகவுள்ளது போலும்.

இந்தியாவே கொழும்பின் தமிழ் எதிர்ப்புக் கொழுப்பிற்கு முகங் கொடுக்க முடியாது திண்டாடுகிறது

புலிகளின் அழிப்பு ஆசியப் பிராந்திய இராணுவ சமநிலையை மட்டுமல்ல இந்தப் ப+மிக்கிரகத்தின் சமநிலைலையே சீரழித்து விட்டதால் இந்தியாவும் ஏன் அமெரிக்கா கூட அனுசரித்துப் போகின்றனவாம்

சர்வ தேச வான் பரப்பு அரசியற் காலநிலை வெகுவாக குழம்பிவிட்டது.

இராணுவ பொருளாதாரப் பருவ காலங்களும் முறை மாறிப் போகின்றன.

உலக ஒழுங்கே மேலும் மோசமடைந்து விட்டது.

ஒரு இன அழிப்பையே விசாரிக்க இயலாதுள்ள ஐ நாவும் , அமெரிக்காவும் …..ஐக்கிய இராச்சியமும் ……

ஓ! நாடு கேட்டவர்களையும் அவர்களது வீடுகளையும் கடற்கரைக்குள் முடக்கி அழித்த அரக்கனை அனுசரிக்கும் யுகமா?

ராஜீவ் காந்தி கொலை மயக்கத்தில் உறங்கிக் கிடந்த தமிழகமும் இன்று தனது வீட்டையும் சிங்கள இனவாத நெருப்பு பற்றி விட்டதை உணரத் தலைப்பட்டுள்ளது.

கிறிக்கற்றில் மட்டுமல்ல இராஜ தந்திரத்திலும் லங்கா இன்று சூதிலும் வாதிலும் வல்லதாகவே உள்ளது.

அந்தச் சம்பந்தர் காலத்தில் மட்டுமல்ல இந்தச் சம்பந்தர் காலம் வரை பயங்கரவாத அனல் வாதத்திலும் , ஜனநாயக புணல் வாதத்திலும் காவிகள் மேலோங்கியுள்ளனர்.

ஒரு அரசனின் மறைவு ஒரு ஆட்சியின் மறைவாக இருக்க முடியும்.

ஆனால் உன் மைந்தனின் வீழ்ச்சியோ முழுத் தமிழ் இனத்தையே மழுங்கடித்துவிட்டது.

ஈழத் தமிழினம் இன்று கருங்கல்லோடு கட்டப்பட்டு கடலில் தள்ளப்பட்டுள்ளது.

வன்னி நிழலரசின் அழிப்பு கன்னித் தமிழையே கேட்பாரற்ற அநாதை ஆக்கி விட்டது.

“பூத்த கொடி பூக்களின்றி வதங்கிப் போய்க் கிடக்கிறது” – காரணம்

மாங்கிளிக்கும் மரங் கொத்திக்கும் உள்ள சுதந்திரம் இன்று தமிழரிற் பலரிற்கில்லை. ………உன் பிள்ளைகள் அடங்கலாக.

நாடு மட்டுமல்ல இன்று தமிழரிற் பலர் வீடுமற்றேயுள்ளனர் – அப்படி வீடிருந்தாலும் கூரையில்லை எந்தப் பிள்ளையினதும் குரல்களுமங்கில்லை. இனி இரட்டைக் குடியுரிமையுமில்லை என்கிறார்கள்.

நீ! மண்ணிலிருந்தாலும் சரி, விண்ணிலிருந்தாலும் சரி இன்று இந்த அன்னையின் அடியில் நிற்க வேண்டியவன்

கொள்ளி வைக்க வேண்டிய கடைசித் தம்பி நீ!

கரும்பும் கையுமாக அலைந்த பட்டினத்துச் செட்டியே சுண்ணமிடித்துப் பாடியது தான் குடியிருந்த கோயில் உடைந்த போது தானே.

தமிழைக் காக்கப் புறப்பட்ட தனயனே! இன்று யாராலும் உன் தாயைக் கூட காக்க இயலவில்லையே! இது தான் இன்றைய அகில உலக தமிழர்களின் நிலையாகும். இந்த அநாதரவான நிலையை புலம் பெயர் தமிழர் உணர வேண்டும்.

முதுமைக்கும் பிணிக்கும் மருந்தேது?

போரை வெறுத்த புத்தனின் லங்கா தேசம் போரினால் தானே தான் தீர்வைக் கண்டு விட்டதாக எக்காளமிடுகிறது.

அந்த முள்ளி வாய்க்கால் மரணங்களை நீங்களும் நிகழ்த்துங்கள் என்றல்லவா அவை பயிற்சி அளிக்க முயல்கின்றது.

ஓ! மாதாவே!! நான் உன்னை வணங்குகிறேன்.

இப்படி ஒரு மாவீரனைப் பெற்றதிற்காய் எனென்றால் வன்னியுடன் கன்னித் தமிழின் காலமும் முடிந்து விட்டதாகவே அனைவரும் அஞ்சுகின்றனர்.

பிடிபட்டாலுஞ் சரி, அகப்பட்டாலுஞ் சரி, உச்சி மீது வானிடிந்து விழுவதைப் போல் குண்டுகள் வீழந்த போதும் தன் இலட்சியத்தை கொள்கையளவிலாவது கைவிடாத பிரபாகரன் என்றும் தமிழர் இலட்சியங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும், தமிழர் நெஞ்சங்களிலும், எல்லாளனாய், சங்கிலியனாய், பண்டார வன்னியனாய் வாழ்வான். அதுவரை அவனைப் பெற்ற உங்களது பெயரும் வாழும்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி !!!

: பூநகரான் குகதாசன்

Comments