பிரித்தானியாவில் தமிழீழத் தேசியக்கொடிக்கு தடையில்லை!

சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அறிவித்துள்ள தமிழ் மக்கள்,
இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.


குறிப்பாக பிரான்ஸ், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக அறியவருகின்றது.

இன்று பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழீழ தேசியக் கொடிக்கு
எதிராக சிறிலங்கா எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரித்தானியத்
தூதரகம் முன்பாக தமிழீழ தேசியக் கொடியுடன் பெருமளவான மக்கள்
கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழத் தேசியக் கொடி தடை செய்யப்பட்டதாக பிரித்தானியக் காவல்துறைக்கு அறிவித்த சிறிலங்கா தூதுவராலயம், அதனை மக்கள் பிடித்திருப்பதை தடுக்குமாறும் கோரியிருந்துள்ளது.

இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர், தடை செய்யப்பட்ட கொடியைப் பிடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன் எல்லாவற்றையும் மடித்து வைக்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் தமிழீழத் தேசியக் கொடி
பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை என்பதை எடுத்து விளக்கியுள்ளனர். அதன் பின்னர் காவல்நிலையம் சென்று வந்து பதில் தெரிவிப்பதாகக் கூறிச்சென்ற காவல்துறையினர், பின்னர் மீண்டும் அங்கு வந்து தமிழீழ தேசியக் கொடியைப் பிடிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்று கூறியதுடன், மக்கள் தொடர்ந்து அதனைப் பிடித்திருப்பதற்கும் அனுமதித்துள்ளனர்.

தமிழீழத் தேசியக் கொடியின் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்த முயன்ற
சிறிலங்கா, தனது சுதந்திர நாளில் தனது முகத்தல் தானே கரியைப்
பூசிக்கொண்டுள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடியைப்
பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் சில தமிழ்ப் பிரமுகர்களின் முகத்திலும்
இது அறைந்திருக்கும் என்றே கருதலாம்.

Comments