இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடற்படையினர் – சீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 106 பேரை பலவந்தமாகவும் சட்ட விரோதமாகவும் சிறைபிடித்துச் சென்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தி 15 நாட்கள் சிறையிலடைத்திருக்கிறது சிங்கள அரசு.

இந்நிலையில் நேற்றிரவும் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து 26 மீனவர்களைப் பிடித்துச் சென்று இளவாலை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். ஆக மொத்தம் பேரினவாத இராணுவத்திடம் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 132. அத்தோடு சிங்கள கடற்படையால், பெட்ரோல் குண்டுவீசி எரிக்கப்பட்ட மீனவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

இவர்களை இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் கைது செய்து போலீசிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை செய்தி வெளியிட்டுள்ளது.தமிழக மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் மத்தியில் பகையை தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும், இந்தியா மறைமுகமாகவும் செய்து வருகின்றன.

பிரச்சனை இருதரப்பு மீனவர்களிடமில்லை. இரு அரசுகளிடமே உள்ளது. அவர்கள் ஈழத் தமிழ் மீனவர்களா அல்லது சட்டவிரோத கூலிப்படையினரா என்ற கேள்விக்கு போருக்குப் பின்னர் சட்டவிரோத கூலிப்படைகளை தமிழக மீனவர்கள் மீது ஏவுதாக மீனவ மக்கள் அச்சத்தோடு தெரிவிக்கிறார்கள்.

கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை இராணுவ நிழலில் வைத்து அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்று அதையே எமது மீனவர்களுக்கு எதிராகத் திருப்புகிற பச்சோந்தித் தனத்தை கண்டிக்கவோ, தட்டிக் கேட்கவோ மத்திய மாநில அரசுகள் தயாராக இல்லை.

இலங்கைக் கடற்படையால் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்றுவரை கொலைகள் நின்றபாடில்லை. இப்போது கூட்டம் கூட்டமாக எமது மீனவர்களைக் கடத்தவும் தொடங்கி விட்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தங்களின் அரசியல் தோல்விக்கு இதுவும் ஒரு அச்சாரமாக ஆகி விடுமோ என்ற அச்சத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் ஆளும் திமுகவும் வெகுவேகமாக மீனவர் படுகொலை தொடர்பாக நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசோ நிருபமாராவ் போன்ற அதிகாரிகளை அனுப்பி இலங்கையை கண்டிப்பதாக நாடகம் ஆடுகிறது. கருணாநிதியோ கடிதமாக எழுதி நாடகம் நடத்தி வந்த நிலையில், தேர்தல் நெருங்குவதால் திமுகவினர், இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் சம்பிரதாயப் போராட்டத்தை நடத்தி போலீசாரின் சர்வ மரியாதையோடு ஆர்ப்பாட்டத்தை நடத்தி காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எப்போதெல்லாம் கருணாநிதிக்கு எதிராக தமிழ் மக்களின் கோபங்கள் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் அபத்த நாடக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது கருணாநிதிக்கு வாடிக்கைதான். ஈழ மக்கள் மீதான படுகொலைகளின் போது இரண்டரை மணி நேர உண்ணாவிரதம் இருந்து விட்டு போரே நின்று விட்டது என்று எழுந்து சென்ற கருணாநிதியின் நாடகத்தை தமிழ் மக்கள் மறந்து விடவில்லை.

இந்தப்பிரச்சனையில் பிரச்சனைக்கு காரணமான, பிரச்சனையைத்தீர்க்க வேண்டிய காங்கிரசும்,திமுகவும் போராடுவது கேலிக்கூத்தின் உச்சம். இன்னும் ராஜபக்ஷே மட்டும் தான் தமிழக மீனவ்ர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படும் பிரச்சனையில் தனக்கு எதிராகத் தானேபோராடும் கொடுமையைத் தமிழக மக்கள் பார்க்கவில்லை.

நிருபமாவின் இலங்கைப் பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது இப்போது உறுதியாகி விட்டது. இந்தக் கொலைகள் மற்றும் கடத்தலில் இந்திய அரசுக்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகம் மீனவ மக்களிடையே பரவி வருகிறது.

அந்தப் பகுதியில் மீனவ மக்கள் வாழ்வதற்கும் தொழில் செய்யவும் இந்தியா விரும்பவில்லையோ என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். தமிழர்களின் கடல்வளத்தை தமிழர்களிடமிருந்து பிடுங்குகிற முயற்சியை சிங்கள அரசும், இந்திய அரசும் இணைந்து மேற்கொள்வதாகவே இதைக் கருதவேண்டியிருக்கிறது.

இந்தியாவை சுற்றியுள்ள கடற்பரப்புகளில், தமிழர்கள் பிழைப்புநடத்தும் கடற்பரப்பில் மட்டுமே இந்த அடாவடிகள் தொடர்கின்றன. இத்தனைக்கும், அடுத்த வீட்டுக்கு போய்வருவதுபோல், இந்திய அதிகாரிகள் இலங்கையை நட்புநாடு என்றுசொல்லி பயணம்போய்வரும் நிலையில் இந்த அடாவடிகள் தொடர்கின்றன.

ஆக, இனியும் இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலையில், தமிழர்களின் கடல்வளம் திட்டமிட்டு இந்திய, சிங்கள அரசுகளால் தமிழர்களிடமிருந்து பறிக்கப்படும் சதிக்கு எதிராக ஒன்றுதிரளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

அந்த ஒற்றுமையும், போராட்டமுமே, சிங்கள அரசின் மீனவர் படுகொலைகளை மட்டுமல்ல, தமிழரின் கடல்வளம் பறிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும்.

Comments