2002ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் வன்னிப் பெருநிலத்தை நோக்கி ஆயிரக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் படையெடுத்து சென்றனர். இவர்களில் பலர் ஏற்கனவே உருவாகியிருந்த தமிழீழத்தையும் அதன் கட்டமைப்புகளையும் பார்த்து பெருமிதப்பட சென்றனர். சிலர் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலை போரட்டம் எப்படி தொடர்ந்து நடத்தப்படப்போகிறது என்பதை அறிய சென்றனர். சிலர் தமது பணிகளை தொடந்து செய்வதற்கான கலந்துரையாடல்கள்,

இப்படியாக சென்றவர்களில் ஒரு சிலரே இன்றும் தமிழீழ மக்களின் பாதிப்புகள், சோதனைகள், அவலங்களில் பங்கெடுத்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். கூடுதலானோர் ’’நெய் குடம் உடைந்தது, நாய்க்கு வேட்டை’’ யென புதிய அரசியல் வகுப்புகள், புதிய இராஜதந்திரங்கள், புதிய அணுகுமுறைகளென தொடர்ந்து புலம்பெயர் வாழ் மக்களை குழப்பத்தில் வைத்துள்ளார்கள்.
நேற்று
1948 ஆண்டு முதல் ஆரம்பமாகிய தமிழீழ மக்களின் சாத்வீகமான முன்னெடுப்புக்கள் எதுவும் பயன்தராத கட்டத்தில், ஆயுதப் போராட்டம் 1983 ஆண்டின் பின்னர் முழுப் பரிமானத்தையும் பெற்ற பொழுது, இந்த ஆயுத போராட்டத்தை அழிக்க வேண்டுமென சிறீலங்கா அரசுடன் இணைந்து பலர் இயங்கியிருந்தும் சிறீலங்கா அரசினால் அது முடியவில்லை.
காரணம் அவ்வேளையில் தமிழீழ விடுதலை போராட்டத்தின் பின்னணியில் அயல் நாடன இந்தியா இருந்து ஓர் முக்கிய காரணியாகிறது.
ஆனால் துர்அதிஷ்டவசமாக இந்தியாவின் நிர்வாகிகளின் தவறான அணுகுமுறையால், தமிழீழ விடுதலைப் போரட்டம் வேறு பல வடிவங்கள் பெற்று இறுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையில், வடக்கு கிழக்கின் மூன்றில் இரண்டை கொண்ட பகுதிகள் விடுதலை பெற்று, தமிழீழ அரசு ஒன்று சகல கட்டமைப்புகளுடன் உருவாகியது.
இதை பார்த்து சகிக்க முடியாத சில சக்திகள், தமது சுயரூபத்தை காட்டத் தொடங்கினர்கள்.
இதன் பலனாக புலம்பெயர் வாழ் தமிழரிடையே, தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு விசுவாசமாக இருந்தவர்கள் யாவரும் படிப்படியாக திட்டமிட்டு வெளியேற்றப்பட்டும், விடுதலைக்காக இரவு பகலாக வெளிநாடுகளில் உழைத்தோருக்கு இடையில் திட்டமிடப்பட்டு பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன.
இவ்வேளையில் அதிஷ்டவசமாகவோ, துரதிஷ்டவசமாகவோ 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவான பேச்சுவார்த்தை உடன்படிக்கையின் பலனாக, புலம்பெயர் வாழ் தமிழரில் உண்மையான உழைப்பாளிகளையும், விசுவாசிகளையும் கண்டறிய வழிவகுத்து. இதன் பலனாக களையெடுப்பு ஒன்று நடைபெற்றதை முழு உலகமும் அறிந்திருந்தது.
ஆனால் இந்த களையெடுப்பு பல சகாப்தங்களாக ஆயிரக்கணக்கான உயிர் தியாகங்களினால் பலனாக உருவான தமிழீழத்தை நீர்மூலமாக்க காரணியாக அமையும் என்பதை யாரும் எண்ணியிருக்கவில்லை.
அனுபவமிக்க விவசாயிகள், களையெடுத்த பின்னர் அவற்றை வயல்களின் வரம்புகளில் வையாது. மிகத்தூரத்தில் ஏன் அப்புறபடுத்தினார்கள் என்பது இப்பொழுதான் யாவரும் உணருகிறார்கள். எடுக்கப்பட்ட களைகள் யாவும,; வெளிநாட்டு பசளையினால் மிக செழிப்புற்று அறுவடையை மிஞ்சிய களைகளாக உருபெற்று, விடுதலை போராட்டம் திட்டமிட்டபடி நிர்மூலமாக்கப்பட்டது.
இன்று
இன்று தமிழீழ விடுதலை போராட்டம் என்பது ஒரு பொழுதுபோக்கான விடயமாக சிலருக்கு தோன்றுகிறது. சிலர் அடுத்த ஆண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர். சிலர் தமக்கு ஊதியம் கொடுக்கப்படும் ’’அழித்தல்’’ தொழிலை மிகத்திறம்பட தொடர்ந்து நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பு அதிகாரம் செலுத்தியோர் மீண்டும் தமது கையில் அதிகாரம் வந்துவிட்டதாக எண்ணுகிறார்கள்.
பலர் தமிழீழ விடுதலை போராட்டம் மூலவேருடன் பிடுங்கி எறியப்பட வேண்டும் என்பதற்காக தமக்கு ‘‘மூக்கு போனாலும் பறவயில்லை எதிரிக்கு சகுனம் பிழைத்தால’’ போதுமென வாழ்கிறார்கள். ஒரு சிலர் தமது வழமையான அடாவடித்தனங்களை திரை மறைவிலிருந்து திறம்படச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் இன்னெரு பகுதியினர் யாவரும் ஒற்றுமையாக வந்தால் தமது இருப்பு போய்விடும் எனப் பயப்படுகிறார்கள்.
புரியாணியும், திராட்சை ரசமும் வெளிநாட்டவர்களுக்கு கொடுத்து, தம்மை விடுதலை போராட்டதின் முக்கியஸ்தர்கள்களாக காண்பித்து, மற்றைய அமைப்புக்களுக்கு மூடுவிழா செய்ய வேண்டும்மென முன்பு இரவு பகலாக உழைத்தவர்கள், தற்பொழுது தமது குடும்பங்களை வளப்படுத்துவதுடன,; பல தியாகங்களின் மத்தியில் இறந்தவர்களின் பெயர்களை விற்று வாழ்கின்றனர்.
அப்பாவி மக்கள் ஒன்றுமே அறியாத பேய்க்கும் பிசாசுக்கும் இடையில் அகப்பட்ட ஆட்டுக் குட்டிபோல் உள்ளார்கள். சிலர் சில ஆங்கிலச் சொற்களை பொறுக்கிவைத்து கொண்டு நிவீன அரசியல் நடத்துகிறார்கள்.
இன்னொருசிலர் வாங்கும் இரத்தப்பணத்திற்கு தமது மனச்சாட்சிகளை விற்று, இணைய தளங்களில் தமது ஏஜமான்கள் கொடுப்பவற்றை பிரசுரித்து வயிறு வளர்க்கின்றனர்.
இது தான் தமழீழ மக்கள் விசுவாசித்த விடுதலை போராட்டமா?
இது தான் விடுதலை போராட்டத்திற்கு உங்களது பங்களிப்பா? வேட்கம்.
யாவரும் சுயநலவாதிகளா? இப்படியான பாதையில் யாவரும் பயணித்தால் தமிழீனத்தின் எதிர்காலம் என்ன?
நாளை
‘‘அந்த காக்க கூட்டத்தை பாருங்கள் அதை கற்ற கொடுத்தது யாருங்க?’’
தமிழ் மக்கள் ஏன் ஒற்றுமைபட முடியாது? என்பதை நாம் யாவரும் சிந்திக்க வேண்டும். நாம் தமிழா, எமது வேலை தமிழினத்திற்கானது, என்னால் முடிந்த சிறந்த விடயங்களை எமது இனவிடுதலைக்காக அர்பணிப்பேன். நான் மற்றவர்களின் ஆக்க பூர்வமான வேலைகளில் குறையோ, குற்றமோ சொல்ல மாட்டேன். பேசுவோர் பேசட்டும், தூத்துவோர் தூத்தட்டும,; எனது தமிழீழ விடுதலைக்கான கபடமற்ற நோர்மையான பணி, என்றும் தொடருமென யாவரும் தமது மனசாட்சியுடன் செயல்பட்டால் நிட்சயம் ஒற்றுமை உருவாகும்.
நான் தான் ராஜா, நான் தான் மந்திரி, அவர் யார்? இவர் யார்? எனக்கு இருந்த அதிகாரம் என்ன? இவர்களுக்கு இது விளங்குமா? அது விளங்குமா? போன்ற பாணியில் நாம் யாவரும் செயற்பட்டால், இன்னும் சில வருடங்களில் வடக்கு கிழக்கில் மூலை முடக்கு எல்லாம் சில்வாவும், ராஜபக்சாவும், பொன்சேகவும் சீவிப்பார்கள்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் விடுதலையை கழிப்பதற்கு தமது பிறப்பிடங்களுக்கு செல்லும் போது, முன்பு போல் சுதந்திரமாக தமிழில் கதைக்கவோ, அயலவர் தமிழர்களாவோ இருக்கமாட்டார்கள்.
கிராமத்து கடைகளில் கூட சிங்களத்தில் கதைத்து தான் பொருட்களை வாங்க வேண்டியநிலை உருவாகும். ஆகையால் தயவுசெய்து ஒன்றுபடுங்கள்.
உங்களுடைய ஆணவம், திமிரை கையைவிடுங்கள். முன்பு எல்லையில் தான் சிங்களக் குடியேற்றங்கள் இன்று உங்கள் கிரமங்களிலும், உங்கள் நிலங்களிலும்;, உங்கள் வீடுகளிலும்.
சுயநலத்தை பாராது பொது நலத்துடன் உழையுங்கள். வன்னி நிலப்பரப்பில் கூறிய ‘‘சொல் முன் செயல்’’ என்ற வாசகங்களை நினைவில் கொள்ளுங்கள்.
நிட்சயம் நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
இவ் கட்டுரையை வாசித்துவிட்டு என்னை விமர்சனம் செய்வதை நிறுத்தி, இதில் கூறப்பட்ட விடயங்களுக்கு செவிசாயுங்கள். நாம் இவ் உலகில் நிரந்தரப் பிரஜைகள் அல்ல. துரிதமாக செயல்பட்ட ஒரு தொண்டர் தவிர்க்க முடியாத காரணங்களினால் இல்லாது போனால், அவரின் இடத்தை நிரப்பவும், அவரை விட பல மடங்கு திறம்பட துரிதமாக செயல்படக் கூடிய பல தொண்டர் உதயமாவார்கள் என்பதை மனதில் வையுங்கள். ஆகையால் தமிழ் இனம் தமிழ் மொழி தொடர்ந்து அந்தஸ்துடன் வாழ வழிவிடுங்கள், ஒத்துளையுங்கள்.
– ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
Comments