உலகம் எங்களுக்காகப் பேச வேண்டுமானால், முதலில் நாங்கள் ஒன்றிணைய வேண்டும்!

விடுதலைப் புலிகளால் ஒரு குடைக்குக்கழே கொண்டுவரப்பட்ட ஈழத் தமிழர்கள், தற்போது சிங்கள - இந்திய திட்டமிடல்களுடன் சிதறடிக்கப்பட்டு வருகின்றார்கள். யதார்த்தத்திற்கும் மீறிய அடிபணிதல்களால் தமிழ்த் தேசியம் மீண்டும் அடிமைப்படுத்தப்படும் அபாயத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது.

முள்ளிவாய்க்கால் வரை விடுதலைப் புலிகளின் ஆலோசனை பெற்ற அடி எடுத்து வைக்கப் பழக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு, அதன் பின்னரான காலம் திசை தெரியாத தடுமாற்றத்துடனேயே நகர்கின்றது. முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுக்கானும் உடைந்து போனதால், அது பேரினவாதக் காற்றுக்கும், இந்தியப் புயலுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்றது. அதனுள் நின்றுகொண்டே தமிழீழ மக்களைக் கரைசேர்க்கும் தீர்மானங்களையும் எடுக்கின்றது.

இறுதி யுத்தத்தின் பின்னரான காலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழருக்கும் சோதனையான காலமாகவே அமைந்துள்ளது. சிங்கள இனவாதத்தின் பிடியிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு எடுப்பதன் மூலம், உலகத் தமிழர்களது வரலாற்று அவமானங்கள் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையும் இப்பொது கரைந்து வருகின்றது. தனக்கென ஒரு சொந்த நாடும் அற்ற இனமாக, உலகெங்கும் வாழும் எட்டுக் கோடி தமிழர்களது ஒற்றைத் தாயகக் கனவும் முள்ளிவாய்க்காலில் முடிந்து போனதாகவே நம்ப வைக்கப்படுகின்றது.

மிகப் பெரிய மனிதப் பேரழிவிலும், நம்பிக்கைச் சிதறடிப்பிலும் இருந்து தமிழீழ மக்களை மீட்டெடுக்க முனைந்து போராட வேண்டிய புலம்பெயர் தமிழர்கள்மீது சிங்கள தேசம் மேற்கொண்டவரும் உளவியல் யுத்தம் இதுவரை வெற்றிப் பாதையிலேயே செல்கின்றது. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்களது 'தமிழீழ விடுதலை' குறித்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு விட்டது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். கே.பி. அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சிதைவு முயற்சி, தற்போது தமிழர் நடுவமாகப் பரிணமித்து உள்ளது. ஒரு சிறிய குழுவின் திட்டமிட்ட நகர்வு, தமிழர் தாயகம் குறித்த உலகத் தமிழர்களது நம்பிக்கையை சிதைவுக்குள்ளாக்கி வருகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக கே.பி. குழுவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டதனால், தமிழர் தாயகம் குறித்த நம்பிக்கைச் சிதைவு வேகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிணைக்கப்படவேண்டிய புலம்பெயர் தமிழர்கள் பல குழுக்களாகச் சிதறடிக்கப்பட்டு வருகின்றார்கள். புலம்பெயர் தமிழர்களுக்குத் தலைமை வகிக்க வேண்டிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன், தன்னைப் பின்தொழும் ஒரு குழுவிற்கான தலைவராகவே இனங்காட்டி வருகின்றார்.

தேர்தல் காலத் தில்லுமுல்லுகள் தொடக்கம், பிரான்சில் 'தமிழர் நடுவம்' அமைத்தது வரை, புலம்பெயர் நாடுகளில் திரு. உருத்திரகுமாரன் அவாகளது நகர்வுகள் புலம்பெயர் தமிழர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகக் காணப்படவில்லை. விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் உருவான 'மக்கள் அவைகள்' ஆகியவற்றுடன் மோதல் போக்கினைத் தொடர்ந்தும் கடைப்பிடிப்பது, எதிரியைத் தப்பிக்க வைப்பதற்கானதொரு பொறி முறையாகவே நோக்கப்படுகின்றது.

கே.பி. குழுவினரும், திரு. உருத்திரகுமாரன் குழுவினரும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முரண்பாட்டுக் களங்களை உருவாக்குவதில் முனைப்புக் காட்டுவது, தமிழர் தாயகக் கனவை காலவரையின்றிப் பின் தள்ளி வருகின்றது. விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களுடனும், தமிழ்த் தேசியத்திற்கான ஜனநாயகக் கட்டமைப்புக்களுடனும் நேரடியாகப் பேசித் தீர்க்க முடியாத பின் அழுத்தம் ஒன்றிற்குள் திரு. உருத்திரகுமாரன் உட்பட்டுள்ளார் என்பது அவரது நகர்வுகளில் நன்றாகவே புரிகின்றது.

தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் விடுதலைக் கட்டமைப்புக்களைச் சிதைப்பதற்கான பரீட்சார்த்தமாக பிரான்சில் 'தமிழர் நடுவம்' என்ற குழு உருவாக்கத்தின் பின்னணியில் கே.பி. சார்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே இயங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திரு. கே.பி. அவர்களது தலைமைச் செயலகம் சார்பாக சுபன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும் 'தமிழர் நடுவம்' முதன்மைப்படுத்தப்பட்டது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, ஒரே அணியின் தமிழ்த் தேசியச் சிதைவின் வௌவேறு வடிவங்களே இந்தக் குழுக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு மீண்டும் புரிய வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்தக் குழுக்கள் குறித்த அச்சம் தமிழ் மக்களை போராட்டக் களத்திலிருந்து ஒதுங்க வைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த முரண்பாட்டுக் கள நிலமை நீடித்துச் சென்றால், அது மோதல் கள நிலையை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்குப் போட்டியாக, பாரிஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட கேர்ணல் கிட்டு அவர்களது நினைவு நிகழ்வும் மாவீரர் நாளுக்கான பரீட்சார்த்த களமாகவே நிகழ்த்தப்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் விருப்பத்திற்கு இசைவாக, எதிர்வரும் காலங்களில் மேலும் பல போட்டி நிகழ்வுகள் பரீட்சார்த்தமாக நிகழ்த்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழகத்திலும் தமிழீழ ஆதரவுக் களத்தைப் பிளப்பதிலும் இந்தக் குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற கருப் பொருளில் கடந்த சில நாட்களின் முன்னர் நடாத்தப்பட்ட மாநாட்டில், தமிழ்த் தேசியத்திற்காக நீண்ட பல காலமாகப் போராடிவரும் ஐயா பழ. நெடுமாறன், வைகோ போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டது அல்லது கலந்து கொள்ளாதது தமிழீழ விடுதலைத் தளத்தின் சிதைவு முயற்சியாகவே நோக்கப்படுகின்றது.

இந்த நிலையைப் பயன்படுத்தி, சிங்கள - இந்திய ஆட்சியாளாகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தங்களது வலைக்குள் சிக்க வைத்துள்ளனர். ஏற்கனவே, சுக்கானற்றுத் தத்தளிக்கும் படகில் தவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழர்களையும், தமிழகத்தில் தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தையும் நிராகரிக்கபடியே சிங்கள - இந்திய சதுரங்க ஆட்டத்தின் காய்களாக மாறியுள்ளனர். இந்திய அனுசரணையுடன் சிங்களம் போடுவதைப் பெற்றுக் கொள்வதால் தாம் சேதாரமின்றித் தப்பிக் கொள்ளலாம் என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணக்குப் போடுகின்றது.

கிடைப்பதைப் பெற்றுக் கொள்வதற்காக, நடந்ததை மறந்துவிடுவதாக சிங்கள தேசத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியிருப்பது உண்மையானால், அது தமிழீழ மக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய துரோகமாகக் கணிக்கப்படும். 'சிங்கள அரசு நடாத்திய போர்க் குற்றம் பற்றி இனி வரும் காலத்தில் மூச்சே விடுவதில்லை' என்ற இணக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இது, புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை மலினப்படுத்தும் அபாயத்தையும் கொண்டுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டினை நிரூபிப்பதன் மூலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை அடுத்த கட்டத்தினுள் நகர்த்த முற்படும் புலம்பெயர் தமிழர்களது நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் நகர்வினை மேற்கொள்ள வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழர்களது பலத்தை நிராகரித்தபடி, சிங்கள - இந்திய சதிக்குள் தம்மைப் புதைத்துக் கொள்ள முற்படுவது வரலாற்றுத் துரோகமாகவே பார்க்கப்படுகின்றது.

புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்த சக்தியாக இல்லாமல் பிளக்கப்பட்டு வருவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. இந்த நிலையிலாவது, புலம்பெயர் தமிழர்களைக் குழுக்களாக்கி உடைக்கும் சதி முயற்சியினை கே.பி. குழுவினர் நிறுத்திவிட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இயங்கு சக்தியாக மாறவேண்டும். இந்த ஒன்றிணைவு, தமிழகத்திலும், உலக நாடுகளிலும் உள்ள தமிழ்த் தேசிய சக்திகள் மீண்டும் அணி திரளும் நிலையை உருவாக்கும். இந்தப் பலத்தினூடாக தமிழீழ அரசியல் தலைமைகளின் சறுக்கல்களைத் தடுத்து நிறுத்துவதுடன், தமிழீழ விடுதலையையும் விரைவு படுத்த வேண்டும்.

Comments