ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ – மீனவர்களைக் கொல்லும் சிறீலங்கா, இந்திய அரசுகளின் கூட்டுச் சதி ?

flag--india-sri-lanka-300கொழும்பிற்கு அண்மையிலுள்ள இரகசிய முகாமிலிருந்து வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை என்னுள் உருவாக்கியது. தொலைபேசியில் அழைத்தவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன்.

‘அண்ணா, உங்கள் தொடர்பு மட்டும்தான் கிடைத்தது. இந்தத் தகவலை எப்படியாவது வெளிப்படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால், எங்களது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்ற அவரது குரலில் பதற்றமும், படபடப்பும் அதிகம் காணப்பட்டது.

அவர் தெரிவித்த தகவல் இதுதான்:

சிறிலங்கா கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல், படுபொலைகள் காரணமாகத் தமிழகம் கொதி நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் அவர்களை கொழும்பிற்கு அனுப்பி நிலமையைப் புரிய வைத்துள்ளது.

தமிழகத்திற்கான சட்ட சபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நடைபெற்று வரும் சம்பவங்கள் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கும் என்பதே மத்திய அரசின் அவசரமான கண்டனங்களுக்கும், நிருபாமா ராவ்வின் கொழும்பு விஜயத்திற்கும் காரணமாக அமைந்தது. சிறிலங்கா அரசும் தமிழகத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதையே விரும்புகின்றது. இதனால், சிறிலங்கா அரசு மிகப் பெரிய சதி நடவடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.

‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ என்ற குறியீட்டுப் பெயருடன் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடுப்புக்களில் சிறிலங்காவின் கடற்படை வழங்கும் படகில் அவர்கள் தமிழக மீனவர்கள் நடமாடும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படும். அந்த வேளையில் அங்கு பிரசன்னமாகும் சிறிலங்கா கடற்படை அவர்கள்மீது தாக்குதல் தொடுக்கும்.

அதில், அவர்களுக்கு உயிர் ஆபத்து நிகழாது என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்படும் இவர்கள் மீண்டும் சிறீலங்காவுக்கு அழைத்து வரப்பட்டு, இதுவரை இவர்களே தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என்ற விதத்தில் விசாரணை நடாத்தப்பட்டு, இந்தியாவுக்கும் தகவல்கள் வழங்கப்படும். இதுவே, ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ நடவடிக்கையின் நோக்கமாகும்’ என்று அவர் தெரிவித்ததுடன் அவரது இணைப்பும் துண்டிpக்கப்பட்டது.

அவராக இணைப்பைத் துண்டித்துக் கொண்டாரா? அல்லது, இந்தத் தகவலை வழங்கிய போது படைத் தரப்பிடம் சிக்கிக் கொண்டாரா? என்பது தெரியவில்லை.

தமிழக மீனவர்கள்மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடாத்தவே இல்லை என்று நிராகரித்த சிங்கள அரசு, மூன்றாவது சக்தி ஒன்று இந்தத் தாக்குதல்களை நடாத்தி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது, இந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை ஒருவேளை உறுதி செய்வதாகவும் இருக்கலாம். 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு, மேற்குலகின் இறுதி நேர மீட்பு முயற்சியையும் தடுத்து நிறுத்தியது.

அதே வேளை, தமிழகத்து மக்கள் பொங்கி எழுந்து கிளர்ச்சியில் இறங்காதவாறு தமிழக முதல்வரும் தன் பங்கிற்கு சிங்கள அரசுக்கு உதவி புரிந்துள்ளார். அண்மைக் காலமாக சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில், தமிழக மக்களின் அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வருமானால், அதில் அங்கம் வகிக்கும் தமிழீழ அபிமானிகளால் தாம் நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை சிறிலங்கா அரசு உணராமல் இல்லை. எனவே, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்குக் வருவதையே சிறிலங்கா அரசு விரும்பும் என்பதால், இந்தத் தகவலைப் புறக்கணிக்க முடியாது.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தின் தமிழின உணர்வாளாகளின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம். விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைக்கலாம் என்பதே இந்த ‘ஒப்பறேஷன் கடல் சிங்கம்’ நடவடிக்கைக்கான அவசியமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்தத் தகவலை, உலக நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அவசரமாகத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் பரிமாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

eelamenews.com

Comments