சூடான் போன்ற மக்கள் கருத்துக்கணிப்பு சிறிலங்காவிலும் இடம்பெறவேண்டும் - பிரித்தானிய உதவி நிறுவனம்

போரின் இறுதி நாட்களில் வெறும் 7000 பொதுமக்கள்தான் கொல்லப்பட்டிருந்தார்கள் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றபோதும் உண்மையில் 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் என பிரித்தானியாவினைத் தளமாகக் கொண்டு செயற்படும் 'அக்ற் நவ்' [ACT NOW] என்ற அரசுசாரா உதவி நிறுவனம் கூறுகிறது.

நான்காவது கட்ட ஈழப்போர் இடம்பெற்றபோது வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் செயற்பட்டுவந்த பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் அரசுசாரா உதவி நிறுவனப் பணியாளர்களே இந்த நிறுவனத்தினைத் தற்போது கட்டுப்படுத்துகிறார்கள்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Island ஆங்கில ஏட்டின் செய்தியாளர் Shamindra Ferdinando எழுதியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த பெப்பிரவரி 02ம் நாள் லண்டனிலுள்ள ஒக்ஸ்போட் யூனியனில் ஐ.நாவினது செயலளார் நாயகம் பன் கீ மூன் ஆற்றிய உரையினைத் தொடர்ந்து, போரின் பின்னான சிறிலங்காவில் ஐ.நா நேரடித் தலையீட்டினை மேற்கொள்ளவேண்டும் என குறிப்பிட்ட இந்த அரசுசாரா உதவி நிறுவனம் கோரியிருந்தது.

ஒக்ஸ்போட் யூனியனில் இந்த நிகழ்வின் போது 'அக்ற் நவ்'வினது சார்பாகக் கருத்துரைத்த ரிம் மாட்டின் [Tim Martin], சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரில் [சனவரி தொடக்கம் மே 19வரை] 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தியதோடு சிறிலங்காவில் சூடானில் இடம்பெற்றதைத் போன்ற மக்கள் கருத்துக்கணிப்பு இடம்பெறுவதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் வழிசெய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

ரிம் மாட்டினது இந்தக் கேள்வியினைச் செவிமடுத்த செயலாளர் நாயகம் பன் கீ மூன் இதுவிடயம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது மற்றும் அதனது செயற்பாடுகள் தொடர்பாகக் கூறினார்.

குறிப்பிட்ட இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கொழும்பிலுள்ள ஆங்கில நாளிதழொன்று சிறிலங்காவினது அதிகாரிகளிடம் கருத்துக் கேட்டிருந்தது. இதுபோல பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறுப்படுவது இட்டுக்கட்டப்பட்ட கதை என்றும் ஐ.நா கூறுவதைப்போல 7,000 பொதுமக்கள் கூடப் போரில் கொல்லப்படவில்லை என்றும் அவர் கூறுயிருக்கிறார்.

நான்காவது கட்ட ஈழப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ரிம் மாட்டின் வன்னியில் தொண்டு நிறுவனப் பணியாளராகச் செயற்பட்டு வந்திருக்கிறார் என்றும் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அவர் வன்னியினை விட்டு வெளியியேறியிருந்தார் என்றும் சிறிலங்காவினது அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சிறிலங்காவில் உக்கிரமடைந்திருந்த போரில் உடனடித் தலையீட்டினை மேற்கொண்டு அதனை நிறுத்துமாறு கோரி ரிம் மாட்டின் 2009ம் ஆண்டு லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்தாகவும் சிறிலங்காவினது அதிகாரிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

2006 தொடக்கம் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்புக்கான அமெரிக்கத் துணைத் தூதுவராகச் செயற்பட்ட ஜேம்ஸ் மூர், போரின் போது 7,000 பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர் என்பதற்கான ஆதாரம் என்ன என்றும் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 7,000 போரில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எத்தனை பேர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் 'The Island' பத்திரிகை கூறுகிறது.

சிறிலங்காவிலிருந்து ஏற்றுமதியாகும் தைத்த ஆடைகள் உள்ளிட்ட சிறிலங்காவினது உற்பத்திப் பொருட்களை பிரித்தானியச் சந்தைகளில் விற்பனை செய்யவேண்டாம் என அக்ற் நவ் என்ற இந்த நிறுவனம் போராட்டங்களை நடாத்தியிருந்தது. இதுபோல தமிழர்கள் ஈவிரக்கமின்றிக் கொலைசெய்த சிறிலங்காவிற்குச் செல்லவேண்டாம் என பிரித்தானிய உல்லாசப்பயணிகளை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளிலும் இந்த அமைப்பு ஈடுபட்டிருந்தது.

சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் என்ற வரிச்சலுகையினை போர் முடிவுக்குவந்த கையோடு ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியபோது 'அக்ற் நவ்' என்ற இந்த நிறுவனம் அதனை வரவேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments