கொக்கட்டிச்சோலை விசாரணைக்குழு முதல் இன்றைய நல்லிணக்க ஆணைக்குழு வரை…

கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணி புரிந்த 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடந்து விட்டது. பிரேமதாசாவினால் இது குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கண் துடைப்புக் கமிஷன் இதுவரை எதுவித தீர்ப்பினையும் வழங்காத நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவென்கிற புதிய கமிஷன் ஊர்கள் தோறும் சென்று மக்களின் கருத்துகளை பதிவு செய்கிறது.

இக் குழுவின் இறுதியறிக்கை வெளியிடப்பட்டு தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டுமென அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேவேளை ஜனநாயகக் கட்டமைப்பின் முதுகெலும்பென்று வர்ணிக்கப்படும் ஊடகங்கள் மீதான வன்முறைகளும் குறைந்தபாடில்லை. லங்கா ஈ நியூஸ் அலுவலகத்தின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ளது. இலங்கை அரசின் செயற்பாடுகளை கடுமையான விமர்சித்து வந்த இந்த இணையத்தளத்தின் அரசியல் ஆய்வாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்கள் கடந்த வருடம் காணாமல் போகடிக்கப்பட்டிருந்தார்.

அதன் ஆசிரியர் சந்தருவன் சேனதீர கொலை அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னி இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் இவர்கள் வசம் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. எவ்வாறாயினும் போர்க் குற்றங்களை மறைப்பதற்கான முயற்சியில் அதில் சம்பந்தப்பட்டவர்களும் அதேவேளை ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் தலைமறைவாவதும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இந்நிலையில் போர்க் களத்தில் படையினரை நேரடியாகத் தலைமையேற்று வழி நடத்திய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா போன்றோர் தாம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதில்லையென சத்தியம் செய்கின்றார்கள். மடியில் கனமற்றோர், “நாட்டின் இறைமையை பாதுகாத்தல்’, “இராணுவத்தை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுதல்’ போன்ற விதண்டாவாதங்களை முன் வைக்காமல் பான் கீ மூன் அமைத்திருக்கும் ஆலோசனைக் குழுவினரை அனுமதிக்கலாம். குரல் இழந்த மக்களுக்கு தமது பிரச்சினைகளை சுதந்திரமாக முன் வைப்பதற்கு ஒரு களம் வேண்டும். ஆனாலும் வங்கிப் பெட்டகங்களில் தாலிக்குப் பாதுகாப்பு தேடுங்கள் என்கிற இயலாமையின் வெளிப்பாட்டு அறிவுரைகளே யாழ். குடாவில் எதிரொலிக்கின்றன.

போர் உச்சம் அடைந்த காலத்தில் பாதுகாப்புத் தேடி மனித உரிமை மையத்தினூடாக சிறை ச்சாலைகளில் மக்கள் அடைக்கலம் தேடிய கொடுமையான நிகழ்வுகள் தான் தற்போது நினைவிற்கு வருகிறது. இருப்பினும் கொடுங்கோல் ஆட்சிகளுக்கு எதிராக மக்களின் ஒன்று திரண்ட தன்னியல்பான எழுச்சிகள் உலகெங்கிலும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணலாம். 30 வருட காலமாக ஆட்சி புரியும் 82 வயதான எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக்கி ற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இந்த மக்கள் போராட்டத்தினை, பயங்கரவாதம், தீவிரவாதம் என்கிற குறுகிய வட்டத்துள் இணைப்பதற்கு அதன் தலைமை எதுவென்பதை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

முபாரக்கின் ஆட்சியில் தடை செய்யப்பட்டு ஒடுக்கப்பட்ட “முஸ்லிம் சகோதரத்துவம்’ என்ற அமைப்பு இப்போராட்டத்தினை பின்னின்று இயக்கும் சக்தியென அடையாளப்படுத்த தற்போதைய ஆட்சியாளர்கள் முயல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஈரானில் 1979 இல் “ஷா’ [SHAH] வின் ஆட்சி, மக்கள் எழுச்சியினால் அகற்றப்பட்டு மேற்குலகிற்கு எதிரான ஆட்சியொன்று நிலைநாட்டப்பட்டது போன்று எகிப்திலும் ஏற்பட்டு விடக் கூடாதென்கிற அச்சம் நிலவுகிறது. அதாவது “ஷா’வை ஈரானில் இழந்தது போல, முபாரக்கை எகிப்தில் இழந்தால் ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்பான “முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சிபீடமேறி விடுமென மேற்குலகம் பதட்டமடைவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு ஏ. எவ். பி. செய்திச் சேவைக்கு அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமை நிர்வாகி அட்மிரல் மைக் முலன் அவர்கள் வழங்கிய நேர்காணலில் எகிப்திய படைத் தரப்பினர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சுயஸ் கால்வாயின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தமை கவனிக்கத்தக்கது. உலக எண்ணெய் உற்பத்தியில் ஒரு சதவீத பங்கினை மட்டுமே எகிப்து வகித்தாலும் சுயஸ் கால்வாய் ஊடாக தினமும் இரண்டு மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் கொண்டு செல்லப்படுகிற விவகாரமே முக்கியத்துவம் வாய்ந்தது.

எகிப்து, டுனீசியா, யெமன் போன்ற நாடுகளில் வெடித்துள்ள ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி அப்பிராந்தியத்தில் பதட்டமான ஸ்திரமற்ற சூழலை உருவாக்கி விடுமெனக் கணிப்பிடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மேற்குலகம் இப்போராட்டங்கள் ஏனைய அரபு நாடுகளுக்கும் பரவி விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட முனைகிறது. அங்கு ஒழுங்கான நேர்த்தியான வகையில் ஆட்சி மாற்றம் (Orderly Transition) ஒன்று உடனடியாக நடைபெற வேண்டுமென அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், இராஜாங்க திணைக்களச் செயலாளர் ஹிலாரி கிளின்டனும் எகிப்திய அதிபரை வலியுறுத்துகின்றார்கள்.

சோவியத்தின் வீழ்ச்சியோடு 1989 களில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச ஆட்சிகள் உதிர்ந்தது போன்று மன்னர் ஆறாவது முகமட்டின் மொரோக்கோ அதிபர் பவுற்விலிகாவின் (Boutefilika), அல்ஜீரியா கேணல் கடாபியின் லிபியா, மன்னர் அப்துல்லாவின் ஜோர்டான், அதிபர் அலி அப்துல்லா சலேயின் யெமன் போன்ற நாடுகளின் ஆட்சிகள் வரிசையாக மக்கள் எழுச்சியினால் உதிர்ந்து போய் விடுமோவென மேற்குலகம் அச்சமடைகிறது. டிசெம்பரில் தீக்குளித்து, ஜனவரி 4 ஆம் திகதி மரணித்த இளைஞன் முகமட் பௌசி டுனீசியாவில் பெரும் பதட்டத்தை உருவாக்கி அதிபர் பெண் அலியின் வெளியேற்றத்திற்கு வழி வகுத்தான்.

இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற பல நிகழ்வுகள் எகிப்தில் நடைபெற்று ஜனவரி 25 இல் டுனீசிய எகிப்திய தேசியக் கொடிகளைத் தாங்கிய அரச எதிர்ப்பாளர்கள் பாரிய எழுச்சிப் போராட்டமொன்றினை ஆரம்பித்தார்கள். 20 சதவீதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எகிப்தின் குடிசனத் தொகை ஏறத்தாழ எட்டரைக் கோடி. உள்நாட்டுக் கடன், மொத்த தேசிய உற்பத்தியில் 80.5 விழுக்காடாகவும், வேலையற்றோர் 9.7 சதவீதமாகவும், பண வீக்கம் 12.8 சதவீதமாகவும் உள்ள நாட்டில் மக்கள் கிளர்ச்சி உருவாகும் சாத்தியப்பாடு அதிகமுண்டு.

எகிப்தின் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி கடந்த 30 வருட காலமாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் மக்களாட்சி புரிந்து பெரும் சாதனை படைத்துள்ளது.
காவல் துறையின் அட்டூழியங்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் வறுமையும் ஒடுக்கு முறையும், மோசடி நிறைந்த தேர்தல்களும் பொது நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழல்களும் வேலையில்லாத் திண்டாட்டமும் மக்கள் மீது சுமத்திய அழுத்தங்களின் விளைவே இத் தன்னியல்பான எழுச்சியின் அடிப்படைக் காரணிகளாகும்.

யார் இந்த பிரச்சினையின் நாயகன் முகம்மட் ஹொஸ்னி சயீட் முபாரக்?

1981 இல் கெய்ரோவில் நடைபெற்ற இராணுவ அணி வகுப்பொன்றில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அன்வர் சதாத் கொல்லப்பட்டு எட்டு நாட்களில் அதாவது 1981 அக்டோபர் 14 ஆம் திகதி அன்று, எகிப்தின் நான்காவது அதிபராகப் பதவியேற்றவர்தான் இந்த முன்னாள் விமானப் படைத் தளபதி ஹொஸ்னி முபாரக். அன்றிலிருந்து இற்றைவரை அவசரகால சட்டவிதிகளின் கீழ் ஆட்சி புரியும் இவர் ஆறு தடவை தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

1995 ஆண்டு ஆண்டு எத்தியோப்பிய தலைநகரான அடிஸ் அபாபாவில் இவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை குறிப்பிட்டுச் சொல்லலாம். தற்போது மேற்குலகோடு முபாரக் கொண்டிக்கும் நெருக்கமான இராஜதந்திர உறவும், இஸ்ரேல் உடனான நெகிழ்வுப் போக்கும், இராணுவத்தினரின் ஊதியச் செலவினை பூர்த்தி செய்ய அமெரிக்க வழங்கும் 1.3 பில்லியன் டொலர் உதவித் தொகையும், இவரின் ஆட்சியதிகாரத்தை இதுவரை தக்க வைக்க உதவியது. இருப்பினும் உலக பொருளாதார நெருக்கடிகளால் மிகவும் பாதிப்புறும் ஒரு நாடாக எகிப்தும் மாறி விட்டதென்பதை மறுக்க முடியாது.

அதேவேளை 40 வயது நிரம்பிய முதலீட்டு வங்கியாளராகவிருக்கும் அதிபரின் மகன் கமால் முபாரக்கிற்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியில் வழங்கப்படும் அதிக முக்கியத்துவம், அமைச்சராகவிருக்கும் ஹபிப் அல் அடியின் கீழ் இயங்கும் கறுப்பு உடை அணிந்த கலகமடக்கும் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படை போன்றவற்றின் மக்கள் விரோதப் போக்கு என்பன மக்கள் மத்தியில் அரசின் மீதான எதிர்ப்புணர்வினை அதிகரிக்கச் செய்கின்றது. இந்த எழுச்சியைத் தணிப்பதற்குப் பல நகர்வுகளை அதிபர் முபாரக் முன்னெடுப்பதனைக் காணலாம். பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சராக புதியவர்களை நியமித்தார். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அதிபர் பதவி விலக வேண்டுமென்பதில் குறியாக இருந்தார்கள்.

அதற்கும் மசியாத மக்களின் மீது தனது கட்சி ஆதரவாளர்களை குதிரையிலும் ஒட்டகங்களிலும் கத்திகள், வாளோடு இறக்கி விட்டுள்ளார் முபாரக். கிளர்ச்சியின் மையப் புள்ளியாகக் காணப்படும் டாஹிரிர் (Tahrir) சுதந்திர சதுக்கத்தில் கடந்த புதன்கிழமை அன்று முபாரக் ஆதரவாளர்களுக்கும் அரச எதிர்ப்பாளர்களுக்குமிடையே நடந்த மோதலில் மூவர் கொல்லப்பட்டு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயமுற்றனர். கலவரமின்றி ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தில் தனது ஆதரவாளர்களை அனுப்பி மோதல்களை உருவாக்கியுள்ளார் எகிப்திய அதிபரென மேற்குலக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு அவர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பத்து நாட்களாக வேடிக்கை பார்த்த பாதுகாப்புப் படையினர் மோதல் வெடித்தவுடன் களமிறங்கி, இரு தரப்பினரையும் பிரித்து வைக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இனிவரும் நாட்களில் படைத் தரப்பு, எந்தப் பக்கத்தை நோக்கி சாய்ந்து விடப் போகிறது என்பதில்தான் முபாரக்கின் அதிகார ஆயுட் காலம் தங்கியுள்ளது. அமெரிக்காவுடன் நெருக்கமானவர் என்று கூறப்படும் 340,000 இராணுவத்திற்கு தலைமை தாங்கும் ஜெனரல் முகம்மட் ரன்ராவி (Gen. Mohammad Tantawi) என்பவரின் நகர்வில் அடுத்த கட்ட மாற்றங்கள் தீர்மானிக்கப்படலாம். இதுபோன்ற தன்னியல்பான மக்கள் கிளர்ச்சிகள் ஏதோவொரு வகையில் நிறுத்தப்படா விட்டால், இதன் தாக்கம் உலகமெங்கிலும் பரவும் சாத்தியப்பாடுகள் அதிகரிக்குமென்பதை உணரும் பெரும் வல்லரசுகள், குறிப்பாக எகிப்திய அரசின் மீது அதிக அழுத்தங்களைத் திணிக்க முற்படுமென எதிர்பார்க்கலாம்.

அதேவேளை தேசிய இனங்களை ஒடுக்கும் அரசுகளும், ஜனநாயகப் போர்வையில் அவசர கால சட்டத்தைக் கொண்டு ஆட்சியை நீடிக்கும் அரசாங்கங்களும், மக்கள் மன்றங்களை ஆட்டுவிக்கும் மன்னராட்சிகளும், சோஷலிஸ முக மூடியணிந்து சிறுபான்மைத் தேசிய இனங்களை சிறிய இனக் குழுக்களாக மாற்றும் மக்கள் குடியரசுகளும், அரபுலகில் எழுந்துள்ள கிளர்ச்சியினால் அதிர்ச்சியடைந்துள்ள விவகாரத்தை, இது குறித்த செய்திகளை, தமது அரச சார்பு ஊடகங்களில் வேண்டுமென்றே தவிர்த்து வருவதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

- இதயச்சந்திரன்

Comments