01. இவை திருக்கோணமலை ஒளிப்படங்கள்:
02. இவை தம்பலகாமம் ஒளிப்படங்கள்:
மட்டக்களப்பின் மழை வெள்ளக் காட்சிகளை இந்த இணைப்பில் காணலாம்: http://www.facebook.com/album.php?aid=262780&id=105303528424#!/album.php?aid=270778&id=105303528424
தென்னை மரங்களையே வேரோடு பிடுங்கிய வெள்ளம்
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள கிவுல்கடவெல குளம் உடைப்பெடுத்ததால் துட்டவெவ கிராமத்தில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் அடைக்கலம் தேடியுள்ள இவர்கள் அதிகாரிகளிடம் தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டியுள்ளனர்.
கிவுல்கடவெல குளம் உடைப்பெடுத்ததால் அதிலிருந்து 55,000 கன ஏக்கர் நீர் அதிவேகமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாய்ந்தோடியது.
இதன் காரணமாக குளத்துக்கு அருகேயிருந்த வீடுகள் அழிந்து போயுள்ளன. தென்னை மரங்கள் கூட வேரோடு பிடுங்கியெறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனுராதபுர, மட்டக்களப்பு மாவட்ங்களில் உதவி மற்றும் மீட்புப்பணிகளில் சிறிலங்கா விமானப்படையின் எட்டு உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா கடற்படை 40 படகுகளுடன் 40 மீட்புக்குழுக்களை அனுப்பியுள்ளது.
வெள்ளத்தினால் பத்து இலட்சம் பேர் பாதிப்பு
சிறிலங்காவில் 11 மாவட்டங்களில் சுமார் பத்து இலட்சம் பேர் வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களே வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 139,391 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 985 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்குகிறது அனுராதபுர நகரம்
அனுராதபுர நகரம் வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதால் அங்கு சுற்றுலாப் பயணிகளையோ யாத்திரிகர்களையோ வர வேண்டாம் என்று மாவட்ட அரசஅதிபர் ஹேரத் கேட்டுள்ளார்.
நேற்றிரவு அனுராதபுர நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதன்காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நச்சதுவ குளம் எந்த நேரத்திலும உடைப்பெடுக்கலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தற்போது அனுராதபுர நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ள நிலையில் இந்தக் குளம் உடைப்பெடுத்தால் நகரம் முழுயாக நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது.
அனுராதபுர புனித பிரதேசம், மாத்தளை வீதி என்பனவற்றில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடுவதாகவும் தெரியவருகிறது.
மூதூர் நகரையும் வெள்ளம் சூழ்ந்தது
அனுராதபுரம், திருகோணமலை, புத்தளம் மாவட்டங்களில் உள்ள பல குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததால் நேற்றிரவும் இன்று காலையும் அவற்றின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதனால் ஆறுகள், வாய்க்கால்களில் நீர் பெருக்கெடுத்து குடியிருப்புகளுக்கள் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
திருகோணமலையிலுள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கிப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னைய செய்தித் துளிகள்:
சிறிலங்காவில் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் மழையினாலும், பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளத்தினாலும் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றுமாலை நிலவரப்படி 17 மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 342,186 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மழை கொட்டி வருவதால் இந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ள 430 நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒளிப்படங்கள் - பிபிசி
திருகோணமலையிலேயே அதிகளவானோர் பாதிப்பு
வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 24,405 குடும்பங்களைச் சேர்ந்த 94,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 11,714 குடும்பங்களைச் சேர்ந்த 42,175 பேர் இடம்பெயர்ந்து 123 முகாம்களில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,151 குடும்பங்களைச் சேர்ந்த 47,725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5074 குடும்பங்களைச் சேர்ந்த 17,503 பேர் இடம்பெயர்ந்து 56 முகாம்களில் தங்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 11,347 குடும்பங்களைச் சேர்ந்த 43,741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2107 குடும்பங்களைச் சேர்ந்த 7,940 பேர் 32 முகாம்களில் தங்கியுள்ளனர்.
கிளிநொச்சியில் உடைப்பெடுக்கும் நிலையில் குளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 8102 குடும்பங்களைச் சேரந்த 26,370 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஒட்டுசுட்டானில் 203 பேரும், கரைத்துறைப்பற்றில் 821 பேரும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர் உறவினர் நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
இங்கு வவுனிக்குளம், முத்தையன்கட்டுக்குளம், உடையார்கட்டுக்குளம் உள்ளிட்ட 18 குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
நீர்மட்டம் அதிகரித்து வருவதால் குளங்கள் உடைப்பெடுப்பதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள புலுத்தியாறுகுளம் எந்த நேரத்திலும் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது
இரணைமடுக்குளத்தின் 15 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் 4042 குடும்பங்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று வரை வெள்ளம் மற்றும் மழை சார்ந்த அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் வரை இறந்துள்ளனர்.
தரைவழிப் போக்குவரத்துகள் துண்டிப்பு
வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளுக்கான தரைவழிப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை- ஹொரவப்பொத்தானை வீதி, மட்டக்களப்பு – பொலன்னறுவ வீதி, யாழ் - கண்டி வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் அனுராதபுரத்துக்கு அப்பால் வடபகுதிக்கான வாகனப் போக்குவரத்தும், திருகோணமலைக்கான வாகனப் போக்குவரத்து ஹொரவப்பொத்தானைக்கு அப்பாலும், மன்னம்பிட்டிக்கு அப்பால் மட்டக்களப்புக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுர ,மட்டக்களப்பு, பொலன்னறுவ, அம்பாறை. வவுனியா, திருகோணமலை, மாவட்டங்களில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதனால் குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்து வருகிறது.
உடைப்பெடுக்கும் நிலையில் 50 குளங்கள்
சிறிலங்காவில் தொடர்ந்து கொட்டி வரும் மழையினால் ஆறு சிறிய குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
மேலும் 50 குளங்கள் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளதாக விவசாய சேவைகள் பணிப்பாளர் ரவீந்திர ஹேவவிதாரண தெரிவித்தார்.
கடந்த மாதம் தொடக்கத்தில் கொட்டிய மழையினால் 408 சிறிய குளங்களும், 308 அணைக்கட்டுகளும், 760 நீர்ப்பாசன வாய்க்கால்களும் சேதமடைந்தன.
இப்போது பெய்து வரும் மழையில் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றும், திருகோணமலை மாவட்டத்தில் மூன்றுமாக மொத்தம் ஆறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
50 குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து உடைப்பெடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் இந்தக் குளங்கள் உடைப்பெடுக்கும். இங்கு நிலைமை மோசமாகவே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலட்சக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில்
அம்பாறை மாவட்டத்தில் 125,000 ஏக்கரிலும், அனுராதபுர மாவட்டத்தில் 50,000 ஏக்கரிலும், மட்டக்களப்பு மாவட்ட்த்தில் 28,000 ஏக்கரிலும், பொலன்னறுவ மாவட்டத்தில் 16,000 ஏக்கரிலும், வவுனியா மாவட்டத்தில் 10,000 ஏக்கரிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 700 ஏக்கரிலும், திருகோணமலை மாவட்டத்தில் 50,000 ஏக்கரிலும் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
கடந்து முறை வெள்ளத்தில் பாதிக்கப்படாமல் தப்பிய நெல்வயல்களும் கூட இம்முறை அழிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 200,000 ஏக்கர் நெல்வயல்கள் நீரில் மூழ்கி அழிந்து போயின.
மோசமான காலநிலை 3 நாட்கள் தொடரும்
சிறிலங்காவில் தற்போது நிலவும் சீரற்ற-மோசமான காலநிலை அடுத்த மூன்று நான்கு நாட்களுக்குத் தொடரும் என்று வளிமண்டலத் திணைக்கள அதிகாரி சமிந்த டி சில்வா கூறியுள்ளார்.
குறிப்பாக கிழக்கு, வடக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் தொடர்ந்து மழைபெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்றுக்காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பொலன்னறுவையில் அதிகபட்சமாக 232.4 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
திருகோணமலையில் 156.2மி.மீ வவுனியாவில் 133.2மி.மீ, மட்டக்களப்பில் 84.78 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
திருமலையில் மீட்புப்படகு கவிழ்ந்ததில் ஐவர் பலி?
திருகோணமலை சிற்றாறில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டு வந்த படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் மரணமாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
சிற்றாறுப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களையும் படையினரையும் கடற்படையினரின் படகு ஒன்று இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு ஏற்றி வரும் வழியில்- மகாவலி கங்கையில் கவிழ்ந்தது.
மூன்று கடற்படையினர், நான்கு இராணுவத்தினர் உள்ளிட்ட 16 பேருடன் படகு வந்து கொண்டிருந்த போது சிற்றாறு பாலம் அருகே இயந்திரம் பழுதாகியது.
இதையடுத்து ஆற்றில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் சிக்கி படகு கவிழ்ந்த்து.
அதில் இருந்த 11பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
ஒரு கடற்படைச் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் இதுவரை மீட்கப்படவில்லை.
இவர்களில் இருவர் ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்களை மீட்பதற்கான தேடுதல் பணிகளை மோசமாக காலநிலை காரணமாக நேற்று மேற்கொள்ள முடியாதிருந்ததாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
Comments